ச
சிவகுமரர் வணக்கம்
183. சிவனுக்குக்
கணபதி முருகன் என்ற இரு தெய்வங்களை மக்களாகக் கூறுவர். அவருள் கணபதியைச் சிவனுடைய மூத்த
பிள்ளை என்றும், முருகனை இளைய பிள்ளை என்றும் பண்டையோர் குறிப்பது வழக்கம். கணபதியின்
வரலாற்றை,
“பிடியதன் உருவுமை
கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும்
அவர் இடம்
கடிகணபதி வர அருளினன்
மிகுகொடை
விடிவினர் பயில்வலி
வலமுறை இறையே”
எனத் திருஞானசம்பந்தர் கூறுவது காண்க. இதனால், கணபதியை
இறைவன் வருவித்தது, தனது அடியை வழிபடும் அடியவர்க்கு வரும் இடர் கெடும் பொருட்டு என அறியலாம்.
ஆகவே, அவரை வழிபடுவது முறைமையாவது பற்றி வள்ளலார் அவரை வணங்கி அருள் வேண்டுகிறார்.
2353. மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையி
னாலும்அவ் வாழ்க்கைக்குற்ற
பெண்ணாலும் நொந்துவந் தாரை
எல்லாம்அருட் பேறெனுமுக்
கண்ணாலும் பார்த்தைந்து பகையாலும்
ஈயுங் கணபதியின்
பண்ணாலும் மாமறை மேற்றாளை
என்னுட் பதித்தருளே.
உரை: மண்ணாலும், பெண்ணாலும் நொந்து வந்தார் எல்லாரையும் முக்கண்ணாலும் ஐந்து கையாலும் அருள் செய்யும் கணபதியே, நின் தாளை அடியேன் மனத்தின்கண் பதித்தருள வேண்டும் எ.று.
உலகில் வாழ்பவர்க்கு ஆசையையும், அதன் வாயிலாகத் துன்பங்களையும் உண்டு பண்ணுவன மண், பொன், பெண் என்ற மூன்றுமாம். அவற்றுள், நம் உயிரை அனாதியேபற்றி நிற்கும் மலம் காரணமாக நமக்கு மண்ணுலகத் தொடர்புண்டாகிறது. உடம்பொடு கூடி உலகில் தோன்றி வாழ்கின்றோம். அதனால் “மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையினாலும்” நமக்குத் துன்பம் உண்டாகிறது என அடிகளார் அறிவிக்கின்றார். வாழ்வின்கண் மனத்தொடுகூடி நினைப்பதும், வாயால் மொழிவதும், மெய்யால் செய்வன செய்வதுமாகிய வினைகளால் நலந்தீங்குகளை எய்துகின்றோம். வாழும் உயிர் மலநீக்கம் குறித்து வினை செய்வதுடன், ஆண் பெண்ணோடும் பெண் ஆணோடும் கூடி வாழ்க்கையாகிய வினையைச் செய்கின்றது. இவ்வகையில் பெண்ணுக்கு ஆணும் ஆணுக்குப் பெண்ணும் வாழ்க்கைத் துணையாகின்றனர். இதுபற்றியே “வாழ்க்கைக் குற்ற பெண்ணாலும்” துன்பம் உண்டாகிறது எனச் சொல்லுகின்றார். இவற்றின் தொடர்பு மக்களாலே உண்டாவதன்று; மண்ணுலகத் தொடர்பு உயிர்கள் தாமாகவே தேடிக்கொள்வதன்று; இவ்வாறே வளமுடைய நாடு இல்லா நாடு என அறிந்து, அந்நாடுகளில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதும் உயிர்கள் அல்ல; இவ்வகையில் ஒரு பெண்ணுக்கு ஆணின்பாலும், ஆணுக்குப் பெண்ணின்பாலும் அன்பும் தொடர்பும் உலகில் தோன்றும்போதே தோன்றுவதில்லை. எதிர்பாராத வகையால் தோன்றி இன்பமும் துன்பமும் எய்துவிக்கின்றன. காரண காரிய முறையில் ஆராயுமிடத்து, வாழ்வும், வாழ்விடைக் காணப்படும் துன்பமும் இறைவனால் தோன்றுவதறியப்படுதலால், துன்புறுவோர் அனைவரும் கூடி இறைவனையே நாடுகின்றார்கள். அவ்வகையில் இறைவனுடைய அடியவர்கட்கு உண்டாகும் இடர்களைக் களைதல் வேண்டிக் கணபதி தோற்றுவிக்கப்பட்டுள்ளார் எனப் புராணம் கூறுதலால், துன்பத்தால் நோவுறுபவர் கணபதி திருமுன் வருகின்றார்கள் என்பாராய், “நொந்து வந்தாரை யெல்லாம்” என்றும், கணபதிக்கும் சிவன்போலக் கண் மூன்று உண்டு என்பது பற்றி, “முக்கண்ணாலும் பார்த்து” என்றும், துதிக்கையோடுகூடக் கை ஐந்து என்பதனால், “ஐந்து கையாலும் ஈயும் கணபதி” என்றும் இசைக்கின்றார். கணபதியின் திருவடி வேதமோதும் வேதியர் முடிமேல் இருந்து அருளும் ஞானமும் வழங்கும் தலைமை சான்றது; அதனால் அப்பெருமானுடைய திருவடிகளைப் “பண்ணாலும் மாமறைமேல் தாள்” எனப் பாராட்டுகின்றார். கணபதியின் முக்கண்கள் அருள்நோக்கம் செலுத்தி உயிர்கட்கு உறும் இடர் கடிந்து இன்பம் உதவுவது என்று சான்றோர் பரவுவது பற்றி “அருட்பேறு எனும் முக்கண்” எனப் புகழ்கின்றார்.
இதனால், கணபதியாகிய தெய்வம் முக்கண்களாலும் உயிர்களை நோக்கி ஐந்து கைகளாலும் அருள் வழங்கும் நலத்தை அறிந்து அத் தெய்வத்தின் அருளை நினைந்து பரவுக என்பது கருத்தாம்.
குறிப்பு : இது நூலின் பாயிரமாக எழுதப்பட்டிருக்குமோ என்ற நினைவு இங்கே எழுகிறது. (183)
|