த
திருவைந்தெழுத்து
“சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது” என்பர் திருமூலர். சிவம் என்பது
கடவுள் என்றும், இறைவன் என்றும், பிரமம் என்றும், பரம்பொருள் என்றும் கூறப்படும் முதற்
பொருள். அச்சிவம் என்பது ஓர் உள்பொருள் என்றும், அதனோடு தொடர்புறுவது சைவம் என்றும்,
அதனை அடைதற்கு முயலும் நெறி சிவநெறி என்றும் சைவர் கூறுவர். சிவநெறியாளர்க்கு அறிவுறுத்தப்படும்
சமயப்பொருள்கள் பரந்து கிடத்தலால் அவற்றைச் சுருக்கமாய் நினைவில் இருத்திக் கோடற்கும் எளிதில்
சிந்திப்பதற்கும் துணை புரிவது ஐந்தெழுத்து, அவை சி, வ, ய, ந, ம என்ற ஐந்துமாகும்.
இவற்றை ஒரு தொடராகவோ
சொல்லாகவோ கொள்ளாமல், எழுத்து என்பதற்கொரு காரணமுண்டு. சிவனுக்குரிய பெயர்களில் நமசிவாய
என்பது ஒன்று. சிவஞானச் செல்வத் தலைவர்களான ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர்
“நந்தி நாமம் நமச்சிவாய” “எந்தையார் திருநாமம் நமசிவாய” என உரைப்பர். இத்திருப்பெயரை
இடையறவின்றி நினைவிற்கொள்வது, சிவபரம் பொருளை நெஞ்சில் எப்போதும் எழுந்தருளுச் செய்வதாக
முடியும். அவ்வாறு செய்வதால் நெஞ்சு வேறு நினைவுகட்கு இடமாய் துன்ப விளைவுக்கு உரியதாகாது. நமசிவாய
என்ற திருப்பெயரை ஓதுங்கால். அதனால் குறிக்கப்படும் சிவபரம்பொருளின் உருவும் அருவுமாகிய தோற்றம்
நெஞ்சிடைக் காட்சிதரும்.
இத்தனை நலமுடைய திருப்பெயர்
ஐந்தெழுத்துக்கள் உள்ளன. தமிழ் எழுத்து வகை இரண்டனுள் உயிர் வகையில் அ, இ என்ற இரண்டும்;
மெய்வகையில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்துள் இரண்டும் இடையினத்துள் இரண்டும் ஆக ஐந்தும்
உள்ளன. உயிர் வகை பன்னிரண்டுக்கும் அடிப்படை அ, இ, உ என மூன்றுமாகும்; மெய்களை இயக்குங்கால்
பன்மையும் தலைமையும் உடையன அ, இ என்ற இரண்டுமாகும்; அவை இரண்டும் இப்பெயர்க்கண் பொருந்தி
மெய்களை இயக்குகின்றன. மெய்வகை மூன்றனுள், வன்மை மிகுதலின்றி மென்மையும் இடைமையுமே மிகப்பொருந்தி
நினையும் நெஞ்சுக்கு எளிமையும் இனிமையும் நல்குகின்றன. ‘சி’ என்பது வல்லெழுத்தாயினும், ஏனை
ஐந்தையும் நோக்க ஓசைவகையில் சிறிது மென்மையுற்று ஏனையவற்றோடு இசைந்து நினைக்கவும் ஓதவும்
எளிமையும் இனிமையும் உறுகின்றது. மென்மை வகை ஆறாயினும், முதல்வன் பெயர்க்குப் பொருந்த
மொழிக்கு முதற்கண்ணின்று இயங்கும் சிறப்புடையன மூன்று; அவை ஞ, ந, ம என்பன; அவற்றுள்ளும் ந,
ம என்ற இரண்டைப்போல மொழிக்கு முதலாய் நிலவும் திறம் ஞ என்ற எழுத்துக்கு இல்லை; இவ்வாறே
இடையின எழுத்து ஆறனுள் ய, வ என்ற இரண்டுமே மொழிக்கு முதலாய் நிற்கும் முதன்மை பெறுவன. எப்பொருட்கும்
முதல்வனாய் விளங்கும் சிவபரம்பொருளின் திருப்பெயர்களில் மொழிக்கு முதலாய் நின்று இயங்கும்
எழுத்துக்களேயுடைய திருப்பெயர் அழகுற அமைந்துளது. மேலும், இப் பெயருள் தனித்தியங்கும் திறமில்லாத
மெய்யெழுத்து ஒன்றேனும் இல்லாமல், மொழிமுதலாய் இயங்கும் எழுத்துக்களே எல்லாமாய் இருப்பது முதல்வன்
பெயர் முதன்மைக்கு ஏற்றம் தருகிறது. இன்னோரன்ன காரணங்களால் சிவன் பெயர் பலவற்றுள் நமசிவாய
என்பது நிகரற விளங்கும் நீர்மை நிறைந்திருப்பது யாவரும் நினைக்கத்தக்க சிறப்பாகும்.
சிவநெறியின்
அமைப்பும், அதனால் மக்கள் பயன்படும் திறமும் ஐந்து கூறுகளாக உள்ளன. அவை சிவன், உயிர், உலகு
என்ற அடிப்படை மூன்று; சிவத்தை உயிர்களோடும் உலகோடும் தொடர்புறுத்துவது சிவனது திருவருள்; உயிர்களை
உலகோடு தொடர்புறுத்துவது திருவருள் எனினும், அதற்குக் காரணம் உயிரின்கண் ஒன்றி நிற்கும் மலம்.
சிவன், உயிர், உலகு, அருள், மலம் என்ற ஐந்தையும் நன்கு ஆராய்ந்து சிந்தித்துத் தெளிவது சிவநெறியை
உள்ளவாறு உணர்ந்து ஒழுகுவதாகும். முத்தும் மணியும் பொன்னும் ஆகிய இவ்வுயரிய பொருள்கள் வேறு வேறிடத்தில்
தோன்றுவன; ஆயினும் அவற்றை ஒருசேரக் கூட்டிப் பொன்னிடைப் பதித்தவழி அருவிலை நன்கலமாய் மதிப்பும்
வனப்பும் பெறுகின்றன; அது தன்னை அணிபவர்க்கும் சிறப்புத் தருகிறது. அதுபோலவே, சிவம் முதலிய
ஐந்தும் ஒருசேர நினைந்தவழிச் சிவநெறிச் சூழலாய் நினைப்பவர்க்கு சிவஞான இன்பத்தை நல்குகின்றன.
எழுத்தால் ஐந்தாய், இயக்கத்தால் முதலாய், ஒருசேரச் சேர்ந்தவழிப் பொருளால் சிவனையுணர்த்தும்
திருப்பெயராய் அமைவது கண்ட சான்றோர் ந, ம, சி, வ, ய என்ற ஐந்தெழுத்தையும் கொண்ட முழுமுதல்
தனிப்பெயராய் நிற்கும் நமசிவய என்ற பெயரை சிறப்புடைத்தாகக் கொண்டு, அப்பெயர் சிவனைக்
காட்டுவதுடன் நில்லாமல், தனித்தனி எழுத்துகளாகிய வழி சிவநெறிக்கூறு ஐந்தினையும் குறித்தற்கு
வாய்ப்பு நிறைந்திருப்பது கண்டு பெருமகிழ்ச்சி கொண்டு ஐவகை எழுத்துக்களாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
நமசிவய என்ற திருப்பெயர்
எங்ஙனம் எழுத்தாகும்? எனின், இத்திருப்பெயரை உருவாக்கிய ந, ம, சி, வ, ய என்ற எழுத்தைந்தும்
முறையே நின்று இசைக்குங்கால், நமசிவய என்னும் சொல்லாய்ச் சிவனை உணர்த்துவது காண்கின்றோம்;
இவை முறை பிறழுமாயின் சொல்லாகாமல் தம்மை வெறிதே உணர்த்தும் எழுத்துக்களின் கூட்டமாகும்,
மரபு என்றொரு சொல்லை எடுத்து, எழுத்துக்களை புரம், ரமபு, புமர எனப் பிறழ வைத்தால் இவ்வெழுத்துக்கள்
பொருளையுணர்த்தாமல் பொருளற்ற எழுத்துக்களாம், “தன்னை யுணர்த்தின் எழுத்தாம், பிற
பொருளைச் சுட்டுதற் கண்ணேயாம் சொல்” என்ற பழைய நூற்பா ஒன்று கூறுவது இதற்குச் சான்று. இவ்வாறே
நமசிவய என்ற திருப்பெயரின் எழுத்துக்களைச் சிவயநம எனப் பிறழ நிறுத்தின் சிவபரம்
பொருளையுணர்த்தாமல் எழுத்தைந்தும் எழுத்துக் கூட்டமாகின்றன. அதனால்தான் அவற்றை ஐந்தெழுத்தென்றே
அறிந்தோர் அறிவிக்கின்றனர்.
இங்ஙனம்
பொருளைச் சுட்டாது தனித்தனி எழுத்தாமாறு செய்தலின் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பொருட்கு உரியதாக்கி,
சி என்பது சிவத்துக்கும், வ என்பது திருவருட்கும், ய என்பது உயிர்க்கும், ந என்பது மறைக்கும்,
ம என்பது உலகின் தொடர்புண்டாதற்குக் காரணமாகிய மலத்துக்கும் உரியவாக்கியுள்ளனர். இவ்வகையில்
இவ்வைந்தெழுத்துக்களும், சிவநெறியுணர்த்தும் ஐந்து அடிப்படைக்கருத்துக்களை யுணர்த்து மாற்றால்,
நினைப்பவர் நெஞ்சில் அவர்கள் சிவத்தின் திருவருளால் இயக்கப்படும் திறம் நினைத்து அதனை
மறவா உள்ளமும் ஒழுக்கமும் உடையவராகச் செய்கின்றன. சிவயநம என்றதும், நெஞ்சில் சிவ முதலிய
ஐம்பொருளும், அச் சிவத்தோடு உளதாகும் தொடர்பும் தோன்றிச் சைவவுணர்வு தழைப்பிக்கின்றன.
இக்காரணம் பற்றியே சைவர்கள் இவ்வெழுத்து ஐந்தினையும் திருவைந்தெழுத்தெனச் சிறப்பாகப் பேணி
ஓதுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
‘எழுத்துக்கள் தம்மையே
உணர்த்தாமல் பொருளைச் சுட்டுமாயின் சொல்லாம்’ என்பது கொண்டு சி, வ என்ற எழுத்துக்கள் முறையே
சிவம் திருவருள் முதலியவற்றை உணர்த்துவது கொண்டு, இவற்றைப் பதம் எனச் சான்றோர் உரைப்பதுண்டு.
“அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி” (சுந். திருவாரூர்) என நம்பியாரூரர் உரைப்பது காண்க.
ஆயினும், இது மிகவும் அருகிய வழக்கு. திருவைந்தெழுத்து என்பதே பெருகிய வழக்கு.
மேலும், இவ்வெழுத்து
ஐந்தும் ஒவ்வோர் உரிய கருத்தையறிந்து அவ்வறிவின் பயனாகிய ஞானவின்பத்தை நல்குவது கண்ட
சான்றோர், இவற்றை ‘மந்திரம்’ எனவும் மொழிகின்றனர். “ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்,
ஆயுறு மந்திரம் ஆறும் அறிகிலர்; சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும், வாயுற வொதி வழுத்தலுமாமே”
(திருமந். 2703) என வருவது காண்க. ஞானவின்பம் எய்தும் திறத்தை,
“நெஞ்சு நினைந்ததம்
வாயாற் பிரான் என்று
துஞ்சும் பொழுதுமுன்
துணைத்தாள் சரண்எணில்
மஞ்சு தவழும் வடவரை
மீதுறை
அஞ்சில் இறைவன் அருள் பெறலாமே”
(திருமந். 2708) எனத் திருமூலர்
அறிவுறுத்துவதால் அறிகின்றோம்.
இத் திருவைந்தெழுத்து
எக்காலத்து எவரால் காணப்பட்டது என இந்நாளைய சைவ இளைஞர் வினவுகின்றனர். அவரது கேள்வி காலத்தொடு
பட்ட நன்றியே; சைவ சமயம் உருவாகி மக்கட்கு அறிவுறுத்தப்பட்ட போது இத் திருவைந்தெழுத்தும்
காணப்பட்டது; ஆனால், சைவம் தோன்றிய நாள் வரலாற்றுக் கால எல்லையில் அடங்குவதன்று; இன்ன
காலத்து இச்சான்றோரால் காணப்பட்டது சைவம் எனக் காண்டற்கு ஒரு குறிப்பும் இன்றுவரை காணப்படவில்லை.
பௌத்தமும் சயினமும் போலச் சைவம் ஒருவரால் நிறுவப்பட்டது என்போர் சிலர். தமிழிற் காணப்படும்
சமய நூல்களில் பழமை வாய்ந்தது திருமூலர் திருமந்திரம்; சங்க இலக்கியங்களில் சைவக்
குறிப்புக்கள் உண்டெனினும், அவை சமய நூல்களல்லவாதலின், சைவத்தின் கொள்கைகள் அனைத்தும்
சங்க இலக்கியங்களிற் காணப்படுவதில்லை; தொல்காப்பியமும் அப்பெற்றியது.
திருமந்திரம் திருவைந்தெழுத்தை
எடுத்துரைக்கும் திறத்தை இங்கே இடையிடையே கண்டுள்ளோம். திருமந்திரத்துக்குப்பின் தோன்றிய
சைவத் திருமுறைகள் திருவைந்தெழுத்தின் சிறப்பைப் பொதுவாகவும் சிறப்பாகவும் விரித்துக் கூறியுள்ளன.
அவற்றுள் திருஞான சம்பந்தருடைய திருமுறைகள், திருவைந்தெழுத்தின் முதலாக விளங்கும் நமசிவாய என்ற
திருப்பெயரைப் பொதுவாக நிறுத்தி,
“காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்
குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொ
ருளாவது
நாதன் நாமம் நமச்சி
வாயவே”
எனத் தொடங்கிப் பல பாட்டுக்களில்
சிறப்பிக்கின்றன. சிறப்புவகையில் திருவைந்தெழுத்தை எடுத்து,
“துஞ்சலும் துஞ்ச
லிலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின்
நாடொறும்
வஞ்சம் அற்று அடிவாழ்த்த
வந்த கூற்று
அஞ்ச உரைத்தன அஞ்செ ழுத்துமே”
எனவரும் திருப்பாட்டுக்களால்
வற்புறுத்துயுள்ளார் திருஞானசம்பந்தர். இவ்வாறே திருநாவுக்கரசரும் நம்பியாரூரரும் மணிவாசகப்
பெருமானும், பிற திருமுறையாசிரியர்களும் பலவகைப் பாட்டுக்களால் பாடிப் பரவி இருக்கின்றனர்.
அப்பெருமக்கள் காட்டிய சைவச் செந்நெறி நெறியில் வந்த சான்றோராதலால், வடலூர் அடிகளும், திருவைந்தெழுத்தைப்
பல பாட்டுக்களில் பாடுகின்றார். அவற்றை முறையே காணலாம்..
191. படைக்கும் பெருந்தெய்வம் பிரமன் என்றும், காக்கும் பெருந் தெய்வம் திருமால் என்றும்
புராணங்கள் கூறுகின்றன. உலகைப் படைப்பதும், காப்பதும் இத் தெய்வங்களால் நிகழ்கின்றன என்பது
பௌராணிகக் கொள்கை. அந்நிலையில் அப்பெருந் தெய்வங்கள் படைத்தல், காத்தல் என்ற தொழில்களைச்
சிவனது ஆணைவழி நின்றே செய்கின்றன; அவர்களை இயக்கி ஆள்பவன் சிவன் என்று சிவபுராணங்கள் செப்புகின்றன.
அதுபற்றி வள்ளலார் சிவனது திருப்பெயர் கொடு காணப்பட்ட திருவைந்தெழுத்து சிவமாம் நிலைமையில்
இருப்பது தெளிந்து, திருமாலும் பிரமனும் தமக்குரிய தொழிலைச் செவ்வையாகச் செய்தற்குத் திருவைந்தெழுத்துக்
காரணம் எனத் தெரிவிக்கின்றார்.
2361. தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப்
பாலுண்ட செம்மணியைக்
சீரோங்கு முத்துச் சிவிகையின்
மேல்வைத்த தேவஉன்றன்
பேரோங்கும் ஐந்தெழுத் தன்றோ
படைப்பைப் பிரமனுக்கும்
ஏரோங்கு காப்பைத் திருநெடு
மாலுக்கும் ஈந்ததுவே.
உரை: சீர்காழிப்பதியில் மெய்ம்மை சான்ற ஞானப் பாலையுண்ட செம்மணி போலும் திருஞானசம்பந்தரைச் சிறப்புமிக்க முத்துச்சிவிகையில் எற்றுவித்த தேவதேவனே, நமச்சிவாய என்ற நின் பெயரிடத்துப் பொருந்திய எழுத்துக்கள் ஐந்துமன்றோ பிரமனுக்குப் படைக்கும் தொழிலையும், திருமாலுக்குக் காக்கும் தொழிலையும் தந்துள்ளன. எ.று.
“தேராரும் நெடு வீதித் திருத்தோணி புரத்துறையும் நீராரும் சடையார்” என ஞானசம்பந்தரே கூறுதலால், “தேரோங்கு காழி” என உரைக்கின்றார். மெய்ஞ்ஞானம், சிவஞானம். “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்” எனச் சேக்கிழார் தெரிவிக்கின்றார். ஞானப்பால் உண்டபின் திருஞானசம்பந்தர் எய்திய நிலையை, “தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும், தாவில் தனித் திருஞானசம்பந்தராயினார்” என்று சேக்கிழார் கூறுவது இங்கே நினைவு கூரத்தக்கது. செம்மணி, சிவந்த மாணிக்கமணி. செம்மேனியம்மானாதலால் திருஞானசம்பந்தரைச் “செம்மணி” எனச் சிறப்பிக்கின்றார். திருவரத்துறைக்கு எழுந்தருளுவான் போந்த ஞானசம்பந்தர், முத்துச்சிவிகை வரப்பெற்று வியப்பு மேலிட்டுச் சிவனை நினைந்து, திருவைந்தெழுத்தை ஓதி ஏறினார்.
“சேதிருத்தின் சிவிகை சூழ்வந்துபார் மீதுதாழ்ந்து வெண்ணீற்றொளி போற்றிநின்று ஆதியார் அருளாதலின் அஞ்செழுத்து ஓதி ஏறினார் உய்ய உலகெலாம்”
என்று அவரது வரலாறு கூறுகிறது. அதனை நினைந்தே வள்ளலார், “முத்துச் சிவிகையின்மேல் வைத்தது உன்றன் பேரொங்கும் ஐந்தெழுத்தன்றோ” என உரைக்கின்றார். ஐந்தெழுத்துக்கும் இடம் நமசிவாய என்ற திருப்பெயர் என்னும் உண்மை விளங்க, “உன்றன் பேரோங்கும் ஐந்தெழுத்து” எனப் புகல்கின்றார். படைப்பினும் காத்தல் தொழில் மாண்பு பெரிதுடைத்தாதலின் “ஏரோங்கு காப்பு” என உரைக்கின்றார். சிவனை நோக்க, பிரமனும் திருமாலும் தாழ்ந்தவரென்ற குறிப்பால் “ஈந்ததுவே” என உரைக்கின்றார்.
இதனால், பிரமனுக்குப் படைப்பாற்றலையும், திருமாலுக்குக் காப்பாற்றலையும் தந்தது திருவைந்தெழுத்து என்பது கூறியவாறாம். (191)
|