11
11. ஈயாரைப் பழித்தல்
167. மண்ணிற் பிறந்து
வாழும் மக்கள் அனைவர்க்கும் வாழ்க்கையில் பேரார்வம் உண்டு. எங்ஙனமேனும் வாழ்தல் வேண்டும்
என்ற விருப்பம் அவர்களைச் சூழ்ந்து கொண்டுளது. கை கால் முதலிய உறுப்புக் குறைந்து தமக்கு உரியவற்றைத்
தாமே செய்துகொள்ளக் கூடாத மெல்லியோரும், எவ்வகையாலேனும் உயிரோடு வாழ நினைக்கின்றார்களேயன்றிச்
சாவவிழைபவர் இல்லை.
இங்ஙனம் உயிர்மேல்
உள்ள விருப்பந்தான் மக்களை எந்நெறி பற்றியேனும் வாழத் தூண்டுகிறது. தானே நன்கு உழைத்துத்
தனக்கு வேண்டிய அளவுக்கு மேலும் பொருளீட்டுபவர் உண்டு; அளவோடு ஈட்டுவோருமுண்டு; தேவைக்குக் குறைவாக
ஈட்டுவோர் மிக ஈட்ட வேண்டுமென்ற ஆசையால் அலையும் மனமுடையராகின்றனர். அளவோடு ஈட்டுபவரும்
தளர்ச்சியும் நோய் வரவும் கால வேறுபாடும் எண்ணி மிகுபொருள் ஈட்டலை நாடுகின்றனர்.
பொருளின்றி வாழ்வில்லாமையால் பொருள்தேடித் தொகுக்கும் நிலை எல்லார்க்கும் இன்றியமையாமையின்,
பொருள்மேல் ஒருவகைப் பற்று எல்லாருள்ளத்திலும் இருந்தவண்ணம் உள்ளது.
உயிர் வேண்டி
வாழ்வும், வாழ்வு வேண்டிப் பொருளும், பொருள் வேண்டிப் பற்றும் காரண காரியத் தொடர்ச்சியாய்
மக்களைப் பிடித்திருப்பது காண்பவர்கள், மக்களுடைய செயல் வகையில் துன்பமும் இன்பமும் உண்டாதற்குக்
காரணம் பொருட் பற்று என்பதைத் தெளியக் காண்கின்றார்கள். துன்பச் செயல்கட்கும் இன்பச்செயல்கட்கும்
மக்கள் பொருட்பற்றால் அலைக்கப்படுகின்றார்கள். ஒருவர்பால் பொருள் அளவோடு இருக்கும்போது
தோன்றும் மனக்குறையினும், அளவிற்கும் குறைந்த போது உண்டாகும் துன்பம் மிகுகிறது; இவ்வகையில்
பொருள் மிகுதலின் குறைவது துன்பம் தருகிறது. குறைவது நிறைத்தற்கு நினைவு முயற்சியும் பெருகுகின்றன.
இந்நெறியில் தீநினைவும் நன்னினைவும் ஒப்பத்தோன்றி மக்கள் வாழ்வின் அமைதியைக் குறைக்கின்றன.
உள்பொருள் குறைதலைக்
காண அச்சமும், இல்லாவிடத்து வரும் ஏக்கத்துக்கு அச்சமும் மனத்தில் தோன்றிப் பொருள்மேல்
பிரியா மனம் உண்டாக்குகிறது. பள்ளம் நோக்கி ஓடும் நீர்போல இல்லாவிடம் குறைவிடம் என்ற
இடம் நோக்கிச் செல்லும் இயல்பு பொருட்கு
இல்லாமையால், அதனைத் தாமே நீங்காது பிணிக்க மக்கள் ஆசைப்படுகின்றனர். பெறலாகுமிடம் அறிந்து
பெற முயல்கின்றனர். இவ்வகையில் பிறர்க்கு அளிக்க மனம் வராத சூழ்நிலையும் மக்கள் மனத்தில்
பிறக்கிறது. இன்னோரன்ன நிலைகளால் ஈயாத மனமுடையோர் சமுதாயத்தில் தோன்றுகின்றனர்.
ஈயாத உள்ளத்தில்
பொருட்குறை முற்பட்டு நிற்கிறது. பொருட்குறையும் இல்லாமையும் பல்வேறு அச்சநினைவுகளை எழுப்புகின்றன.
அவர்பால் இயற்கையாகவுள்ள நன்னினைவுகளையும், இன்சொற்களையும் போக்கிவிடுகின்றன. ஈதல் இல்லாத,
ஈதலுக்கு ஏற்ற வளமில்லாத மக்கள் இவ்வகையில் நன்னினைவும் இன்சொல்லும் குன்றி இயற்கைப் பண்பை
இழந்து விடுகின்றனர். பொருள் உள்ளபோதும், இல்லாமை நினைவும் அச்சமும் தோன்றி உள்ளத்தின்
நற்பண்பை மாற்றிவிடுகின்றன. அதனால், ஈயாச் செய்கையோடு நில்லாமல், இரப்பவரை இகழ்ந்து பேசி
மனம் புண்படச்செய்வதும் அவர்பால் காணப்படுகிறது.
இன்னோரன்ன நினைவுகளும்
செயல்களும் மக்களிடையே அன்பும் அருளும் வற்றச் செய்து பகைமையும் கொடுமையும் வளரச் செய்கின்றன;
இறையுணர்வும் அறவே இல்லையாக்குகிறது. அது கண்டு வள்ளலார் உள்ளம் வருந்துகிறது.
2337. சீரிடு வார்பொருட் செல்வர்க்க
லாமல்இத் தீனர்கட்கிங்
காரிடு வார்பிச்சை ஆயினும்
பிச்சன் அசடன்என்றே
பேரிடு வார்வம்புப் பேச்சிடு
வார்இந்தப் பெற்றிகண்டும்
போரிடு வார்நினைப் போற்றார்என்
னேமுக்கட் புண்ணியனே.
உரை: மூன்று கண்கொண்ட புண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமானே, பொருளுடைச் செல்வர்க்குச் சீர்செய்வதுண்டே யன்றி ஏழைகட்கு யாரும் பிச்சையிடுகின்றாரில்லை; அதனோடு நில்லாது, பிச்சன் என்றும் அசடன் என்றும் புதுப்பேரிட்டு வம்புபேசி வெருட்டுவதும், போரிட்டுத துரத்துவதும் செய்கின்றார்களே; இறைவனை நினைப்பதிலர் எ.று.
பொருட்பற்றுக் காரணமாக இல்லாரை இகழும் மக்கள், உடையவரைக் காணின், அவர் தமக்கொன்றும் கொடாராயினும், அவர்பால் நன்மதிப்புக் கொண்டு, அவர்கட்கு சீர் செய்து சிறப்பிக்கின்றார்கள். இதுகண்டே திருவள்ளுவர் “இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு” என வுரைக்கின்றார். தம்பால் உடையது போலப் பிறர்பாலும் உடைமையாய் இருப்பது காரணமாகச் செல்வமுடையாரைப் பிறர் சிறப்புச் செய்கின்றார் எனின், இனம்பற்றி இச் செயல் நடக்கிறது எனல் ஒருவாறு பொருந்துவதாம். செல்வாரைக் கண்டு தம்பால் இல்லாத செல்வம் அவர்பால் இருப்பது கண்டு இல்லாதவர் போற்றுவது வியப்புத்தான்; ஆனால் இல்லாதவர் செல்வமுடையாரை
அதன் உடைமை காரணமாகச் சிறப்பிப்பது உலகவர்பால் எங்கும் காணப்படுகிறது. கண்டே “செல்வரை எல்லாரும் போற்றுகின்றனர்” எனத் திருவள்ளுவர் முதலியோர் உரைக்கின்றார்கள். இதனை நன்கு நோக்குங்கால், இன்மையை இகழ்வதும் உண்மையைப் பாராட்டுவதும் உலகிற்கே பிறப்பியல்பாக இருப்பது காணப்படுகிறது. உலகின் இயல்பு அதன்கண் உறையும் மக்கட்கும் எய்தியது போலும். அதனால்தான் வள்ளலார், “சீரிடுவார் பொருட் செல்வர்க்கு” எனச் செப்புகின்றார். தீனர், வறியவர், செல்வர்க்கே உலகு சிறப்புச்செய்யும் என்பது பொருள் மொழியாதலின், இல்லார்க்கு அது செய்யாது இகழுமென்பது கோடற்பாலதாயிற்று. அதனைக் கொண்டே, “இத் தீனர்கட்கு இங்கு ஆர் இடுவார் பிச்சை” என வுரைக்கின்றார். செல்வர்கட்கு உதவுவது சிறப்பு எனப்படுதலால், வறியார்க்கு உதவுவது பிச்சையாம் என்றற்கு “ஆர் இடுவார் பிச்சை” எனக் கூறுகின்றார். வறியார்க்கு தரப்படும் பொருள் சிறப்புடையதாயினும் பிச்சையென இகழப்படுவதேயன்றி அதனைப் பெறுவோனும், “பிச்சன்” என்றும், “அசடன்” என்றும் இகழப்படுகின்றான் என விளக்கியுரைக்கின்றார். பிச்சையேற்பவன் என்ற பொருளில் “பிச்சன்” எனக் குறிக்கின்றார். அசடு, கசடு என்பதுபோலக் குற்றம், அறியாமை என்றெல்லாம் பொருள் தரும் சொல்லாகும். குற்றம் புரிபவனைக் கசடன் என்பதுபோல, அறியாமை புலப்பட ஒழுகுபவனை “அசடன்” உலகவர் உரைக்கின்றார்கள். இயற்பெயர் இருப்பினும் இகழ்பவர், அதனை யுரையாமல் பிச்சன் எனவும், அசடன் எனவும் குறித்துரைப்பதுபற்றி, “பிச்சன் அசடன் என்று பேரிடுவார்” எனக் காட்டுகின்றார். தமது இன்மை நோக்கி பிறர் இகழ்வது நினைந்து வாயால் ஒன்றும் உரையாமல் இருப்பின், அவர்களே வாய் திறந்து உரையாடுமாறு வீணே மனத்தில் வெண்மை தோன்றுமாறு பேச்சுக் கொடுப்பர் என்றற்கு “வம்பு பேச்சு இடுவார்” எனச் சொல்லுகின்றார். வம்பு, புதுமை, வறியனாய்ப் பிறர் எள்ளி நகையாட நிற்கும்போது இதுகாறும் சொல்லியறியாத புதிய புன்மைச் சொற்களை வழங்கும் சூழ்நிலை வறியர்க்கு உண்டாதலின் “வம்புப் பேச்சி இடுவார்” என உரைக்கின்றார். வம்புப் பேச்சு தோன்றுமாயின் போரும் பூசலும் விளைய இடமுண்டாகும்; அது நினைந்தே வள்ளற்பெருமான் “இந்தப் பெற்றி கண்டும் போர் இடுவார்” எனப் புகழ்கின்றார். இவர்கள் உள்ளத்தில் பொருளின் உண்மை யின்மைகளும் அவை அடிப்படையாக எழும் போற்றுதல் போற்றாமைகளும் நிறைந்து நின்று, இறைவன் திருவருள் நினைவு தோன்றி நிலவாவாறு செய்வது கண்டும், பொருட்பற்றுத் திருவருட் பற்றின் வன்மையை மெலிவிக்கும் திறம் வியந்து கூறுமாறு விளங்க, “நினைப்போற்றார்கள் என்னே முக்கட் புண்ணியனே” எனப் புகல்கின்றார்.
இதனால், திருவருட் சிறப்பு இல்வழி பொருட் சிறப்பு எய்தாது; அஃது இல்வழி உலகியல் வாழ்வு உயர்வு பெறாது; எல்லோரும் பொருள் இல்லாரை இகழ்ந்து போர் தொடுத்து வெருட்டுவர் என்ற உண்மையை வெளியிடுமாறு அறிகின்றோம். (167)
|