184
184. நெஞ்சின் சுழற்சித் தன்மையால் பல்லாயிரம் பிழைகள் தோன்றி
மண்ணுயிரைப் பெருந்துன்பங்கட்கு உள்ளாக்கி வருத்துவதை நினைந்து இறைவன்பால் முறையிட்ட வடலூர்
வள்ளல், நெஞ்சினை நேர்முகமாக்கி நோக்குகின்றார். நெஞ்சென்னும் நுண்மாண் கருவி இல்லையாயின்
உடற்கு இயக்கமும், உலகியல் வாழ்க்கைக்கு நேரிய தொடர்பும், அதுவாயிலாக எய்தக் கடவ மெய்யுணர்வுப்
பேறும் இல்லையாய் ஒழிவதை உன்னுகின்றார். இதற்கு நெஞ்சினும் வேறாயதோர் கருவி இருப்பதாகவும்
தோன்றவில்லை. திருவள்ளுவரை ஆராய்கின்றார். கருவி இருப்பதாகவும் தோன்றவில்லை. திருவள்ளுவரை
ஆராய்கின்றார். “துன்பத்திற்கு யாரே துணையாவார் தம் உடைய நெஞ்சம் துணையல் வழி” என்ற வள்ளுவம்
தோன்றி, வள்ளலாரின் உள்ளத்தைப் பணி கொள்கிறது. துன்பத்துக்கு ஏதுவாகிய நெஞ்சமே அதனைப்
போக்கற்கும் துணையாவது; அது துணையாகாவிடத்து வேறு துணையும் இல்லை என்பது விளங்கவும் நெஞ்சினைத்
துணைகொள்ளும் நெறிநோக்கி வள்ளலாரின் திரு அறிவுள்ளம் செல்கிறது. நெஞ்சிற்கும் தமக்கும் உள்ள
தொடர்பை எண்ணுகிறார். நெஞ்சிற்கும் உயிர்க்கும் உள்ள தொடர்பு உடைமைக்கும் உடையவனுக்கும்
உள்ள தொடர்பு என்று தெளிவிக்கும் வகையில், திருக்குறள், “தாம் உடைய நெஞ்சம்” என்ற
சொற்றொடரால் சுட்டிக் காட்டுகிறது. உலகில் உடையவரையும் அவரது உடைமையையும் நோக்குங்கால்
உடையவன் உடைமைவயத்தனாதலும், உடைமை அவன் வயத்ததாதலும் காண்கின்றார். உடைமை உடையவன் வயத்ததாகிய
வழி, அவன் உயர்வும் இன்பமும் எய்துவதையும், அவன் உடைமை வயத்தனாகியவழிக் கீழ்மையும் துன்பமும்
எய்துவதையும் நினைந்து பார்க்கின்றார். உடையான் ஒருவன் உடைமை வயத்தனாயின் அதுதான் தோன்றிப்
பெருகிய உலகின் பக்கமே அவனை ஈர்த்து நிறுத்தி உலகியல் இன்பக்களிப்பிலே ஆழ்த்தி உயிர்க்கு
உறுதி நாடும் நெறியில் செல்லாவாறு உயிரறிவைச் சிறுமைப்படுத்துகிறது; உலகியற் பெருக்க
வாழ்வுக்கு வேண்டும் உணர்வுகளையும் செயல் திறங்களையும் பெருக்கித் தன்மேல் ஒன்றிய பற்றும்
அவாவும் குன்றாதவாறு பிணிக்கிறது. மெல்லியன் ஒருவன் செல்வமுடையவனாய் அதன் வயத்தனாகியவழி
அதன்பாற் பற்றும் அவாவும் பெருகி அதற்கு மீளா அடிமையாய்க் கடும்பற்றுள்ளமும் அறம் துறக்கும்
கொடுமையும் சூழ்ந்த மனத்தனாய்க் கெடுவது பெரும்பான்மைக் காட்சியாவது தெரிகிறது. உடைமை வழியோடாது
அவ்வுடைமை தன்வழித் தொடர நிற்பவன் அறிவில் தெளிவும், செயலில் திட்பமும் ஒழுக்கத்தில்
உயர்வும் கொண்டு மேம்படுவது தெரிகிறது. உலகியற் செல்வ வகைகளும் அவற்கு வேண்டுமளவு வந்து கூடி
அவனது வாழ்வைச் சிறப்பிக்கின்றன. ஆனால் இக்காட்சி சிறுபான்மையாதலையும் வள்ளலார் கண்டருள்கின்றார்.
உடைமை வழிச் செல்லும்
உடையவர் உள்ளம் தனியுரிமை தந்து அதன் பின்னே உலகனைத்தையும் தம் அடிப்படுத்தி ஆள அவாவுவதும்,
அதற்கான வினை செயல்வகைகளைக் காண்பதும், கண்டு செயல்பல மேற்கொண்டு உயர்வதுபோலவுயர்ந்து
பின்பு இருந்தவிடம் விளங்காதவாறு வீழ்ந்து மறைவதுமாகிய நிகழ்ச்சிகளைப் புராண வரலாற்றேடுகள்
காலமுறையில் வைத்து நிரலே உரைப்பது இனிது தெரிகிறது. வடலூர் அடிகளின் கெடலரும் பேருள்ளம் நடுங்குகிறது.
உடைமைமேற் பொருளாட்சியில் பற்றுவயப்பட்டு வீழ்ந்தார் விண்ணாட்சி, மண்ணாட்சி, பொன்னாட்சி
முதலிய துறைகளில் தனியரசாள விரும்பினரேயன்றித் தம்மை நன்னெறிக்கண் செல்லத் துணைபுரியும் நெஞ்சின்
துணையாட்சியை விரும்பிச் செயல்பட்டாரில்லை; அதனாலன்றே இல்வீழ்ச்சி எய்திற்று. நெஞ்சினைத்
துணையாகக் கொண்டு ஆள்வதுதான் நேரிது எனக் காண்கின்றார். அதனைப் படைத்தளித்த முதல்வனான
பரசிவனைப் பரவுகின்றார். அவன் அருள் துணை செய்தால் அவன் தந்த கருவியைத் துணையாளும் வன்மையுண்டாம்
என்பது வடலூர் வள்ளலின் திருவுள்ளம்.
2354. வானாள மாலயன் வாழ்வாள
அன்றிஇம் மண்முழுதும்
தானாள நின்பதம் தாழ்பவர்
தாழ்கஒண் சங்கையங்கை
மானாள மெய்யிடந் தந்தோய்துன்
பற்ற மனமதொன்றே
நானாள எண்ணிநின் தாளேத்து
கின்றனன் நல்குகவே.
உரை: ஒள்ளிய சங்காகிய வளையணிந்த கையையுடைய உமைநங்கை, தனக்கே உரிய இடமாகக் கொண்டு ஆள்வது கருதி மெய்யில் இடப்பாகம் அளித்த எம் பெருமானே, இந்திரனது வானுலகை யாளவும், திருமால் அயன் பெற்றிருக்கும் வாழ்வையளவும், மண்ணுலகு முழுதும் தனியரசாய் ஆளவும் வேண்டி நின் திருவடிக்கண் தாழ்ந்து வணங்குவோர் வணங்குக; துன்பம் புரிவதில்லாத மனமாகிய ஒன்றை மாத்திரமே நான் ஆளவேண்டுமென எண்ணி நின் திருவடியைப் பரவுகின்றேன்; அதனை நல்கியருள்க எ.று.
வான் - இந்திரன் ஆட்சிபுரியும் உலகம். இது வானகத்தில் உளது என்னும் வழக்குப்பற்றி “வான்” எனப்பட்டது. வானத்தில் இந்திரன் உலகிற்கு மேல் திருமால் ஆட்சிபுரியும் வைகுந்தமும், அதற்குமேல் பிரமன் உறையும் சத்தியலோகமும், அதனின் மேலாய அண்டத்துச்சியில் சிவலோகமும் உள்ளன என்பது சமயநூற்கொள்கை. மண்ணுலகத்து வேந்தர்களும் செல்வர்களும் தாம்தாம் செய்யும் தவத்திற்கேற்ப மேற்கூறிய உலகங்களை மேன்மேல் அடைந்து அரசவாழ்வு பெறுவர்; தீமை செய்தோர் பூவுலகின்கீழ் அதலமுதல் பாதலம் ஈறாகவுள்ள இருளுலகம் அடைந்து பொறுத்தற்கரிய துன்பம் நுகர்வர் என்பர். தாம் செய்த தீவினைப் பயனால் மக்களினும் இழிந்த பிறப்புற்றுத் துன்புறும் அவர்களைச்சயினம் பௌத்தம் முதலிய சமயங்கள் 'நரகர்' என மொழிவர். திருவள்ளுவர் முதலிய செந்தமிழ்ச் சான்றோர் இவற்றை “இருளுலகம்” “இன்னாவுலகம்” என இழித்துப் பேசுவர்.
நல்வினை செய்து மேலுலக மெய்தி அரசபோகம் எய்துவோரை இந்திரர், நாரணர், பிரமர் என்றும், நாரணர் நூறுகோடிக்கு மேற்பட்டவர், பிரமர்கள் ஆறுகோடி, இந்திரராவர் கங்கையாற்று மணிலினும் பலர் என்றும் திருநாவுக்கரசர் முதலிய பெரியோர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையைச் சமயநூல் வாயிலாகவும் சான்றோர் வாயிலாகவும் கற்றும் கேட்டும் சிந்தை கொண்ட வேந்தரும் செல்வரும் வேள்வியும் வேறு பல செயல்களும் புரிந்து இந்திரராகவும், நாரணராகவும், பிரமராகவும் மேலுலக இன்பங்களைப் பெற்றனரென்பது கொண்டு, “வானாள மால்அயன் வாழ்வாள நின்பதம் தாழ்வர்” என்று உரைக்கின்றார். மண்ணுலகில் மெய்வலியும் பொருள்வலியும் ஆள்வலியும் சேரப் பெற்றோர் நாடாள விரும்பி முயன்று பெற்ற நிகழ்ச்சிகளே நாட்டின் அரசியல் வரலாற்று நூல்கள் விரியக் கூறுவன. சங்ககாலத்தில் தமிழ் மூவேந்தர்களும் குறுநிலத் தலைவர்களும் இத் துறையில் முயன்றுள்ளனர். பின்னர்ப் பல்லவ வேந்தரும் அவர்க்குப்பின் பாண்டிய சோழர்களும் அவர்களைத் தொடர்ந்து கருநாடக விசயநகர மன்னர்களும், அவர்க்குப்பின் முகமதிய ஐரோப்பியரும் அரும்போர் உடற்றி அலமந்தது கற்றோர் பலரும் நன்கறிந்த செய்தி; அவர்கள் திருக்கோயில்கள் கட்டியதும், திருப்பணி செய்ததும், நிவந்தங்கள் எண்ணிறந்தன செய்ததும் இது குறித்தே என்பதைப் பல்லாயிரம் கல்வெட்டுக்கள் பறையறைகின்றன. அது நினைந்தே, வள்ளற் பெருமான் “மண் முழுதும் தானாள நின்பதம் தாழ்பவர் தாழ்க” என உரைக்கின்றார். அடியேன் வேண்டுவது வானாட்சியோ மண்ணாட்சியோ அன்று; மனத்தை அடக்கி என் வயமாக்கி ஆள்வதாகிய ஒன்றே என்பாராய், “துன்பற்ற மனமது ஒன்றே நான் ஆள எண்ணி நின் தாள் ஏத்துகின்றனன்” என்றும், அந்த வன்மையை நல்கி அருள் என்றற்கு “நல்குக” என்றும் முறையிடுகின்றார். மனமாகிய நுண்கருவி நான் படைத்துக் கொண்டதன்று; நீ இவ்வுடம்பளித்தபோது உடனளித்தது; அன்றியும் நீ அளிப்பதனைத்தும் இன்பமும் நன்மையும் பயப்பனவாக, ஈதொன்று துன்பமும் நோயும் தருதலால், அதனை மாற்றி, துன்பற்ற மனமாகிய ஒன்றையருளின் அதுகொண்டு இன்பமும் நலங்களும் நிறையப் பெறுவேன் என்பது கருத்து. ஒன்றை விரும்பி வணங்கி வேண்டுவார் வேண்டுவது ஈகுவாய் என்பதற்குச் சான்றாக உமை நங்கையர் என்றும் பிரியாமை வேண்டி வழிபட்டதற்கு நின் மெய்யின் இடப்பாகத்தையே அளித்த வள்ளல் என்பாராய், “ஒண் சங்கையங்கை மான் ஆள மெய்யிடம் தந்தோய்” என மொழிகின்றார். சங்கு - சங்கை என வந்தது; பண்டு, இன்று என்ற குற்றகரம் ஐகாரம் பெற்று பண்டை, இன்றை என வருதல் போல.
துன்பற்ற மனம் கொண்டு அதனை தன் வயங்கொண்டு ஆள்வதினும் இன்பமும் நன்மையும் விளைவிக்கும் ஆட்சி வேறில்லை என்று கூறுவது பயனாம் என்பது பெற்றாம். (184)
|