236. இவ்வேளை அருள்தணிகை அமர்ந்தருளும்
தேவையென திருகண் ஆய
செவ்வேளை மனங்களிப்பச் சென்றுபுகழ்ந்
தானந்தத் தெளிதேன் வுண்டே
எவ்வேளை யும்பரவி ஏத்தேனோ
அவன்பணிகள் இயற்றி டேனோ
தெவ்வேளை அடர்க்கவகை தெரியாமல்
உழல்தருமிச் சிறிய னேனே.
உரை: பகை விளைவிக்கும் காமவேளின் செயல்களை அழிக்க வகை தெரியாமல் வருந்துகின்ற சிறுமை உடையவனாகிய யான் இப்பொழுதில் அருள்நிலைய மாகிய திருத்தணிகையில் அமர்ந்திருக்கும் தேவதேவனும் எனக்கு இரு கண்களாகிய முருகவேளுமான கந்தசாமிக்கடவுளைக் கண்டு மனம் மகிழப் புகழ்ந்து அவ்வழிச் சுரக்கும் ஆனந்தமாகிய தெளிந்த தேனை உண்டு எப்பொழுதும் வழிபட்டு ஏத்துதல் வேண்டும்; அவனுக்குரிய திருப்பணிகளைச் செய்தல் வேண்டும், எ. று.
எக்காலத்திலும் அருள் மணம் கமழ்வது திருத்தணிகை என்பாராய், “இவ்வேளை அருள் தணிகை” எனவும், அங்கே தேவர்களும் தெய்வங்களும் வந்து வணங்க வீற்றிருப்பது பற்றி, “அமர்ந்தருளும் தேவை” என்றும் சிறப்பிக்கின்றார். முருகன் ஒருவனாயினும் தனக்கு இரண்டு கண் மணியாய் விளங்குகிறான் என்பதற்கு, “எனது இரு கண்ணாய செவ்வேள்” என்றும், அவன் திருமுன் சென்று கண்களாற் கண்டு மனம் குளிரப் புகழ்ந்து, புகழுமிடத்துப் பிறக்கும் இன்பத்தை நுகர்ந்து கால வரையறையின்றி எக்காலத்தும் வணங்கி வழிபடல் வேண்டும் என்பாராய், “மனங்களிப்பச் சென்று புகழ்ந்து ஆனந்தத் தெளிதேன் உண்டு எவ்வேளையும் பரவி ஏத்தேனோ” என்றும் கூறுகின்றார். தெளிவில்லாத தேன் இன்பம் பயவாதாதலின், “ஆனந்தத் தெளிதேன்” எனவும், நினைந்த போதெல்லாம் பரவுதற்கு வேட்கை உண்டாதலால், “எவ்வேளையும் பரவி ஏத்தேனோ” எனவும் இயம்புகின்றார். வாயால் புகழ்வதும் திருப்பணியாயினும் மெய்யாற் செய்வன வேறாதலின், “அவன் பணிகள் இயற்றிடேனோ” என்று வேறுபடுத்துரைக்கின்றார். காமவேளின் செயல் வகைகள் பிறவிக்கு ஏதுவாவனவற்றையே நோக்கி இயல்கின்றனவே யன்றிப் பிறவி அறுதிக்கு மாறாதலின், “தெவ்வேள்” என்று காமதேவனைக் குறிக்கின்றார். தெவ் - பகை. பிறத்தற்குரிய உயிர்களுக்கு உடம்பு தரும் நோக்கத்தால் காம வுணர்ச்சி வலி மிக்கதாதலால், “அடர்க்க வகை தெரியாமல் உழல்கின்றேன்” என்றும் அத்துறையில் தமது அறிவு சிறுமை உறுவது தோன்றச் “சிறியேனே” என்றும் தெரிவிக்கின்றார்.
இதனால் செவ்வேளைச் சென்று கண்டு புகழ்தலையும், எவ்வேளையும் பரவுதலையும், அவனுக்கு உவப்பான பணிகளைச் செய்தலையும் விழைவதைத் தெரிவித்தவாறாம். (6)
|