பக்கம் எண் :

239.

     கூறேனோ திருத்தணிகைக் குற்றுனடிப்
          புகழதனைக் கூறி நெஞ்சம்
     தேறேனோ நின்அடியர் திருச்சமுகம்
          சேரேனோ தீராத் துன்பம்
     ஆறேனோ நின்னடியன் ஆகேனோ
          பவக்கடல்விட் டகன்றே அப்பால்
     ஏறேனோ அருட்கடலில் இழியேனோ
          ஒழியாத இன்பம் ஆர்ந்தே.

உரை:

     பெருமானே! திருத்தணிகைப் பதியை அடைந்து உன்னை வழிபட்டு உன் திருவடியைப் புகழும் புகழ் உரைகளை வாயாரச் சொல்ல வேண்டும், அவ்வாறு சொல்லி என் நெஞ்சம் தெளிவு பெற வேண்டும். எனக்கு உறவினராகிய அடியார்களின் திருமுன்பு சென்று சேர வேண்டும். சேர்ந்து என்னை பற்றி நீங்காமல் நின்று வருத்தும் துன்பம் தொலைய வேண்டும். அதனோடு நினக்கு உரிய அடியவரும் ஆக வேண்டும். ஆகிநான் பிறவியாகிய கடலில் நீந்திக் கரையாகிய திருவடியை அடைய வேண்டும். அதன் பயனாகக் குறையாத இன்பம் நுகர்ந்து அருட் கடலில் நான் இறங்கி மகிழ வேண்டும், எ. று.

     தணிகைப் பதியை அடைந்த விடத்து முருகப் பெருமானுடைய திருக்கோயில் அவனுடைய திருமுன்பு ஆதலால், “திருத்தணிகைக்குற்று” என்றும், அங்கே அப்பெருமானுடைய திரு முன்பில் காட்சிப் படுவது ஞான மூர்த்தமாகிய அவனுடைய திருவுருவம் ஆதலின் அதன் திருவடியைப் புகழும் புகழ் உரைகள் நினைவில் எழுதலால், “உன் அடிப் புகழதனைக் கூறேனோ” என்றும் உரைக்கின்றார். புகழ்களைக் கூறுமிடத்து அப்பெருமானது அருட் செயல் வகைகளை நெஞ்சம் எண்ணி ஒருமுகப்பட்டுத் தெளிந்து விளக்கம் பெறுதலின், “உன் அடிப் புகழதனைக் கூறி நெஞ்சம் தேறேனோ” எனவும், தெளிவுறும் போது முருகனுடைய அடியார் கூட்டத்தின் பெருமை மிக்குத் தோன்றுவதால், அதனை யடைய எழும் விருப்பத்தை, “நின் அடியர் திருச்சமுகம் சேரேனோ” எனவும், அவர் கூட்டத்து உண்மை உறவால் துன்பமெல்லாம் மறந்து திருவருள் இன்பத்திலேயே மனம் திளைத்தலால், “தீராத் துன்பம் ஆறேனோ” எனவும், ஆறிய வழி அப்பெருமானது திருவடிக்கே நெஞ்சம் இடமாதலின், “நின் அடியன் ஆகேனோ” எனவும் சொல்லுகின்றார். பிறப்புத் துன்ப வழியினதாகலின் பிறப்பு அறுங்காறும் தீரா இயல்பு பற்றிப் பிறவித் துன்பம் தீராத் துன்பம் எனப்படுகிறது. அடியன் - திருவடியை நெஞ்சில் உடையவன். கரை காணாது அகன்று ஆழ்ந்திருத்தலின் பிறப்பைப் ‘பாவக் கடல்’ என்று குறிக்கின்றார். பிறவிக் கடலுக்குக் கரை இறைவன் திருவடி என்பர் திருவள்ளுவர். பவக்கடல் கடந்து அக்கரையாகிய திருவடி அடைபவன் நீங்காத ஞான வின்பம் நல்கும் அருட் கடலில் இறங்கி இன்புறுவன் ஆதலால், “ஒழியாத இன்பம் ஆர்ந்து அருட்கடலில் இழியேனோ” என்று வேண்டுகிறார். பிறவிக் கடலைக் கடப்பார்க்கு ஞானம் துணையாதலின் கடந்த வழி அடைவது ஞானானந்தம் என்பது பற்றி, “ஒழியாத இன்பம் ஆர்ந்து” என்றும், அவ்வின்ப நுகர்ச்சிக்கு உரிய இடம் திருவருள் ஆதல் பற்றி, “அருட் கடலில் இழியேனோ” என்றும் இயம்புகின்றார்.

     இதனால் தணிகை முருகன் புகழ் உரைத்து அவருடைய தொண்டர் கூட்டத்தை அடைந்து, அவருள் ஒருவனாதல் வேண்டும், அதன் வாயிலாக திருவருட் பேறு எய்தல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டவாறாம்.

     (9)