233. வாரேனோ திருத்தணிகை வழிநோக்கி
வந்தென்கண் மணியே நின்று
பாரேனோ நின்னழகைப் பார்த்துலக
வாழ்க்கைதனிற் படுமிச் சோபம்
தீரேனோ நின்னடியைச் சேவித்தா
னந்தவெள்ளம் திளைத்தா டேனோ
சாரேனோ நின்னடியர் சமுகமதைச்
சார்ந்தவர்தாள் தலைக்கொள் ளேனோ.
உரை: திருத்தணிகை செல்லும் வழியைப் பார்த்து வருதல் வேண்டும்; தணிகை வந்து நின்று உனது அழகைப் பார்க்க வேண்டும்; பார்ப்பதனால் உலக வாழ்வில் நான் எய்தும் வருத்தம் தீர்தல் வேண்டும்; பின்பு உன்னுடைய திருவடியைத் தரிசிக்க உண்டாகும் இன்பப் பெருக்கில் மூழ்கித் திளைத்து ஆட வேண்டும்; நின்னுடைய அடியார் திருமுன் அடைய வேண்டும்; அடைந்து அவர்களின் திருவடியாகிய மலரைத் தலையிற் சூடிக் கொள்ள வேண்டும், எ. று.
திருத்தணிகைக்குச் செல்லும் வழிகள் பலவாதலின் அவற்றுள் செம்மை வழி தேர்ந்து செல்வது முறையாகலின், “திருத்தணிகை வழி நோக்கி வாரேனோ” என்றும், தணிகை வந்ததும் முதற்கண் செயற்பாலது, எல்லைக்கண் நின்று கோயில் இருக்கும் திசை நோக்கிப் பார்த்து மனம் மலர்ந்து அன்பு கொண்டு பார்த்தற்கு அவா எழுதலால், “வந்து நின்று பாரேனோ” என்றும் கூறுகின்றார். கண்ணுக்கு ஒளி தரும் மணி போலச் சிந்தைக்கு ஞான மொளிரும் மணியாய் முருகன் திகழ்வது புலப்பட, “என் கண்மணியே” என்று ஆர்வத்தோடு புகல்கின்றார். அழகே திருமேனியாய் உள்ளவனாதலால் உள்ளம் எய்தும் குளிர்ச்சியால் வாழ்க்கையில் வந்து நின்று வருத்தும் துன்ப வெப்பம் தொலைவது கண்டு, “நின்னழைகைப் பார்த்து உலக வாழ்க்கை தனில் படும் இச்சோபம் தீரேனோ” எனவும், முருகப் பெருமான் திருவடிகளைத் தரிசித்து வணங்கி வழிபடும் போது உள்ளத்தில் இன்பம் பெருகி மகிழ்ச்சி மிகுந்து பாடி ஆடுவது மெய்யன்பர் செயலாதல் பற்றி, “நின் அடியைச் சேவித்து ஆனந்த வெள்ளம் திளைத்து ஆடேனோ” எனவும் உரைக்கின்றார். இறைவனைக் கண்டு வழிபட்ட விடத்து உளதாகிய பேரின்பம் நெஞ்சினின்றும் நீங்காமைப் பொருட்டு அடியார் கூட்டத்தைச் சேர்ந்திருத்தல் வேண்டும். அதனால் இறைவன் திருவடியின் கண் சிந்தை ஒன்றிப் பிற அஞ்ஞான உறவுகளால் மாறாதாதலால், “நின்னடியர் சமுகத்தைச் சார்ந்து அவர்தாள் தலைக் கொள்ளேனோ” என்று விளம்புகின்றார்.
இதனால் திருத்தணிகை அடைந்து முருகன் அழகைப் பார்த்துத் திருவடியை வழிபட்டு இன்ப முறுவதோடு அவனுடைய அடியார் கூட்டத்தைச் சேர்தல் வேண்டுமென எழுந்த விருப்பத்தைத் தெரிவித்தவாறாம். (3)
|