பக்கம் எண் :

232.

    பாவியேன் படுந்துயருக் கிரங்கியருள்
        தணிகையிலென் பால்வா என்று
    கூவிநீ யாட்கொளவோர் கனவேனும்
        காணேனோ குணப்பொற் குன்றே
    ஆவியே யறிவேயென் னன்பேயென்
        னரசேநின் அடியைச் சற்றும்
    சேவியேன் எனினுமெனைக் கைவிடே
        லன்பர்பழி செப்பு வாரே.

உரை:

     நற்குணங்களாலாகிய பொன்னிறக் குன்று போல்பவனே, எனக்கு உயிரே, எனது அறிவே, என்னுடைய அன்பே, எனக்கு அரசனே, பாவியாகிய யான் எய்தி வருந்தும் துன்பத்துக்கு மனமிரங்கி அருள் நிலையமாகிய திருத்தணிகைக்கண் எம்மிடம் வருக என்று சொல்லி என்னைக் கூவி யழைத்து ஆட்கொள்ளுவதாக ஒரு கனவேனும் யான் காண வேண்டும்; நின்னுடைய திருவடியைக் கண்டு வழி பட்டிலேன் எனினும் என்னைக் கைவிட வேண்டா; காணின் அன்புடையார் பலரும் உன்மேற் பழி சொல்லுவர், எ. று.

     பொன்வண்ண மேனியனாதலால் முருகனைப் “பொற்குன்றே” என்று புகல்கின்றார். குணமே நிறைந்தவர்களைக் குணக்குன்று என்பது மரபு. “குணமென்னும் குன்றேறி நின்றார்” (குறள்) எனத் திருவள்ளுவர் உரைப்பது காண்க. உயிர்க்குயிராய் நிற்பதனால், “ஆவியே” எனவும் அறிவினுள் ‘அருளால் மன்னுதல்பற்றி, “அறிவே” எனவும் கூறுகின்றார். “உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம், நிரைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்” (வீழிமிழலை) என்று ஞானசம்பந்தர் கூறுவர்; “அகரவுயிர் போல் அறிவாகி யெங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து” (திருவருட்) என உமாபதி சிவனார் உரைக்கின்றார். அன்பு சிவமெனப்படுதலால் அதன் இளமை வடிவமாகிய முருகப்பெருமானை, “என் அன்பே” என்கின்றார். “என்னுடை யன்பே” (கோயில்) என மணிவாசகர் மொழிவது காண்க. பன்னாள் சென்னையிலே இருந்து வளர்ந்தும் தணிகை சென்று முருகனை வழிபடா தொழிந்தமை நினைக்கின்றாராதலின், “நின்னடியைச் சற்றும் சேவியேன்” என்றும், எனினும் யான் அன்புடையனாதலால் என்னை அருளாதொழியின் உன்பால் மெய்யன்புடைய அடியவர் உன்னைப் பழிப்பரென்பாராய்ச் “சேவியே னெனினும் எனைக் கைவிடில் அன்பர் பழி செப்புவார்” என்றும் இசைக்கின்றார். செய்த பாவத்தின் பயனாய் யான் பெருந் துன்பம் உறுவேனாக, அதனைக் கண்டு அருளாளானாதலால் நீ திருவுளம் இரங்கி ‘யாம் அருள் வழங்குமிடம் திருத்தணிகை; அங்கே என் திருமுன் வருக’ எனச் சொல்லிக் கூவியழைத்து அடிமை கொள்வதாக நனவிலாகா தெனினும் கனவிலேனும் நிகழச் செய்தல் வேண்டும் என்பாராய்ப் “பாவியேன் படுந்துயருக் கிரங்கி யருள் தணிகையில் என்பால் வா என்று கூவி நீ ஆட்கொளவோர் கனவேனும் காணேனோ” என்று வேண்டுகின்றார். துயர்படுவதைக் கூறுதலால் அதற்கேதுவாகிய பாவமுண்மை புலப்படப் “பாவியேன்” எனவும், பாவியைக் காணுமிடத்து உள்ளத்தில் வெறுப்புத் தோன்றுமாயினும், அது இரக்கப் பண்பால் மாறுதலின், “துயருக்கு இரங்கி” எனவும். செருவெம்மை தணியுமிடமாதலால் தணிகையென்று பெயர் பெற்ற தணிகைப் பதி அருள் வழங்குதற் கேற்ற இடமாதல் தோன்ற, “அருள் தணிகை” எனவும் விளம்புகிறார். கூவி யாட்கொள்வது இறைவற்கு இயல்பாதலால், “கூவி யாட்கொள” என்றும் நனவில் ஊனக் கண்களுக்கு அடங்காத ஒண்சுடருடைமையால், “கனவேனும் காணேனோ” என்றும் கூறுகின்றார். “கொள்ளுங் கில்லெனை அன்பரிற் கூய்ப்பணி” (சதகம்) என மாணிக்க வாசகர் கூறுவதும், “அண்ட மாரிருளூடு கடந் தும்பர் உண்டு போலும் ஓர் ஒண்சுடர்” எனத் திருநாவுக்கரசரும், “ஓவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி” (முருகு) என நக்கீர தேவரும் எடுத்துரைப்பதனால் அறியலாம்.

     இதனால் முருகப் பெருமானைக் கனவில் தோன்றித் தணிகைக்கு வருக என அழைத்தருள வேண்டுமாறு காணலாம்.

     (2)