பக்கம் எண் :

166

      166. நிற்றல் சிறிதுமின்றிப புலன்களின் மேற்சொல்லும் நெஞ்சினை நோக்குகின்றார். நில்லாவாறு அதனை ஈர்ப்பன புலன்களாயின், அவை அதனைச் செய்தற்குக் காரணம் யாதாகலாம் என நினைக்கின்றார். கண்ணும் புலனுமாகிய பார்வையும் ஒளியும் புறவுலகின் உருவப் பொருள்களின் காட்சியை நல்கி விருப்பு உண்டாக்குகின்றன; செவியும் ஓசையும் இன்னிசை நல்கி இன்பம் செய்கின்றன; இவ்வாறே ஏனைப் பொறிகளும் புலன்களும் நெஞ்சினை ஈர்த்து இன்புறுத்துகின்றன. ஓரொருகால் அவை துன்பமும் உறுவிக்கின்றன வெனினும் இன்பம் பெரிதாய் இருத்தலின் நெஞ்சு அவற்றிற்கு எளிதில் அடிமையாய் விடுகிறது. கண்ணுக்கும் செவிக்கும் இனிய காட்சியும் சொல்லும் இசையும் நல்கும் இயல்பினவாதலின், இந் நாளைய திரைப்படங்களைக் கண்டு மகிழச் செல்லும் மக்களின் தொகை நாளும் பெருகிய வண்ணம் இருக்கிறது, உணவுக்கும் உடைக்கும் வறுமை போந்து வருத்தினும், அதனைப் பொருளாகக் கருதாமல், புறப்பொருட் காட்சிக்கெனத் தமது வருவாயிற் பெரும்பகுதியைச் செலவிடும் எளிய மக்கள் நிலையை நோக்கும்போது, பொறிபுலன்களின் வன்மை மிகுதியும், அவற்றான் ஈர்ப்புண்டு அலையும் நெஞ்சின் மென்மையும் நன்கு தெளிவாகின்றன. இந்நிலை இளையரிடத்தே மட்டுமன்று, அறிவுத்துறையில் செல்லாது தொழில் பொருள்களில் உழன்று முதுமையுற்றோர் நெஞ்சமும், கண்ணும் செவியும் வலிகுன்றிய நிலையினும், ஆசைகுன்றாமல் அலைவது உலகியலில் காணப்படுகிறது. இளையர் மனவலியிலராக முதியவர் வலிமிக்கவரே யெனினும், புலன்வழி யுழன்று பயின்ற புன்மை அவரை அப் புலனின்பங்கனை நினைந்து வருந்தச் செய்கிறது. இவ்வாற்றால் நெஞ்சினைத் தம்பால் ஈர்த்து இன்புறுத்தும் ஐம்புலன்களைக் காண்கின்ற வள்ளற் பெருமான், நெஞ்சினை வரவேற்றுத் தழீஇக்கொண்டு ஆதரவு செய்வன பலவாக இருப்பதைத் தெரிந்துணர்கின்றார். உடலும் உலகும் நிகழ்த்தும் ஈர்ப்பின் வலியை நோக்க, உயிரறிவின் வலி குறைவாக இருப்பதால், நெஞ்சம் அடக்க அடங்காது எங்கும் பரந்து திரிகிறது; எண்ணிறந்தசுழற்சிக்கு உள்ளாகிறது. காரணம் புலனாகக் கண்ட வள்ளலார் நெஞ்சின் நிலைமையை வியந்து இறைவன்பால் முறையிடுகின்றார்.

2336.

     சொல்லுகின் றோர்க்கமு தம்போல்
          சுவைதரும் தொல்புகழோய்
     வெல்லுகின் றோரின்றிச் சும்மா
          அலையுமென் வேடநெஞ்சம்
     புல்லுகின் றோர்தமைக் கண்டால்என்
          னாங்கொல் புகல்வெறும்வாய்
     மெல்லுகின் றோர்க்கொரு நெல்லவல்
          வாய்க்கில் விடுவரன்றே.

உரை:

     சொல்ல இனிக்கும் அமுதம் போன்ற தொல்புகழையுடைய பெருமானே, வெல்வாரின்றி வெறிதே அலையும் என் வேடநெஞ்சம், தன்னைப் புல்லித் தழுவிக்கொள்வோரைக் கண்டால் என்னாகும்? வெறும் வாயை மென்று கொண்டிருப்போர்க்கு இனிய நெல்லவல் கிடைக்கின் விடாரன்றோ? அத்தகையதே எனது நெஞ்சம் எ.று.

     தேவரையன்றி மண்ணவருள் உண்டார் இல்லாதது அமுதம்; ஆயினும் அதனைச் சொல்லியின்புறுவது யாவருக்கும் இயல்பாதலால், நல்லதன் நலம் பாராட்டும்போதெல்லாம் அமுதத்தைச் சொல்லிச் சொல்லி மகிழ்வர். ஒருத்தியின் நலம் புகழும் ஒருவன் கூற்றில் வைத்து, “சிந்தாமணி தென்கடல் அமுதம் தில்லையான் அருளால், வந்தால் இகழப்படுமே” என மணிவாசகப் பெருமானும் சொல்லுவது காண்க. இதனால்தான் “சொல்லுகின்றோர்க்கு அமுதம்போல்” என வுரைக்கின்றார். வெறுஞ் சொல்லாகாமல் சொல்லிற் சுவை பயப்பதனால் பலரும் பலகாறும் சொல்லுகின்றார்கள். புளிங்காயும் சர்க்கரையும் நினைத்தவழியும் சொல்லியவழியும் வாயில் நீருறி இன்புறுத்துவது உலகியலிற் காண்பது. இவ்வாறே இறைவன் புகழும் பாடுவார்க்கும் பரவுவார்க்கும் இன்பம் தருவதாகலின் “சுவைதரும் பல் புகழோய்” என்று கூறுகின்றார். மக்கள் மன்றில் உலகிற்கு முதல்வன் ஒருவன் உண்டென்ற நினைவு தோன்றிய நாள்முதல் பல்லாயிரமாண்டுகளாகப் பல்லாயிர மக்கள் பாடியும் பேசியும் சொல்லியும் வழங்கிவருவதொன்றே இறைவன் புகழ்பழமையும் இனிமையும் உடையதென்பதற்குத் தெளிவாம். “சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டுன் திருவார்த்தை விரிப்பார் கேட்பார் மெச்சுவார்” என மணிவாசகனார் உரைப்பது கொள்வது மக்களியல். அதனைக் கருத்திற் கொண்டே “வெல்லுகின்றோர் இன்றிச் சும்மா அலையும் என் நெஞ்சம்” என்று இசைக்கின்றார். மாவும் புள்ளும் நாடிக் காட்டில் அச்சமின்றி அலையும் வேடர்போல, ஐம்புலன்களாகிய உலகியற் காட்டில் அச்சமின்றி அலையும் வேடர்போல, ஐம்புலன்களாகிய உலகியற் காட்டில் அச்சமின்றி அலையுமாறு விளங்க “வேட நெஞ்சம்” என விளம்புகிறார். தழுவி ஆதரிப்பார் இல்லாதபோதே நெறியல்லா நெறியில் விரும்பின செய்தொழுகுவோர், ஆதரிப்பார் உளராயவழி அவரது தீமை எத்துணை மிகுதியுடையதாகும் என்பாராய், “புல்லுகின்றோரைக் கண்டால் என்னாங்கொல் புகல்” என்று இயம்புகின்றார். அளவிறந்த குற்றம் புரிவர் என்றதற்குச் சான்று காட்டலுற்று, “ஒன்றுமில்லாதபோதே வெறும் வாயை மெல்லுவோர் பாலில் ஊறிச் சீனி கலப்புற்ற நெல்லவல் மிக்க விருப்பும் விரைவும் அமைய மெல்லுவாரன்றே என்கிறார்.

     இயல்பாகவே கண்ட புலன்களில் கருத்துச் செலுத்திக் கையறவு படுத்தும் நெஞ்சு, அதன் போக்கின்படி செயல்புரியும் என்னைப் பெற்றமையின், அதன் கொடுமைக்கு அளவில்லையாம்; ஆதலால் அதனை அடக்கி நெறி நிறுத்தியருள்க என முறையிடுவது இப்பாட்டின் பயன்.

     (166)