159
159. மனத்தின் செயல், குரங்கு பேய் முதலியவற்றின் செயலாய் அல்லற்படுத்துவது, பற்றி அதனை
மனக்குரங் கென்றும், மனப்பேய் என்றும் பன்முறையும் சான்றோர் பழித்துரைப்பர். இது தன் செயல்
கெட்டு, உயிர் அறிவின்வழி நிற்குமாயின், எய்தும் நலங்கள் எண்ணிறந்தனவாகும். முன்னைப் பாட்டில்
மனத்தின் தன்னிச்சையான செயற் கொடுமையை விளக்கின வடலூர் வள்ளலார், அக்கொடுமை ஒழுயும் நாள்
வரின், அதனைவிட நலம் தரும் வேறில்லை என, முடிந்த முடிபாகச் சொல்லி முறையிடுகின்றார்.
2329. மட்டுண்ட கொன்றைச் சடையர
சேஅன்று வந்தியிட்ட
பிட்டுண்ட பிச்சைப் பெருந்தகை
யேகொடும் பெண்மயலால்
கட்டுண்ட நான்சுகப் பட்டுண்டு
வாழ்வன்இக் கன்மனமாம்
திட்டுண்ட பேய்த்தலை வெட்டுண்ட
நாளில்என் தீமையற்றே.
உரை: கொன்றை மாலையணிந்த சடையை யுடைய அரசே, மதுரையில் வந்தி என்பாள் இட்ட பிட்டாகிய பிச்சையினை யேற்றுண்ட பெருந்தகையே, பெண்மயக்கத்தால் கட்டுற்று வருந்துகிற நான், கல்போன்றதாய்ப் பலபடியும் வசையுற் றலைவதாகிய என் மனமாகிய பேய், தலைவெட்டுண்டு வீழும் நாள் என்றோ, அன்று, தீமையெல்லாம் ஒழிந்து சுகமெய்தி வாழ்வேன்; அவ்வாழ்வை அடியேனுக்கு அருள்க.
மட்டு - தேன். புதிது மலர்ந்த கொன்றைப் பூவாலாகிய மாலை என்பது விளங்க “மட்டுண்ட கொன்றை” என்று புகழ்கின்றார். வண்டினம் தேன் உண்ட கொன்றை யென்று பொருள் கூறலாகாது; அரும்பவிழ்ந்து மலரந்ததும் வண்டினம் மொய்யாததுமாகிய பூவே இஃதென்பர். “அரும்பற்றப்பட ஆய்மலர் கொண்டுநீர்,. சுரும்பற்றப்படத் தூவித் தொழுமினே” என்று அப்பரடிகள் அறிவுறுத்துவது ஈண்டு நினைவுகூரற் பாலது. மண்ணகத்தும் விண்ணகத்தும் வேந்தர் மணிமுடி சூடுவாராக, எல்லா வுலகிற்கும் அப்பால் விளங்கும் பேரரசாகிய சிவபெருமானுக்குக் கொன்றை கிடந்து மணம்விரியும் சடை என்றற்குக் “கொன்றைச் சடையரசே” என்று கூறுகின்றார். அன்று, மணிவாசகரை மன்னன் வருந்திய நாளில், வையைநீர் பெருகி வந்தபொழுது, மதுரையில் வாழ்ந்த பிட்டு வாணிச்சி, வந்தி, பிட்டு அரிசிமாவாற் செய்யப்பட்டு வெந்தாறியபின் கையாற் பிட்டு உண்ணப்படும் தின்பண்டம். வேறு பொருளில்லாமையின் பிட்டையே அவள் கூலியாகத் தந்தாளாக, கூலிக் குரியனாகுமுன்பே வாங்கியுண்டமையின் “பிச்சை” என்று இசைக்கின்றார். பிச்சையேற் றுண்பது தகவன்றாயினும், வேலை செய்து கூலியாக ஏற்பது பெருந்தகைமை என்பது விளங்க, “பிச்சைப் பெருந்தகையே” எனப் பாராட்டுகின்றார். ஆணும் பெண்ணுமாய்க் கூடி அன்புற்று வாழ்வது அறமேயாயினும், 'பெண்ணின்ப மொன்றே வாழ்வின் பெரும்பயன்' என மயங்கிப் பெண்ணேவல் புரிந்தொழுகுவது அறன்கடை யாதலால், “கொடும் பெண்மயல்“ என்றும், அதற்கும் இரையாயினார் அறம் செயலும் பொருளீட்டலும் இன்பநுகர்ச்சியும் பெறற்குரிய உரிமையும் வினைமையும் இன்றிக் கெடுதலால் “கட்டுண்ட நான்” என்றும், பெண்ணேவல் செய் தொழுகும் செயலை இகழ்கின்றார். எத்துணைத் தெருட்டினும் தெருளா வகையில் மனம் திணிந்திருக்கும் தன்மை விளங்கக் “கன்மனம்” என்றும், அவாவே பெருகி அமைதிபெறாது அலையும் தன்மை நோக்கிப் “பேய்” என்றும், பேயை வைவதன்றி வாழ்த்துவார் இல்லாமை தோன்றி, “திட்டுண்ட பேய்” என்றும் தெரிவிக்கின்றார். திட்டு - வசை. தலை வெட்டுண்ணல் - கெட்டு வீழ்ந்தொழிதல்; வெறுப்பு மிகுதி புலப்பட இங்ஙனம் மொழிகின்றார்.
நான் தீமையற்றுச் சுகப்பட்டு இனிது உண்டு வாழ்வன் என முடிக்க. இவ்வாழ்வு தமக்கு எய்த அருளுமாறு இறைவனை வேண்டுவது இப் பாட்டின் பயன். (159)
|