பக்கம் எண் :

180

       180. பொருளுருவாகிய உடம்புக்கும் உணர்வுருவாகிய உயிர்க்கும் இடையே உடற்குள் மனம் என்பதொன்று உளது; உயிரென்று ஒன்று உண்டா இல்லையா என்று ஆராய்ந்து உண்டென வறுபுறுத்துபவரும் இல்லையென மறுப்பவரும் உலகில் உண்டு. மனம் என்பதை உண்டா இல்லையா என ஆரய்ந்தவரும் ஆராய்பவரும் இல்லை; காரணம், மனமென ஒன்று உண்டென எந்நாட்டவரும் எத்திறத்தோரும் அறிந்துள்ளனர். மனத்தைப்பற்றிச் சிந்தனை செய்பவர் அதன் செயலைக் கண்டு வியந்து இஃது உடலைச் சார்ந்ததா உயிரைச் சார்ந்ததா என எண்ணியதுண்டு; அவருள் நம் நாட்டு அறிஞர்கள் உடம்புக்கு முதற்பொருள் மாயை என்னும் ஒருவகை ஆற்றல்; அதனைச் சார்ந்தது மனம் என்பர்; மேனாட்டறிஞர் உடம்பாகிய பொருட்கு வேறாயது மனம்; உடம்பின் வேறாய் மேலாய் இருப்பதொரு தனிப்பொருள் அது என்பர். பொதுவகையில் அதனை மனம் என்பராயினும் செயல்வகை பற்றிச் சித்தம், அகங்காரம், புத்தி எனக் கூறுசெய்து ரைப்பர். கண் முதலிய கருவிகளின் வாயிலாகப் புறவுலகைக் காண்பது மனம்; காணப்படுவது யாது எனத் தெரிவது ( சிந்திப்பது ) சித்தம்; இன்னதாம் எனத் துணிவது அகங்காரம்; துணிந்ததை மேலும் எண்ணித் தெளிந்து முடிபு கொள்வது புத்தி என்று கூறுவர். பொறிகளால் காண்பது வாயிற் காட்சி என்றும் இந்திரியக் காட்சி என்றும் கூறப்படும்; சிந்திப்பது மானதக் காட்சி; துணிவது தன்வேதனைக் காட்சி; புத்தியிற் கொண்டு உயிரறிவோடு ஒன்றுவது யோகக் காட்சியாகும். இப் பாகுபாடு மேனாட்டறிஞரது பகுப்போடு பெரிதும் ஒத்திருக்கிறது. இவை யாவும் அவரவர் சிந்தனையால் கூறப்படுதலால் ஒருசில வேறுபடுவது வியப்பன்று. 

 

      இந்த மனம் கண் முதலிய கருவிகளோடு கலந்து புறவுலகப் பொருள்களின் உருவினை நிறம், பயன் முதலியவற்றைக் கண்டவண்ண மிருத்தலின், எப்போதும் இயங்கிக்கொண்டேயிருக்கும்; அதே நிலையில் கண்டதை உயிரறிவுக்குத் தந்த வண்ணம் இருப்பதோடு, உயிரின் அறிவு, விழைவு, செயல் ஆகிய பண்பு வழிநின்று உரிய பணிபுரிதலும் மனத்தின் கடமையாகும். இத்தகைய தொழிற் பன்மைசால் மனத்துக்கு ஓய்வே இராது. உறக்கத்திலும் அதன் உழைப்பு இடையறுவதில்லை. ஒருகால் உயரறிவின்வழி நிற்பதும் ஒருகால் உடலுணர்வின் வழி நிற்பதும் அதன் இயல்பு. இளமையில் உடல்வழி நிற்பதும் முதுமையில் உயிருணர்வின் வழி நிற்பதும் பெரும்பான்மை. ஏனெனில் இளமையில் உடம்பைப் பேணி வளர்ப்பதும், முதுமையில் உயிருணர்வைத் தெளிவிப்பதும் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை யாகும். உயிர் உடம்பொடு கூடிப் பிறப்பது வாழ்தற்கும் வாழ்வால் உயிருணர்வு பெருகி வளம் பெறுதற்குமே என்பது குறிக்கோள்.

 

      உயிர்தான் உணர்வே உருவாக இருக்க, அதற்குப் பெருக்கமும் சுருக்கமும் உண்டோ எனின், உயிர்வு உண்வு வடிவிற்றெனினும் ஒளிக்குள் இருள்போல அதனுள் மலம் கலந்து உளது; அதனால் உணர்வு மறைப்புண்டு வாழ்க்கையால் பைய அம்மறைப்பு நீங்குகிறது. அம்மலத் தொடக்குற்ற உணர்வுவழி இயக்குங்கால் மனமும் இருள் கலந்து குற்றம் செய்தற்கு ஏதுவாகிறது. மல நீக்கம் குறித்தே வாழ்விடை மனம் உயிர் வழியும் உடல் வழியும் ஓடிச் சுழன்றுகொண்டே இருக்கிறது. சுழற்சி குன்றி சிந்தனைக்கண் ஒன்றி நிற்குமாயின், உணர்வின்கண் ஒளிதோன்றி மலவிருள் நீங்குதற்கு இடமேற்படுகிறது. இவற்றை எண்ணிய வடலூரடிகள் குடும்ப வாழ்வின்கண் விழைவும் வெறுப்பும் மாறி மாறித் தோன்றி ஆசையை விளைவித்து மனத்தை அலைவிப்பது காண்கின்றார். குடும்ப வாழ்வின்றேல் மனச்சுழற்சி நிற்கும் எனக் கருதுகின்றார். இப் பெரிய வுண்மையை யாவரும் இனிதுணர எளிய இனிய சொற்களால் பாடுகின்றார்.

2350.

     மலங்கவிழ்ந் தார்மனம் வான்கவிழ்ந்
          தாலும்அவ் வான்புறமாம்
     சலங்கவிழ்ந் தாலும் சலியாதென்
          புன்மனந் தான்கடலில்
     கலங்கவிழ்ந் தார்மனம் போலே
          சலிப்பது காண்குடும்ப
     விலங்கவிழ்ந் தாலன்றி நில்லாதென்
          செய்வல் விடையவனே.

உரை:

     விடையேறும் பெருமானே, மலம் அகன்ற நல்லோர் நெஞ்சம், வான்கவிழ்ந்து, வீழ்ந்தாலும், அவ்வானத்தின் மேலே ஓடும் கங்கையாற்றின் நீர்ப்பெருக்கு நெறிதிறம்பி நிலவுலகிற்குள் பாய்ந்தாலும் சிறிதும் அசையாது; கடலிற் கலம் கவிழ்ந்துவிடின் அதன்கண் உள்ளவர்களின் மனம்போல மலவிருள் கவிழ்ந்து கலங்குகிறது என் மனம்; குடும்பவாழ்வு தோற்றுவிக்கும் ஆசைகள் அதனை விலங்கு பூட்டியது போலப் பிணித்துக்கொள்கின்றன; அவ் விலங்கு அவிழ்ந்து நீங்கினாலன்றி மனச்சுழற்சி போகாது; இதற்கு என் செய்வேன்; திருவருள்தான் துணைபுரிய வேண்டும். எ.று.

     மனம் கவிழ்தலாவது, மலத்தினுடைய மறைக்கும் தன்மை கெடுவது வானத்தின் அப்புறத்தில் வானகக் கங்கையென ஓர் ஆறு ஓடுகிறது என்றும், அது பகீரதன் தவத்துக்கிரங்கி நிலம் நோக்கிவர அதனைச் சிவன் தன் சடையில் ஏற்று அடக்கினானென்றும் புராணங்கள் கூறுகின்றன. மலம் நீங்கிய முத்தர் உள்ளம் எதற்கும் சலியாது என்பதை நாவுக்கரசர். “வானம் துளங்கிலென், தண் கடலும்; மீனம் படில் என் விரிசுடர் வீழிலென் வேலை நஞ்சுண்டு, ஊனமொன்றில்லா ஒருவனுக்காட்பட்ட உத்தமர்க்கே” எனக் கூறுவர்; அதனால் அடிகளார் “மலம் கவிழ்ந்தார் மனம் வான் கவிழ்ந்தாலும் அவ்வான்புறமாம் சலம் கவிழ்ந்தாலும் சலியாது” என்று சொல்லுகின்றார். ஈயான் மனம் கரந்தவனாதலால் என் மனம் திண்மையின்றி அலையும் இயல்பினதாய்ப் புன்மை எய்தியுளது என்பாராய், “என்புன்மனம்” என்று இகழ்ந்துரைக்கின்றார். அதன் சலிப்பை, அலையும் திறத்தை ஓர் உவமையால் விளக்க முற்பட்டுக் கடலிடையே தாம் ஊர்ந்துவந்த மரக்கலம் உடைபட்டபோது, அதிலுள்ள மக்களுடைய மனம் துள்ளித் துடித்து வருந்துவது போல்கின்றது என்றற்கு, “கடலில் கலம் கவிழ்ந்தார் மனம்போலே சலிப்பது காண்” என்று கூறுகின்றார். உடைகலபப்ட்டோர், மனம் உடம்போடு கூடிய உயிர் வாழ்வுகெடுவது நினைந்து துடிதுடித்துச் சலிக்கிறது; தரைமேல் குடும்பத்தோடு இனிதுறையும் என் மனம் துடிக்க ஏது ஒன்றும் இல்லையே எனின், குடும்பவாழ்வு, உடைகலப்பட்டோர் கை கால்களை அசைக்க முடியாமல் விலங்கு பூட்டப்பட்டிருந்தால், அவர் மனம் எப்பாடுபடுமோ அப்பாடனைத்தையும் தருகிறது; அஃது அறுபட்டு நீங்கினாலன்றிச் சலிப்பு ஒழியாது என்பார். “குடும்ப விலங்கு அவிழ்ந்தாலன்றி நில்லாது” என வுரைக்கின்றார். அது நின் அருள் ஒன்றினால் முடியுமேயன்றி என்னால் ஆவதன்று என அறுதியிட்டுரைப்பாராய், “என் செய்வல்” என்று முறையிடுகின்றார்.

     இதனால், மலம் காரணமாக வந்த குடும்ப வாழ்வின் நீங்கி உய்தி பெறுதற்கு அருள்புரிக என வேண்டுவது பயனாதல் காண்க.

     (180)