பக்கம் எண் :

171

      171. அரசவாழ்வினும் ஆற்றவும் உயர்ந்த அருள் வாழ்வு கோடி பங்கு மேல் என்பது கேட்ட நெஞ்சம், அருளுக்கும் நமக்கும் தொடர்பு யாது? தொடர்பில்லாத ஒன்றைக் கருதி முயல்வது பயனில் செயலாகுமன்றோ? என்ற ஐயங்கட்கு இடமாகிறது. உயிர்கள் பல வேறு பிறப்புற்று இறந்து மேன்மேலும் பிறந்து உழல்வது இந்த அருள் வாழ்வு பெறுதற்கேயாம்; இந்த அழகிய பரந்த உலகையும், இதன்கண் தோன்றி வாழ்தற்கென உடம்பையும் அதனுட் கட்புலனாகாத மனமுதலிய கருவிகளையும் இறைவன் படைத்தளிப்பது, இவற்றொடுகூடி வாழ்வாங்கு வாழ்ந்து மெய்யுணர்வெய்தித் திருவருள் இன்ப வாழ்வு எய்துவது உயிர்கட்கு உற்ற உரிமை. உலகைப் படைத்து உயிர்களை வாழ்விப்பதும், அருள் வாழ்வு பெறுவிப்பதும் திருவருளே யாதலின், அதற்கும் நமக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதனால் அருளை வேண்டுவது நமக்குக் கடன்; அருளைப் புரிந்து ஆள்வது இறைவனுக்குக் கடன்; இதனை அறிந்த வழி நமக்குத் துன்பம் இல்லையாம் என்று வடலூர் வள்ளல் உரைக்கின்றார்.

2341.

     விடநாகப் பூண்ணி மேலோய்என்
          நெஞ்சம் விரிதல்விட்டென்
     உடனாக மெய்அன்பு ளூற்றாக
          நின்னரு ளுற்றிடுதற்
     கிடனாக மெய்ந்நெறிக் கீடாகச்
          செய்குவ திங்குனக்கே
     கடனாக நிற்பது கண்டேபின்
          துன்பொன்றுங் கண்டிலனே.

உரை:

     நஞ்சுடைய பாம்பைப் பூணாரமாக அணிந்த மேலோனாகிய சிவபெருமானே, என் நெஞ்சம் உலகியற் பொருள் பற்றி விருந்தோடுவ தின்றி, என் உயிரறிவுக்கு உடந்தையாய் ஒழுகவும், உள்ளே உண்மையன்பு ஊறிப் பெருகவும், அது வாயிலாக உன் திருவருள் ஒளிவந்து பரவுதற்கு இடமாகவும், மெய்யுணர்வு நெறிக்கு என் வாழ்வு ஈடாகவும் பரவுதற்கு இடமாகவும், மெய்யுணர்வு நெறிக்கு என் வாழ்வு ஈடாகவும் இவ்வுலகில் செய்வது உனக்கே கடனாக இருப்பதை என் அறிவாராய்ச்சியாற் கண்டேன்; துன்பம் ஒன்றும் இலனாயினேன். எ.று.

     பாம்பணிந்து திரிபவரை உலகவர் எள்ளி இகழ்வரேயன்றிப் போற்றாராக, சிவபெருமான் மார்பிலும் தோளிலும் முடியிலும் முடியிலும் பாம்பணிந்துள்ளானாயினும் அவனது அருள் நலம் நினைந்து உச்சிமேற் கைகூப்பித் தொழுது வணங்குவதுபற்றி, “விடநாகப் பூண்ணி மேலோய்” என்று கூறுகின்றார்; இக் கருத்தே விளங்க, மணிவாசகர், “பாம்பலங்காரப் பரன்” (திருக்கோவை) என்று பரிந்துரைக்கின்றார். உயிரறிவின் வழி நில்லாது புலன்கள் மேற்சென்று பரந்து திரியும் நெஞ்சம் ஒடுங்கி நின்று அறிவுவழி நிற்பது அருள்நெறியாதலால், என் நெஞ்சம் விரிதல்விட்டு என் உடனாக நிற்பிப்பது உன் கடன் என்று இயம்புகின்றார். உடல் வளர்ச்சிக்கும் உணர்வுப் பெருக்கத்துக்கும் கருவியாய் நிற்குமாறு இறைவன் நெஞ்சாகிய கரணத்தைப் படைத்தளித் திருப்பது கண்டே இவ்வாறு கூறுகின்றார். நெஞ்சம் இடமாக நின்று கருவி கரணங்களைக் கொண்டு உயிர்க்குப் பொருளுண்மை விளங்குமாறு காட்டியும் உடனிருந்து கண்டும் உதவி புரியும் இறைவனது உதவியை உணர்ந்த வழி அவன்பால் உயிர் அயரா அன்பு செய்தலால், “மெய்யன்பு உள் ஊற்றாகப் பெருகச் செய்வதும் நின் கடனாவது காண்கின்றேன்” என்று உரைக்கின்றார். இறைவனது அருளுதவி புலனாய போது, அன்பு உள்ளே ஊற்றெடுத்துப் பெருகும் என்ற உண்மையை, “காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல், காணவுள்ளத்தைக் கண்டு காட்டலின், அயரா அன்பின் அரன்கழல் செலுமே” என்று மெய்கண்டார் விளக்குவது காண்க. இவ்வாறு உள்ளூறப் பெருகும் அன்பு சிவஞானச் செந்நெறியிற் செலுத்துவது இயல்பாதல் கண்டு, மெய்ந்நெறிக்கு ஈடாகச் செய்வதும் நின் கடமைச் செயலாதல் கண்டேன் என்று எடுத்துரைக்கின்றார். மனவொடுக்கமும் அன்புப் பேறும் உணரத்தகுவனவற்றைக் காட்டியும் கண்டும் எய்தும் அறிவுப்பேறும் சிவஞானச் செந்நெறிச் செலவும் இறைவனால் நிகழ்வதால் துன்பத்துக் கேதுவாகிய தீது புகுதற்கு இடமின்மையின், “துன்பு ஒன்றும் கண்டிலன்” எனத் தன் துணிபாகச் சாற்றுகின்றார். “அன்றே என்றன் ஆவியும் யாக்கையும் உடைமையும் எல்லாமும் குன்றேயனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ, இன்று ஓர் இடையூறு எனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே, நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே” என்ற திருவாசகத்துக்கு இத் திருப்பாட்டு இனிய பொருள் விளக்கமாதல் காணலாம்.

     இதனால், உயிர்களை ஆட்கொண்டு அருள் வழங்குதல் இறைவன் கடன் என்பது பயன்.

     (171)