16. பணித்திறம் வேட்டல்
பணித்திறம் வேட்டல் என்பது முருகனது
திருவருள் ஞானத்தால் வீடு பேறு அடைய விரும்புவோர்
செய்தற்குரிய திருப்பணி வகைகளை எடுத்துரைத்து அவற்றைச்
செய்தற்கு எழும் விருப்பத்தைத் தெரிவிப்பது. மனம்
மொழி மெய்களால் முறையே மனத்தால் நினைப்பதும்,
வாயால் புகழ்வதும் பாடுவதும், மெய்யால் அழகு காண்பதும்,
தொண்டருடன் கூடுவது முதலியன செய்வதும்
பணித்திறங்களாகும். இவற்றைப் பாட்டுத் தோறும் வடலூர்
வள்ளலார் உள்ளன்போடு எடுத்துரைக்கின்றார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
231. நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலையதனை
நண்ணி யென்றன்
கண்ணேநீ யமர்ந்தவெழில் கண்குளிரக் காணேனோ
கண்டு வாரி
உண்ணேனோ வானந்தக் கண்ணீர்கொண் டாடியுனக்
குகப்பாத் தொண்டு
பண்ணேனோ நின்புகழைப் பாடேனோ வாயாரப்
பாவி யேனே.
உரை: எனக்குக் கண் போல்பவனே, நின்னுடைய திருத்தணிகை மலையை அடைய வேண்டும்; அடைந்து அங்கே நீ வீற்றிருக்கும் அழகைக் கண் குளிரக் காண வேண்டும்; கண்டு உன் காட்சியிற் சுரக்கும் இன்பத்தை அள்ளிப் பருக வேண்டும்; பருகும் யான் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து கொண்டு உனக்கு மகிழ்ச்சி யுண்டாகுமாறு நினக்குரிய தொண்டுகளைச் செய்து நினது புகழை யான் வாயாரப் பாட வேண்டும்; அருள் செய்க, எ. று.
உலகியற் பொருள்களைக் காட்டி மகிழ்விக்கும் மக்கள், முகத்துக் கண்போல, அகக் கண்ணாய் நின்று அவர்கட்கு ஞானப் பொருள்களைக் காட்டுபவனாதலை நினைந்துரைத்தலால், “என்றன் கண்ணே” என மொழிகின்றார். வானுற வோங்கி நின்று தன்னைக் காண்பார்க்குத் தன் முடிமேல் எழுந்தருளும் முருகப் பெருமானைக் காட்டிக் கொண்டிருக்கும் சிறப்புப் பற்றித் “திருத்தணிகை மலையதனை” மகிழ்வினொடும் நண்ணேனோ” என்று கூறுகிறார். இடத்தைக் காண்பார்க்கு இடத்தில் உள்ள பொருள்களும் நிகழ்ச்சிகளும் நினைவிற் பதிந்து பின்பு காணுங்கால் மீளவும் மனக் கண்ணில் தோன்றி மகிழ்விக்கும் இயல்பு பற்றி, இங்ஙனம் கூறுகிறார். எனினும் பொருந்தும். நண்ணேன் என்ற எதிர்மறை வினையொடு எதிர்மறை ஓகாரம் சேர்ந்து நண்ணல் வேண்டுமெனும் உடன்பாட்டுப் பொருள் பயக்கிறது. இப்பத்தில் வருமிடங்களில் இதனையே கூறிக் கொள்க. தணிகை மலை மேல் கோயில் கொண்டிருத்தலால். அங்கே முருகப் பெருமான் எழுந்தருளும் இன்பக் காட்சி பெறுவது திண்ணமாதலால், “நண்ணி நீ அமர்ந்த எழில் கண் குளிரக் காணேனோ” என வேட்கை கொள்கின்றார். அழகுத் தெய்வமாதலால் முருகன் வீற்றிருந்தருளும் காட்சியும் அழகியதாகையால், “நீ அமர்ந்த எழில்” எனவும், அதனைக் காணும் கண் உலகியற் பொருள்களின் அழகினைக் கண்ட வெம்மை தீர்ந்து அருளொளி யுற்றுக் குளிர்ச்சி எய்துவது விளங்கக், “கண் குளிரக் காணேனோ” எனவும் சிறப்பிக்கின்றார். அழகுடைய பொருள்களைக் காணும் போது காண்பார் உள்ளத்தில் இன்பம் ஊறிப் பெருகுவதுண்மையின், முருகனது அழகில் ஊறும் இன்பத் தேன் பெரிதாதலால், “கண்டு வாரி உண்ணேனோ” என்று உரைக்கின்றார். அழகில் ஊறும் இன்பத்தை நுகர்பவர், அழகைப் பருகுவதாக உரைக்கும் மரபு பற்றி, இவ்வாறு இயம்புகின்றா ரென அறிக. “உண்டற்குரிய அல்லாப் பொருளை உண்டன போலக் கூறலும் மரபு” என்பது தொல்காப்பியம். இன்பக் கிளர்ச்சியில் உவகை பொங்கிக் கண்ணீராய் ஒழுகுவ தியல்பாதலால், “ஆனந்தக் கண்ணீர் கொண்டாடி” எனவும், தலைவன் மகிழத் தொண்டு புரிதல் மெய்யன்புடையார் செயலாதல் பற்றி, “உனக்கு உகப்பாத் தொண்டு பண்ணேனோ” எனவும், புகழ் பாடுதல் ஒருவகை வழிபாடு மாதல் கண்டு கூறலின், “நின் புகழை வாயாரப் பாடேனோ” எனவும் உரைக்கின்றார். இவற்றை இனிது செய்யாவாறு பாவத்தால் தடை யுண்டிருக்கிறேன் என்பாராய்ப், “பாவியேன்” என மொழிகின்றார்.
இதனால் தணிகைமலை நண்ணல், தணிகை முருகன் அமர்ந்திருக்கும் எழில் காண்டல் முதலியன செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியவாறாம். (1)
|