182
182. விடியல், காலை, நண்பகல், மாலை, இரவு என்ற எப்பொழுதும் ஏதாயினும் விரும்பாததும்
வேண்டாததுமாகிய எண்ணமும் சொல்லும் செயலும் தோன்றி நம்மை அலக்கழித்துத் துன்புறுத்துவதை
வள்ளற் பெருமான் அறிகின்றார்; தாமும் அந்நிலைக்கு விலக்காகாமையை உணர்கின்றார். இவற்றால்
மக்கள் துன்பமே பெரிதும் நுகர்கின்றார். துன்பமும் பொறுக்க முடியாத அளவு வந்துகொண்டே
யிருக்கிறது. இந்த நிலை உலகிற் பிறந்தார் அனைவர்பாலும் காணப்படுகிறது. இதற்கு உய்தி யாது
என அடிகளார் ஆராய்கின்றார். இம்மையும் மறுமையுமாகிய உலகில் வாழ்வார்க்கு இன்னலும் இடும்பையும்
நேரும் போதெல்லாம் தெய்வங்கள் தோன்றித் துயர் துடைத்து வாழ்வளிப்பதைப் புராண இதிகாசங்கள்
உரைக்கின்றன; அதனை வற்புறத்தும் வகையில் சிவபெருமான் ஆறுமுகன், ஆனைமுகன் என்பாரைத் தோற்றுவித்து
மக்கள் வழிபட்டுய்யுமாறு அருளியுள்ளான் என்று உட்கொண்டே, மண்ணவர் அறுமுகனாகிய முருகனுக்கு விநாயகனுக்கும்
தனித்தனிக் கோயிலெடுத்துச் சிறப்பும் பூசனையும் செய்து வருகின்றனர். அவர்கட்கும் சிவனுக்கும்
தொடர்புகாட்டிச் சிவனை வழிபடுவோர் அவ்விருவரையும் வழிபடக் கடவர் என்பதற்காகத் திருஞானசம்பந்தர்
முதலியோர் “பிடியதன் உருஉமை கொளமிகு கரியது. வடிகொடு தனதடி வழிபடுமவர், இடர், கடகணபதிவர
அருளினன்” என்றும், “சமரசூரபன்மாவைத் தடிந்த வேற்குமரன் தாதை” என்றும் கூறினார். ஒரு தாண்டகத்தில்
இருவரையும் ஒருசேரக் கூட்டி, “ஆறுமுகனோடு ஆனுமுகற்கு அப்பன்தன்னை, நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே” என்று அப்பரடிகள் மகிழ்ந்துரைக்கின்றார். இப்பெருமக்கள்
வழிநின்ற பெருமானாதலால், வடலூர் வள்ளலார் முருகப்பெருமானிடம் உலகவாழ்வில் உளவாகிய துன்பங்களை
எடுத்துரைத்துக் காத்தருளுமாறு கூறுகின்றார்.
2352. உடம்பார் உறுமயிர்க் கால்புழை
தோறனல் ஊட்டிவெய்ய
விடம்பாச் சியஇருப் பூசிகள்
பாய்ச்சினும் மெத்தென்னும் இத்
தடம்பார் சிறுநடைத் துன்பஞ்செய்
வேதனை தாங்கரிதென்
கடம்பாநற் பன்னிரு கண்ணா
இனிஎனைக் காத்தருளே.
உரை: மனமும் மொழியும் மெய்யும் ஆகியவற்றின் செயல் எல்லாம் உலகநடையாகிய வாழ்வில் அடுக்கி வந்து தாக்கும் துன்பங்களின் கடுமையை எண்ணுமிடத்து அனிலிற் காய்ச்சி விடம்பூசிய இருப்பூசிகளை மயிர்க்கால் தோறும் நிறுத்திச் செருகியவழிப் பிறக்கும் துன்பம் மெத்தென்று தோன்றும்; ஆகவே, கடம்பு மாலையணிந்து பன்னிரண்டு கண்களைக் கொண்டு விளங்கும் முருகனே, நின் கண்களால் நோக்கி என்னைக் காத்து அருள் செய்தல் வேண்டும் எ.று.
உடம்பின் மேந்தோல் முழுதும் மயிரும் சிறுசிறு புழையும் உண்டு; புழை வாயிலாகவே வியர்வை நீர் வெளிவருகிறது; உடற்குள் நஞ்சுற்ற காற்றும் வெளிவருகிறது. அப் புழைகள் அழுக்கால் அடைபட்டுத் தீதாகிய காற்று வெளிப்படாவிடில் உயிர் ஒரு கணமும் உடம்பினுள் நில்லாது நீங்கிவிடும்; அதுபற்றியே நாடோறும் நன்னீரில் தேய்த்துக் குளித்தல் வேண்டப்படுகிறது. உடற்கூறுகள் எல்லாவற்றினும் பெரிய கூறு தோல்தான்; உயிராகிய வேந்தன் உறையும் கோட்டையாகிய யாக்கைக்கு வலிய அரண் ஒப்பது தோல்; மனத்தெழும் எண்ணங்களின் தொடர்பின்றியே தானாக இயங்கி உடலை வளர்க்கும் நரம்புக் கூட்டத்துக்கும் (Nervous System) தோலுக்கும் ஒன்றிய தொடர்புன்மையால் தோலுக்குத் தனிச்சிறப்பு அமைந்திருக்கிறது. அதன் அணுத் தோறும் ஊற்றுணர்வு பரந்து நிறைந்திருப்பதால், காப்புடைப் பேரரண் என யாக்கைநூல் புகழ்ந்துரைக்கின்றது. புறச்சூழல் வெப்பமுறுங்கால், வியர்வை தோன்றி ஆவியாகித் தோலைச் செம்மை நிலையில் அமையாச் செய்வது. இங்ஙனம் உயிர் நீங்காது நிற்றற்குப் பெருங்காப்பரணாய் உணர்ச்சியுருவாய் இருத்தலால், அதற்கு ஊறுண்டாயின் தோன்றும் துன்பம் பெரிது; உடல் முழுதும் நீக்கமறப் பரந்து அதன் உள்ளும் புறத்தும் அமைந்த உறுப்பும் கருவிகளுமாகிய அனைத்தும் தன்னகத்தே கொண்டு புறமறைத்து பொற்புடன் விளங்கும் தோலின் பரப்பு முழுதும் விடந்தீட்டிய இருப்பூசியை ஊன்றிப் பாய்ச்சிய வழியுண்டாகும் துன்பம் எண்ணற்கரிய மிகுதியுடைத்தாம் என்றற்கு, “உடம்பார் உறுமயிர்க்கால் தொறும் இருப்பூசிகள் பாய்ச்சினும்” என்று உரைக்கின்றார். உடம்பு என்னாது “உடம்பார்” என ஏற்றம் கூறியது அதன் சிறப்புணர்த்தற்கென அறிக. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” (திருமந்திரம்) என்று சான்றோர் கூறுவதுபோல, மயிரின் மிகுதி விளங்க “உறுமயிர்” என்று கூறுகின்றார். மயிர்க்காலும் புழையாயினும், அதன் இடைவெளியிலும் புழை பல உண்டெனக் கூறுதற்காக, 'மயிர்க்காலும் புழையும்' என உடன் கூறுகின்றார். நெருப்பிற் காய்ச்சிக் கூரிதாக்கப்பட்ட புதுமைதோன்ற “அனல் ஊட்டி” என்றாராயினும், பழுக்கக் காய்ச்சிய வழி எளிதில் ஊடுருவும் என்பதுபற்றி இவ்வாறு கூறினார் என்று கொள்ளல் வேண்டும், விடம் தீற்றியபின் காய்ச்சினால், விடம் பயனின்றிக் கெடுமாதலால். காய்ச்சியபின் விடமூட்டினமை விளங்க, “அனல் ஊட்டி வெய்ய விடம் பாய்ச்சிய இருப்பூசி” என்று சிறப்பிக்கின்றார். விடமே பொல்லாதாயினும் உடம்புக்கு நோய்தந்து உயிரையுண்ணாது கழியும் விடமும் உண்மையால் உயிரையுண்ணும் விடம் என்று உணர்த்தற்கு “வெய்ய விடம்” என்று விளம்புகின்றார். தடம்பார் சிறு நடைத்துன்பம் - பெரிய உலகிடை அமைந்த சிறு வாழ்வு நல்கும் துன்பங்கள். நிலையாமைப் பண்பும் நெஞ்சை அலைக்கும் நீர்மையும் உற்று வாழ்வைச் சிறுமைப் படுத்துவதுபற்றி, “சிறுநடை” என்று இழித்துரைக்கின்றார், வேதனை - மனநோய். “தாங்கரிதே” என இழித்தற்குரியது. பெயர்த்தெழுதினாரால் “தாங்கரிதென்” எனத் தொடக்கத்தில் அச்சேறியபோதே எழுதப் பட்டுவிட்டது. இவ்வாறே தேவாரத் திருமுறைகளில் எத்தனையோ பிழைகள் உள்ளன. அவற்றைத் திருத்திச் செம்மை செய்து வெளியிடும் உள்ளமும் உணர்வுமுடைய சைவர்கள் இன்னும் தோன்றவில்லை. முருகனைக் “கார்க்கடப்பந்தார் எம் கடவுள்” (சிலம். 24) என்பராகலின், “கடம்பா” என்றும், அருள்பொழியும் கண்கள் என்றற்கு “நற்பன்னிரு கண்ணா” என்றும் பாராட்டிப் பரவுகின்றார். திருவருள் வேண்டி முறையிடுவது கருத்தாதலால், “காத்தருள்” என வேண்டுகின்றார்.
இதனால் உலகநடை பயக்கும் துன்பமிகுதியைத் தாங்குதல் அரிதென்று தெரிவித்து முருகப்பெருமானை அருள் வழங்குமாறு முறையிடுவது பயன். (182)
|