பக்கம் எண் :

164

     164. இறைவன் படைப்பையும் அவற்றை ஒழுங்கு பிறழாமல் வளர்க்கும் மாண்பையும் வடலூர் வள்ளல் உள்ளத்தே எண்ணுகின்றார். இறைவன் திருமேனியை மனக்கண்ணிற் காண்கின்றார். அவர் மேனி மேல் பாம்பு கிடந்து வளர்கிறது; கையில் ஒரு மான் வளர்கிறது. இவ்வாறே அவர் மேனியைத் தீண்டாத வானமும் மண்ணும் யாவும் இனிது வளர்கின்றன. அவற்றின் செயலையும் தன்னிலைமையையும் எண்ணுகின்ற வள்ளற்பெருமான், சிவபெருமானது உண்மைத் தகைமையை உள்ளவாறு உணரும் திறமின்றி இருப்பதை எண்ணுகின்றார். மேற்கூறிய இவையனைத்தையும் நன்கு வைத்து வளர்த்தருளுகின்ற நீ, என்னை மாத்திரம் இவ்வாறு தகைமையறியும் தகவில்லாதவனாக வளர்ப்பது நேரிதாகத் தோன்றவில்லை; நீயோ எவற்றையும் விதிமுறை தவறாமல் வளர்ப்பவன் என முறையிடுகின்றார்.

 

2334.

     வான்வளர்த் தாய்இந்த மண்வளர்த்
          தாய்எங்கும் மன்னுயிர்கள்
     தான்வளர்த் தாய்நின் தகைஅறி
          யாஎன் றனைஅரசே
     ஏன்வளர்த் தாய்கொடும் பாம்பையெல்
          லாந்தனை னிலைவளர்த்தாய்
     மான்வளர்த் தாய்கரத் தார்நினைப்
          போல வளர்ப்பவரே.

உரை:

     கொடிய பாம்புகளை யெல்லாம் மேனியில் தாங்கியும் மானைக் கையில் ஏந்தியும் வளர்த்த பெருமானே! வானையும் மண்ணையும் படைத்து நிலைபிறழாமல் இருக்கும் வண்ணம் வளர்த்திருக்கின்றாய்; மன்னும் உயிர்களை அவற்றிற்குரிய உடல் தந்து வளரச் செய்துள்ளாய்; வளர்ப்பவருள் உனக்கு நிகராக ஒழுங்காக வளர்ப்பவர் ஒருவரும் இல்லை; அங்ஙனம் இருக்க, உனது பெருந்தகையை அறியாத என்னை ஏன் வளர்த்தனை? அருளிச் செய்க எ.று.

     சிவபெருமான் மேனியெங்கும் நஞ்சுடைய பாம்புகள் கிடந்து அவருக்கோ பிறருக்கோ தீங்கு செய்யாமல் வளர்கின்றமை வியந்து கூறுதலால், “கொடும்பாம்பை யெல்லாம் தன்னிலையில் வளர்த்தாய்” என உரைக்கின்றார். தாருகவனத்து முனிவர் விடுத்த மான் பெருமுழக்கம் செய்து, ஏனை உயிரெல்லாம் நடுங்க வந்ததாக அதன் கால்களைப் பற்றிக் கையிலேந்திக் கொண்டான் சிவபெருமான் என்பது புராண வரலாறு. பின்னர் அதுவும் முழங்குதலின்றி ஒடுங்கியது முனிவரது வேள்வியின் ஆற்றலின்மையையும் சிவபிரானது வரம்பிலாற்றலையும் காட்டிக் கொண்டிருக்கிறது. கைக்குள் அடங்கிய மானும் அந்நிலையில் கெட்டொழியாது வாழச்செய்த திருவருள் நலத்தைப் புலப்படுத்தற்க, “மான் வளர்த்தாய் கரத்து” என உரைகின்றார். சிவபெருமான் உலகருள் முதல்வனாதலால் உலகையும் உயிர்களையும் முறையே படைத்தளிக்கும் திறத்தை “வான் வளர்த்தாய் இந்த மண் வளர்த்தாய், எங்கும் மன் உயிர்கள் தான் வளர்த்தாய்” என்று விளம்புகின்றார். மன்னுயிர் - மன்னும் உயிர்கள். வானமும் மண்ணும் மாயையென்ற மூலப்பொருள் கொண்டு படைக்கப்பட்டவை. அவற்றிற்குத் தோற்றமும் ஒடுக்கமும் உண்டு; அதனால் “வான் வளர்த்தாய் மண் வளர்த்தாய்” என்று உரைகின்றார். உயிர்கள் படைக்கப்படுவதில்லை; அதனால் அவை அழிவதும் இல்லை; அவை உடம்பொடு கூடுவது பிறப்பு; உடம் பினின்று நீங்குவது இறப்பு. உடம்புக்குத்தான் தோற்றமும் கேடும் உண்டு. உயிர்க்கு அழிவில்லை என்பது தமிழ்நூற் கொள்கை. அவ்வுண்மை தோன்றவே “எங்கும் மன்னுயிர்கள்” என மொழிகின்றார். மன்னுயிர் - மன்னுகின்ற உயிர்; வினைத்தொகை.

     உயிர்கள் யாவும் ஒரு திறமானவல்ல; ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பியல்பு கொண்டுள்ளது. அதுபற்றியே உயிர்கள் எண்ணிறந்த பல என அறிவு நூல்கள் கூறுகின்றன. ஒவ்வொன்றிலும் ஒளிக்குள் இருள் போல மலவிருள் கலந்துள்ளது. அவ்விருள் நீங்கி இன்பம் பெறுதற்காகவே இறைவன் உடம்பும் உலகும் உலகவாழ்வும் தந்துள்ளான். உலகவாழ்வு கணந்தோறும் உயிர்க்கு விளக்கம் தந்தவண்ணம் இருக்கிறது. இதனால் உயிர்கள் அறிவுநெறியில் வளர்கின்றன. உலக வாழ்வு சென்ற காலத்தினும், இன்று வளமும் வாய்ப்பும் பெற்றிருப்பதற்கு இவ்வளர்ச்சி காரணமாகும். இவ் வளர்ச்சிக்கென்றே உலக வாழ்வு படைத்தளிக்கப் பெற்றிருப்பது பற்றியே “ஆர் நினைப்போல வளர்ப்பவரே” என வள்ளற் பெருமான் உரைக்கின்றார்.

     சென்ற ஐம்பது ஆண்டுகட்குமுன் வாழ்ந்த இளஞ்சிறுவனுடைய அறிவினும், அவ் வயதேயுடைய இந்நாளைய சிறுவன் அறிவு மிக்கவனாக இருப்பது ஒன்றே, உயிர்வளர்ச்சி அறிவுத்துறையிற் பெருகியிருப்பது அறிவிக்கும். இங்ஙனம் வளரும் உயிர்கள் அறிவின் மிக்கவராக இருப்ப, அடியேனது அறிவு நின் தகைமை நன்கு அறியாமையில் தோய்ந்திருப்பது முறையன்று; யானும் பிறந்து பல்லாண்டுகளை வளர்ச்சியில் கழித்துள்ளேன்; என்னை ஏனையுயிர்களைப்போல அறிவுநெறியில் அறிவன அறிந்து வளரச் செய்துள்ளனை; ஆயினும், நினது பரமாந்தன்மையை அறிந்துகொள்ளாதவாறு என்னை வளர்த்தது நன்றாகத் தோன்றவில்லை; காரணமும் புலப்படவில்லை. உயிர்களின் தருதிப்பாடறிந்து வளர்ப்பதில் நிகரற்ற மேலோனாகிய நீ, என்னைத் தகுதியறியாதவ னாக்கினையோ என முறையிடுவாராய், “நின் தகை அறியா என்றனை, ஏன் வளர்த்தாய்” என முறையிடுகின்றார். 'நன்னடை நல்குதல் அரசுக்குக்கடன்' என்பது பற்றி “அரசே” எனக் கேட்கின்றார்.

     இதனால், மண்ணும் விண்ணும் மன்னுயிரும் படைத்து வளர்க்கும் முதல்வன் உயிர்கட்கு நல்லறிவு தந்து வாழ்விப்பது முறையென வேண்டுவது அறியலாம்.

     (164)