238. முன்னேனோ திருத்தணிகை அடைந்திடநின்
சந்நிதியின் முன்னே நின்று
மன்னேனோ அடியருடன் வாழேனோ
நின்அடியை வாழ்த்தி டேனோ
உன்னேனோ நன்னிலையை உலகத்தோர்
எல்லீரும் உங்கே வாரும்
என்னேனோ நின்பெயரை யார்கூறி
னாலும்அவர்க் கிதங்கூ றேனோ.
உரை: திருத்தணிகைப் பதியை வந்து சேர்தற்கு என் நினைவு உட்பட வேண்டும், அங்கே நின் சந்நிதியின் எதிரே வந்து நின்று நிலை பெற வேண்டும், அது மட்டுமின்றி அன்புடைய அடியார்களோடு கூடி உறைதல் வேண்டும், அவர் உள்ளத்தில் எழுந்தருளும் உன் திருவடியை வாழ்த்த வேண்டும், ஞான நல்நிலையை உள்ளத்தில் நினைத்தல் வேண்டும், அந்நினைவின்கண் எழும் இன்பத்தைப் பெறும் பொருட்டு உலக மக்களை நோக்கி நீங்கள் எல்லோரும் வாருங்கள் என்று அழைத்தல் வேண்டும், நின் திருப்பெயரை யார் கூறினாலும் மகிழ்ந்து அவர்கட்கு இனிய சொற்களைச் சொல்லுதல் வேண்டும்; இது என் விருப்பம், எ. று.
மனத்தின்கண் நிகழும் நினைவுகள் பல தலையாக ஓடி அலைவதால் அவற்றை ஒருமைப் படுத்தி நன்னிலைக்கண் நிறுத்துவது அருமை யாதலால், திருத்தணிகை அடைதற்கு அவ்வொருமைப்பாடு இனைறியமை யாமையின், “திருத்தணிகை அடைந்திட முன்னேனோ” எனவும், சந்நிதி அடைந்து முருகப் பெருமானுடைய அருட் காட்சியில் ஈடுபட்டு ஒன்றி நிலைபெற வேண்டும் என்பதற்காக, “நின் சந்நிதியின் முன்னே நின்று மன்னேனோ” எனவும், அப்பயிற்சி நீங்காமல் இருத்தற் பொருட்டு, அடியாருடன் கூடியிருப்பது வேண்டப்படுவது பற்றி, “அடியாருடன் வாழேனோ” எனவும், அந்நிலைக்கண் ஞான இன்பம் பெறுதற் பொருட்டு “நின் அடியை வாழ்த்திடேனோ” எனவும் கூறுகின்றார். முருகன் திருவடியை வாழ்த்துவதால் உளதாகும் ஞான வின்ப நிலையை நினைவில் பலகாலும் நினைந்து இன்புறும் திறம் விளங்க, ‘நன்னிலையை உன்னேனோ’ என்றும், நான் பெற்ற அவ்வின்பத்தை உலகத்தவர் பெற்று உய்தல் வேண்டும் என்பதற்காக அவர்களை நோக்கி அன்புடன் கூவி அழைத்து உடன் நுகர்விக்க ஆர்வம் உளதாகலின் அவர்களைப் பார்த்து, “மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினோ” என மணிவாசகரும், “சேரவாரும் செகத்தீரே” எனத் தாயுமானவரும், ஞானவின்பத்தில் திளைக்கும் போது கூறுவது போல வள்ளற் பெருமானும், “உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும் என்னேனோ” என்று கூறுகின்றார். அன்புடையார் எல்லாரும் தம்மால் அன்பு செய்யப் பட்டாருடைய பெயர் கூறக் கேட்பதிலும் அவர் ஊர்ப் பெயர் கூறக் கேட்பதிலும் ஆர்வம் கொள்வது இயல்பாதலின், “நின் பெயரை யார் கூறினாலும் அவர்க்கு இதம் கூறேனோ” என்று உரைக்கின்றார். “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள், மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள், பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்” எனத் திருநாவுக்கரசர் கூறுவது காண்க.
இதனால் அன்பு மேலீட்டால் செய்யும் செயல்கள் தம்மிடத்தும் உண்டாக வேண்டுமென்று விரும்பியவாறாம். (8)
|