168
168. அறிவு நிலை வேறு. மனநிலை வேறு என நம் சமய நூல்களால் அறிகின்றோம். மனம்
பொறிவாயிலாக உலகியற் பொருள் சொல்
வகைகளைக் கண்டு உயிருணர்வுக்கு நல்குகிறது. உயிர் தன் இயற்கை யுணர்வால் மனம் தரும் உணர்வுகளை
மேற்கொண்டு வளம் பெறுகிறது. வளமும் வன்மையும் எய்தியபோது மனத்தைப் பொறிவழி யோடாது நிறுத்தவும்,
பொறியுணர்வைத் திருத்தவும் வல்லதாகிறது. மனமுதலிய கருவிகளால் எய்தும் அறிவை இண்டலெக்டு (Intellect)
எனவும், உயிரின் இயற்கை நுண்ணுணர்வை இன்டியூஷன் (Intution)
எனவும், மேனாட்டுப் பெர்க்சன் (Pergusan)
என்ற உளநூல் அறிஞர் உரைக்கின்றார்; மேலும் அவர் இண்டலெக்டு வழுப்பட இடமுண்டு; அதனைத் திருத்திச்
செம்மைப்படுத்துவதில் இன்டியூஷன் மேம்படுகிறது என உரைக்கின்றார். வடலூர் வள்ளல் உயிரின்
இயற்கையழிவு மனத்தைக் குற்றப்படாது காத்து நெறிப்படுத்துவதுபோல இருப்பினும், எளிய என் அறிவு
தன் சிறுமையால் மனத்தின் வழிச்சென்று புலனுகர்ச்சியில் ஈடுபட்டுத் துன்பத்துக்குள்ளாகிறது.
அதன் செயல் ‘பூனைக்குத் தோழன் பாலுக்கு காவல்’ என்னும் பழமொழிக்கு ஒத்துளது. இதற்கு என் செய்வது
என முறையிடுகின்றார்.
2338. சேலுக்கு நேர்விழி மங்கைபங்
காஎன் சிறுமதிதான்
மேலுக்கு நெஞ்சையுட் காப்பது
போல்நின்று வெவ்விடய
மாலுக்கு வாங்கி வழங்கவுந்
தான்சம் மதித்ததுகாண்
பாலுக்குங் காவல்வெம் பூனைக்குந்
தோழன்என் பார்இதுவே.
உரை: சேல் மீன் போன்ற விழியுயையுடைய உமை நங்கையைப் பங்கிலேயுடைய பெருமானே, இயல்பிலே சிறுமையுடைய என் அறிவு, மேலுக்கு நெஞ்சைக் காப்பதுபோலக் காட்டி விடயபோகத்துக்கு அதனை வழங்குகிறது; அதன் செயல், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற பழமொழிக்கு ஒத்துளது காண். எ.று.
சேல் - ஒருவகை மீன்; அதனை மகளிர் கண் விழிக்கு உவமம் கூறுவது மரபு. “சேல் ஏர் நீர்மல்கத் தெள்ளேணம் கொட்டாமோ” எனத் திருவாசகம் உரைப்பது காணலாம். இறைவனை நோக்க உயிர் சிற்றுணர்வும் சிறுசெயலு முடையதாகலின், உயிரறிவைச் “சிறுமதி” என்று செப்புகின்றார். அறிவின் செயல் மனத்தைத் தீநெறிக்கட் சென்று குற்றப்படாவாறு தடுக்கும் நலம் உடையது என்பதைத் திருவள்ளுவர்,. “சென்றவிடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு” எனத் தெளிவிக்கின்றார். அதனால், வள்ளற்பெருமான் “என் சிறுமதிதான் மேலுக்கு நெஞ்சையுட் காப்பதுபோல் நின்று” என மொழிகின்றார். விடயமால் - பொறிவாயிலாகப் பெறலாகும் புலனுகர்ச்சிக் கண் விளையும் களிப்பு. மால் - மயக்கம். நெஞ்சினைக் காத்தலாவது, தன் போக்கிற் சென்று குற்றப்படாதபடி காத்தல்; “குற்றமே காக்க பொருளா” என்பதுபோல. அது செய்தற்குரிய சிறுமதி, நெஞ்சினை விடயங்களிற் சென்று, திளைக்கவிடுகிறது என்பாராய், “வெவ்விடய மாலுக்கு வாங்கி வழங்கவும்தான் சம்மதித்தது காண்” என்று உரைக்கின்றார். வாங்குதல் - வளைத்தல். பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்ற பழமொழி, தோழனாதல் காவல்புரிதல் என்ற இரண்டினுள், ஒன்றை விடுதல் முறையேயன்றி, இரண்டையும் கைக்கொள்ளுதல் கூடாத செயல் என விளக்குகிறது. பூனைக்குப் பாலுணவில் பெருவிருப்பமாதல்பற்றி “வெம்பூனை” என வள்ளலார் குறிப்பது, சொல்லின் பொருணலம் தேர்ந்து கையாளும் தூய புலமை நெறிக்குச் சான்றாகும்.
இக்குற்றத்துக்குக் காரணம் உயிரறிவின் சிறுமையெனக் காட்டி, இதனால் 'இறைவனே நின் திருவருளல்லது வேறு துணையில்லை' யென முறையிடுவது, இப் பாட்டின் பயனாயிற்று. (168)
|