பக்கம் எண் :

234.

    கொள்ளேனோ நீயமர்ந்த தணிகைமலைக்
        குறஎண்ணம் கோவே வந்தே
    அள்ளேனோ நின்அருளை அள்ளிஉண்டே
        ஆனந்தத் தழுந்தி ஆடித்
    துள்ளேனோ நின்தாளைத் துதியேனோ
        துதித்துலகத் தொடர்பை எல்லாம்
    தள்ளேனோ நின்னடிக்கீழ்ச் சாரேனோ
        துணையில்லாத் தனிய னேனே.

உரை:

     தேவர் படைக் கோவே, நீ எழுந்தருளிய தணிகை மலைக்கு வருகிற எண்ணத்தையே என் உள்ளம் கொள்ள வேண்டும், நின்திருமுன் வந்து அங்கே பெருகி நிற்கும் அருளின்பத்தை அடியேன் அள்ளி யுண்ண வேண்டும். அவ்வாறு உண்பதனால் உண்டாகும் பெரு மகிழ்ச்சியில் மூழ்கி என்னை மறந்து துள்ளி ஆட வேண்டும். நின் திருவடியைப் பாடித் துதிக்க வேண்டும். அதனால் உலகத் தொடர்புகள் அனைத்தையும் நெஞ்சினின்று நீக்க வேண்டும்; வேறு துணை ஒருவருமில்லாத தனியவனாதலால் நின் திருவடி நிழலை அடைய வேண்டும், எ. று.

     உலக வாழ்வில் நாடோறும் நிகழ்வனவற்றால் பல திறமான எண்ணங்கள் தோன்றி மக்கள் உள்ளத்தை அலைப்பதால் மிகப் பல துன்பங்கள் உண்டாவது பற்றி என் உள்ளம் முருகப் பெருமான் எழுந்தருளும் தணிகையில் ஒன்றுதல் வேண்டும் என்பதற்காக, “நீ அமர்ந்த தணிகை மலைக்கு உற எண்ணம் கொள்ளேனோ” என்றும், தணிகை மலைக்கு வந்ததும் நேரே பெருமான் திரு முன்பு அடைந்து அருள் பெருகி நிற்கும் நிலைமையைக் கண்டு அதனை அனுபவிக்க வேண்டும் என்றற்கு, “வந்து நின் அருளை அள்ளேனோ” என்றும், அருளின்பத்தில் தோய்ந்த வழித் தன்னை மறந்து கூத்தாடுவது அன்புடையார் செயலாதலின், அதனைத் தானும் செய்தல் வேண்டும் என்பாராய், “நின் அருளை அள்ளியுண்டு ஆனந்தத் தழுந்தி ஆடித் துள்ளேனோ” என்றும், மன மெய்களின் தொழில்களாகிய எண்ணுதல், ஆடுதல், என்பவற்றை முறையாகக் கூறியவர் வாயின் தொழிலாகிய பாடித்துதித்தல் வேண்டும் என்பாராய், “நின் தாளைத் துதியேனோ” எனவும், இவற்றைச் செய்வதால் தான் பெறக்கூடிய பயன் முருகப் பெருமான் திருவடி நிழல் அடைவது என்பாராய், இடைநின்று தடை செய்யும் உலகத் தொடர்பு அற வேண்டுமாதலின், அதனை விதந்து, “துதித்து உலகத் தொடர்பை எல்லாம் தள்ளேனோ, நின்னடிக் கீழ்ச் சாரேனோ” எனவும் உரைக்கின்றார். தணிகைப் பெருமான் திருவடித் துணையல்லது வேறொன்றும் தமக்கு இல்லாமை வெளிப்படத் “துணை யில்லாத் தனியனேனே” எனச் செப்புகின்றார்.

     இதனால் மன மொழி மெய்களால் நினைத்தல் முதலிய பணி புரிந்து அருள் நீழல் பெறும் விருப்பம் தெரிவித்தவாறு.

     (4)