பக்கம் எண் :

165

       165. சிவபரம்பொருளின் அருளும் ஞானமும் ஞானப்பயனாகிய வீடுபேறும் அரியனவாதலால், பெறுதற்கண் மக்களும் தேவரும் அரும்பாடுபடத்தான் வேண்டுகிறது. உலகில் பொன்னை விரும்பாதவர் இல்லை; கிடைத்தால் பெறற்கரியதென்று பேணாதாரும் இல்லை. இத்தகைய பொன்செடி கொடிகளிற் பூக்களைப்போல, மண்ணில் உப்புப்போலப் பூத்துக் கிடக்கலாமன்றோ? பன்னூறு அடிகள் ஆழம் நிலத்தை அகழ்ந்து எடுக்கிறார்கள். எடுக்கிறபோதும் அது தூய நிலையில் கிடைப்பதில்லை. பலவேறு பொருள்களோடு கலந்து ஒருமுறைக்குப் பன்முறை புடமிட்டுக் காய்ச்சி னாலன்றித் தூய்மையும் பொன்மைத்தன்மையும் எய்துவதில்லை. இத்துணை அரும்பாடுபட வேண்டியிருந்தும், ஒருவரும் அதனை வேண்டா என வெறுப்பதில்லை; அதனைப் பெறும் முயற்சியையும் கைவிடுவதில்லை. அவ்வாறே திருவருட்பேறு குறித்துத் தேவர் முதலாயினார் பட்ட அரும்பாடுகளைப் புராணங்களும் இதிகாசங்களும் கூறுவது கேட்டு அஞ்சுதலோ அவலிப்பதோ கூடாது என நெஞ்சிற்கு அறிவுறுத்தினாலும், தேற்றுதற்பொருட்டு அருளாளர் பாடிய பாட்டுக்களைக் கூறித் தேற்றினாலும், நெஞ்சு வேறொன்றை நினைந்துகொண்டு அஞ்சி வெய்துயிர்கின்றது. அருட்செல்வருடைய திருப்பாட்டுக்களின் நலங்களை வியக்கின்றது. அப்பாட்டுகளே அப்பெருமக்கட்கு இம்மையிலும் பின்னரும் பெறவேண்டிய பொருளும் ஞானமும் எளிதில் எய்துவிக்கின்றன. திருஞானசம்பந்தர் திருவாவடுதுறையில் ஆயிரம்பொன் பெற்றார். திருநாவுக்கரசர் கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலில் மிதந்தார்; சுந்தரர் வேண்டும்போதெல்லாம் வேண்டியவாறே இனிய பாட்டுக்களே பாடிப் பொன்பெற்றார். பெற்றபொன்னை ஆற்றில் கொட்டிவிட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தார்; மணிவாசகர், திருப்பெருந்துறையில் ஞானம் பெற்றார். இவர்கள் பாடியுள்ளதேவாரத் திருமுறைத் திருப்பாட்டுக்களையும் அவற்றின் நலங்களையும் நினைந்து, இவ்வாறு பாடிப் பயன் கொள்வது ஆகுவதன்று; ஞானசம்பந்தர் முதலிய அருட்செல்வர் பாட்டுக்களைப் போலப் பாடுவது முடியாத ஒன்று என எண்ணி நெஞ்சம் மிகவும் அஞ்சி ஓடுகிறது. அதன் ஓட்டத்தை நோக்கினால், இல்வாழ்க்கையின் இன்னல் மிகுதிகண்டு அஞ்சித் துறவுபூண்டு நீங்கின மெய்த்தவமுடைய மேலோர், மீளத் தம் இல்லாளைக் கண்டவிடத்து அஞ்சி நடுங்கிக் காற்றினும் கடுகிச்சென்று நீங்குவது போல்கின்றது. நெஞ்சின் உள்ளே நின்று அதனை வெருண்டோடச் செய்யும் அச்சமோ கல்லெறியுண்ட காக்கை போல்கின்றது. இவ்வருட் பாட்டுக்களைப் படித்து, அவற்றைப் பின்பற்றிப் பாடினால் எறிவகை ஒக்கின்றது. இதற்கு என் செய்வது என வள்ளற் பெருமான் உள்ளம் குழைந்து இறைவன்பால் முறையிடுகின்றார்.

2335.

     அற்கண்டம் ஓங்கும் அரசேநின்
          றன்அடி யார்மதுரச்
     சொற்கண்ட போதும்என் புற்கண்ட
          நெஞ்சம் துணிந்துநில்லா
     திற்கண்ட மெய்த்தவர் போலொடு
          கின்ற தெறிந்ததுதீங்
     கற்கண் டெனினும்அக் கற்கண்ட
          காக்கைநிற் காதென்பரே.

உரை:

     இருண்ட கண்டத்தால் ஏற்றம் மிகும் அருளரசே, நின் அடியாரது மதுரச்சொற்களாலான பாட்டுக்களைக் கண்டபோது, என், புல்லின் தும்புபோன்ற நெஞ்சம், அஞ்சி முற்றத்துறந்த மெய்த்தவர் இல்லவள் நேர்படக் கண்டதும் நீங்கியோடுவது போல் ஓடுகிறது; கல்லெறியுண்ட காக்கை கற்கண்டை எறியினும் அஞ்சி நில்லாது நீங்குமாறுபோல நீங்குகிறது. இதற்கு நீயே அருளல் வேண்டும் எ.று.

     நஞ்சுண்டதால் கறுத்த கண்டம் ஆதலால் “அல் கண்டம் ஓங்கும் அரசே” என வுரைக்கின்றார். பொன்போன்ற திருமேனியில் கழுத்தின் கரியநிறம் அழகும் ஒளியும் பெற்று அப் பெருமானது அருள் நலத்தை உலகுகள் அனைத்து அறிய விளங்குதல் தோன்ற “ஓங்கும் அரசே” எனப் புகழ்ந்து பாராட்டுகின்றார். திருஞானசம்பந்தர் முதலிய சிவஞானச் செல்வர்கள் சிவபரம்பொருளின் திருவடியையே பொருளாகப் பற்றிப் பாடிப் பரவினராதலால், அவர்களை “அடியார்” எனக் குறிக்கின்றார். திருமுறைத் திருப்பாட்டுக்களின் சொல்தோறும் அருட்செந்தேன் ஊறியொழுகுதல் பற்றி, “மதுரச் சொல்” எனக் கூறுகின்றார். சொல் என்றது, சொல்லாலாகிய பாட்டுக்களை. “மொழிக்கு மொழி தித்திக்கும் மூவர் சொல்லும் சொல்” எனத் தாயுமானார் புகழ்வது காண்க. அப் பாட்டுக்களைக் கண்டு படிக்கும்போதும் படிக்கக் கேட்கும்போதும் நின்று கேட்டு உருகி இன்புற வேண்டிய நெஞ்சம் அது செய்யாது வேறு பொருள்களை நினைந்தும் நாடியும் ஓடுவது கண்டு வருந்துகின்றாராதலால். வடலூர் வள்ளல் “என்புற் கண்ட நெஞ்சம் துணிந்து நில்லாது ஓடுகின்றது” என உரைக்கின்றார். புற்கண்டம் - காய்ந்த புல்லின் சிறு துண்டம்; அஃதாவது சிறு துரும்பு. காற்று அலைக்கும்போது துரும்பு அதன்கண் நிலைபேறின்றி அலைந்தோடுவது இங்கே குறிக்கப்படுகிறது. கலங்கிய நீர் தெளிந்தபோது “துணி நீர்” எனப்படுவது சங்கச் சான்றோர் பாட்டுக்களில் பெருக வழங்கும். தரையில் நிலைத்தது போலக் கிடக்கும் சிறு துரும்பு மென்காற்று வீசினும் நில்லாது திடீரென்று பறந்து நீங்குவது கண்கூடாகக் காண்பது. அத் துரும்புபோல் ஓடுதல்பற்றிப் “புற்கண்ட நெஞ்சம் துணிந்து நில்லாது” என்று சொல்லுகிறார். துரும்பு நீங்குவதாகிய செயலை விளக்குதற்கு மெய்த்தவர் இல்லவரை (மனையவரை)க் கண்ட மாத்திரையில், ஒரு பற்றுமின்றி விரைந்து விலகி நீங்குவதை எடுத்துக்காட்டி, “இல் கண்ட மெய்த்தவர் போல் ஓடுகின்றது” என இசைக்கின்றார். சிறு துரும்புதான் இருந்த இடத்தினின்றும் மென்காற்று வீசினும் நில்லாது பெய்ர்ந்தோடுவதுபோல, இல்லம் துறந்து மெய்ந்நெறி பற்றித் தவம் செய்யும் மேலோர் மீள அவ் வில்லவரைக் கண்டவிடத்துப் பண்டைப் பற்றுத் தொடருமென்று அஞ்சி நீங்குவர். “பொருளே உவமம் செய்தனர்” என்பதற் கொப்ப மெய்த்தவரை உவமம் செய்கின்றார். மனையவளைத் துறந்து செய்வது தவம் என்ற கொள்கை பழந்தமிழ் நாட்டில் கிடையாது; வடவருள்ளும் அது நிலைத்த கொள்கையன்று என்பது பத்தினியோடு இருந்து தவம் புரிந்த முனிபுங்கவர்களின் வாழ்க்கை வரலாறுகளால் தெளிவாகிறது. வைதிகம் சைவம் என்ற நெறிகளோடு மாறுபட்டு எழுந்த சயினம் பவுத்தம் என்ற சமயங்களில், மெய்த்தவம் என்பது மக்களிரின் நீங்கி அவர் வாடையே படாத காடுமலைகளிலிருந்து புரிவது எனக் கருதி மேற்கொள்ளப்பட்டது. பிற்காலத்தே அவர்களைப் பார்த்து மடமும் குகையும் கண்டு தவம் புரிவது தமக்கும் ஒத்தது என வைதிகரும் சைவரும் கைக்கொண்டனர். தொல்காப்பியர், “அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன்” பயனே என உரைத்தது பழந்தமிழ் மரபு. வள்ளலார் தோன்றுதற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே பவுத்த சயினம் கலந்த துறவுக்கோலமும் ஒழுக்கமும் சைவவைதிகரிடையே புகுந்து நிலைபெற்றிருந்தமையின், “இல் கண்ட மெய்த்தவர் போல் ஓடுகின்றது” எனக் கூறுகின்றார். துறவோர் வெள்ளாடை போர்த்துக் கொள்வது தென்னாட்டுச் சயின பவுத்தங்களில் இல்லாமையால், அது தொன்று தொட்டுவரும் தமிழ் மரபாதல் உணரப்படும். ஓடுகிற நெஞ்சின் ஓட்டத்தை இவ்வாறு விளக்கின வள்ளற் பெருமான், அதன் அச்சத்தைக் கற்கண்டால் எறியப்பட்டாலும் அஞ்சியோடும் காக்கையின் அச்சம் காட்டி அறிவிக்கின்றார். கல்லுக்கு அஞ்சியோடும் இயல்பினதாகலின் காக்கையை “கற்கண்ட காக்கை” எனக் கூறுகிறார். காகமானது கோடி கூடிக்கரையினும் ஒரு கல்லுக்கு நில்லாது என்பர் தாயுமானார். நெஞ்சு அஞ்சினதற்குக் காரணம், தான் ஆயிரம் ஆயிரம் பாட்டுக்கள் பாடினும் பெருமக்கள் பாடிய ஒரு பாட்டுக்கு நேர்நில்லா என்றற்கு. இதனால் திருமுறைப் பாட்டுக்கட்கு முன் யாவர் எத்தனை யாயிரம் பாடினும் நிகராகா என வள்ளலார் உரைப்பது இதனாற் பயன்.

     (165)