192
192. சிவபுராணங்கள், தேவர்கட்குத் தலைவர்களாகிய பிரமன் திருமால் முதலியோர்கள்,
அசுரர்கள் ஆற்றல்மிக்கு வருந்துங்கால், அருந்துயர்க்குள்ளாகி வருந்துவர் எனக் கூறுகின்றன. அக்
காலங்களில் அவர்கள் சிவனை அடைந்து முறையிடுவர். அப்பெருமானும் உங்கட்கு வந்த துன்பங்கள்
யாவையென்று முறையே வினவி, அவற்றினின்றும் உய்ந்து இடர் தீர்தற்கு உதவுவர். இது காலந்தோறும்
நடந்து வந்துள்ளது. இவ்வாறு தேவர்கள் செய்யும் முறையீட்டைக் கேட்டு உதவுவதும், முறையிடுதற்கு
முன்பே சிவன் தானே பேரருளால் அவர்களை அடைந்து அவர்கள் உறுகின்ற துன்பங்களை அறிந்து
போக்குவதும் உண்டு. இந்நிகழ்ச்சிகளை எண்ணுகின்றார் வடலூர் வள்ளலார். தேவர்களின் வேதனை
காரணமாக அவர்பால் போதலைக் காணும்போது, மண்ணகத் துயிர்களாகிய எம்பாலும் நீ வந்து அருள் செய்வாய்
என்று எண்ணினோம். அதனால் மிகவும் மனம் நைந்து கூவியழைத்தோம்; இப்போதும் கூவி அழைக்கின்றோம்.
எமது அருளைப் பெறுதற்கு மண்ணியல் அறிவு மாத்திரம் அமையாது; திருவருள் ஞானம் வேண்டும்; அதனை
நல்லாசிரியன் தரப் பெறல் வேண்டும் எனின், அவன் எங்குள்ளான்? எவ்வாறு அவன் அருளுவன்? என
வினாக்கள் அடுத்து எழுகின்றன. அவன் இருக்குமிடத்தை நீ அறிய முடியாது; அவன் தானே உன்பால்
வருவான் என ஞான நூல்கள் நவில்வதை நினைக்கின்றார். அவன் உரைக்கக் கருதும் ஞானத்தை ஒன்றியிருந்து
கேட்டுச் செயற்பட்டுப் பயன்பெறும் திறம் மாணவனிடம் உண்டா என்று சோதிப்பன்; ஒன்றியிருந்து
கேட்கும் திறம் வேறு; செயற்படும் திறம் வேறு. ஏனெனில் “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய
வண்ணம் செயல்” என்பது தமிழ்மறை. சொல்லுதல், கேட்டல்
இல்லாதபோது நிகழாது; ஆதலால், கேட்டல் சொல்லுதலுக்கு இனமாம். ஆகவே, சொல்லுதல் யார்க்கும்
எளிய எனின், கேட்டலும் எளிய என்பதும், கேட்டது கேட்டாங்குச் செய்தல் அரியவென்பதும் பெறப்படும்.
படவே, செயல் திறம் வேறொன்றும், அதனை ஆராய்ந்து காண்பது முறை என்றும் அறிகின்றோம். ஆராய்வது
முறையாதலால், அஃது இன்னமும் ஏன்? எத்துணையோ வேதனைகளின் வாயிலாக அச் சோதனை நிகழ்ந்திருக்குமே
என முறையிடுகின்றார்.
2362. வேதனை யாமது சூதனை
யாஎன்று வேதனையால்
போதனை யாநின் றுனைக்கூவு
மேழையைப் போதனைகேள்
வாதனை யாதிங்கு வாதனை
யாவென்றுன் வாய்மலரச்
சோதனை யாயினுஞ் சோதனை
யாசிற் சுகப்பொருளே.
உரை: சிற்சுகப் பொருளாய் உள்ளவனே, படுகின்ற வேதனையறிந்து, பிரமனையும் திருமாலையும் உங்கள் துன்பம் யாவையென்று நீக்குதற்கு நீ அவர்பால் போதலைப் புராணங்கள் சொல்லக் கேட்டு, எமக்கும் அவ்வாறு அருள்வாய் என நினைந்து மனம் நைந்து உன் திருப்பெயரைப் பன்முறையும் ஓதியழைக்கும் ஏழையாகிய என்னை “வா மகனே, உனக்குற்ற வாதனை யாது? நான் சொல்லும் போதனையைக் கேள்” என்று சொல்லுதற்கும் சோதனை வேண்டுமா? வேண்டிய சோதனைகள் யாவை, தெரிவித்தருள்க. எ.று.
சிற்சுகம் - அறிவின்பம். வேதன் - பிரமன். மதுசூதன் - திருமால். வேதனை - துன்பம். போதனை - அறிவுரை. தனையன் -மகன். தன் தந்தையின் பெயரையுடைய னாதலால், மகனைத் தனையன் என்பது வழக்கு. “பிறந்தோன் பெயரன் பிறந்த மாறே” (நற். 40) என்பது காண்க. யா, யாது என்பதன் பன்மை வாய்பாடு. வாய்மலர்தல் - சொல்லுதல். பிரமனும் திருமாலும் பெருந்தவத்தால் உயர்ந்து பிரமபதம் வைகுந்த பதம் பெற்றவர் என்பது பற்றி, அவர்படும் வேதனை காரணமாகச் சிவபெருமான் இரங்கி அவர்பாற் செல்வதுண்டு எனச் சிவபுராணங்கள் கூறுதல் பற்றி, வேதனையும் மதுசூதனையும் 'வேதனையா' என்று கேட்கப் போதல் என்று கூறுகின்றார்.
படைத்தல் காத்தல் என்ற பெருந்தொழிலைச் செய்யும் அறிவாற்றல்களையுடைய தேவர்க்ளபால் நீ போதலைக் கேட்கும்போது, அறிவும் ஆற்றலும் இல்லையாய் ஏழையாகிய எங்களிடம் வந்தருளுவது நின் பேரருட்கு ஒத்ததாகும். அதனைச் செய்யாமையாலும் வேதனை மிகுதியாலும் யாங்கள் மனம் நைந்து அழைக்கின்றோம் என்பாராய், “நையா நின்றும் கூவும் ஏழை” என நம் பொருட்டு உரைக்கின்றார். ஞானசம்பந்தரும், “பிழையா வண்ணங்கள் பாடிநின்றாடுவார், அழையாமே அருள் நல்குமே” (திருவோத்) என உரைப்பது காணலாம்.
திருநாவுக்கரசர். பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால், இவனை எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே” (தனி. விருத். 9) என்பர். அழைப்பாரை அருளும் திறம் இது என்பாராய், போதனை கேள், வாதனையா? இங்கு வாதனையா என்று வாய் மலர்தல் வேண்டும்” என்று சொல்லி, சொல்லாமையும் சோதனை போலும் என்று கேட்பராய் சோதனை யாயினும்” என அதற்கும் உடன்பட்டு, இனியும் நீ சோதனை செய்வதாயின் அச்சோதனைகள் யாவை என்பாராய், “சோதனை யா?” என வினவுகின்றார். சோதனை வகைகளை முன்னரே அறிந்து கொண்டால், அவற்றிற்கு ஒத்த வகையில் வழுவாமல் நடந்து கொள்வேன்; அருள்புரிக என்பது இதன் கருத்தாம். (192)
|