229
229. உலக வாழ்வு உருளாழி போல்வது; காலையில் எழுந்து பகல் செய்யும் ஞாயிறு மாலையில் மறைந்து
இரவை வருவித்தலும் மீளக் காலையில் தோன்றி மாலையில் மறைவதும் செய்ய, மக்களுயிர் உண்பதே
உண்டு உடுப்பதே உடுத்து உழைத்தலும் உறங்குதலுமே செய்யுமாற்றால் சுழன்ற வண்ணம் இருக்கிறது.
சுழற்சியில் அகப்பட்டவன் நேர்பட நிற்கவோ நடக்கவோ முடியாமல் தள்ளாடுவான்; அவனைப்போல்
வாழ்க்கைச் சுழற்சியால் மக்கள் மனமும் உணர்வும் நேர்மை நெறியிற் செல்லாமல் பிறழ்ந்து
இடர்ப்படுவதால் தவறுகள் செய்து துன்பத்துக்கு இரையாகின்றனர். உலகின் அளப்பரிய பரப்பும் அளவிறந்த
நிகழ்ச்சிகளும், வாழ்க்கைச் சுழற்சியை அறியமுடிவதில்லை; செய்வன செய்வதிலேயே சிந்தையும்
மொழியும் சிக்கியிருப்பதால், சுழற்சியை உணர்ந்து அதனின் நீங்கமாட்டாமல் சுழன்று கொண்டே
யிருக்கின்றோம். தெளிந்த ஞானிகளே இதனை முழுதுணர்ந்து உய்திபெறும் உரவோர்களாய் உள்ளனர்.
அவர்களைத் திருவருள் பற்றி நிறுத்துத் தெளிவருளி இன்பப் பேற்றுக்குரிய நன்னடை நல்குகிறது. மண்ணகத்து
மக்கள் வாழ்க்கைச் சுழற்சியாற் மயங்கித் தள்ளாடிய நடை கொண்டு துன்புறுவதையும்; அவருள்
ஞானிகளாய் உள்ளவர்கள் அருளொளிபெற்று நன்னடை கொண்டு இன்புறுவதையும் நோக்கிய வடலூர்
வள்ளல், தமக்கு அந்த நன்னடை நல்குதல் வேண்டுமென முறையிடுகின்றார்.
2399. கள்ளா டியகொன்றைச் செஞ்சடை
யோய்நற் கனகமன்றின்
உள்ளா டியமலர்ச் சேவடி
யோய்இவ் வுலகியற்கண்
எள்ளா டியசெக் கிடைப்படல்
போல்துன் பிடைஇளைத்துத்
தள்ளா டியநடை கொண்டேற்கு
நன்னடை தந்தருளே.
உரை: கொன்றைமாலை சூடிய செஞ்சடையுடையவனே, மன்றினுள் ஆடும் மலர்ச் சேவடியுடையவனே, எள்ளாட்டும் செக்கிடைப்பட்டது போல உலகியல் துன்பத்தின் இடைப்பட்டு உள்ளமும் உடலும் இளைத்துத் தள்ளத்தக்க நடை கொண்டியலும் எனக்குக் கொள்ளத் தக்க நன்னடை தந்தருள வேண்டுகிறேன் எ.று.
மின்போல் ஒளிரும் சடைமுடியில் பொன்போலும் நிறமும் நிறைந்த தேனுமுடை கொன்றைமாலை அழகுசெய்யப் பொன்வேய்ந்த அம்பலத்தில் ஆடுவது நினைந்து பரவுவது விளங்க, “செஞ்சடையோய்” என்றும் “மன்றினுள் ஆடிய சேவடியோய்” என்றும் சிறப்பிக்கின்றார். திருக்கூந்தல் சடைபரந்து ஆடுங்கால் கொன்றைமாலையில் தேன் பலிற்றுவது உணர்ந்து “கள்ளாடிய கொன்றை” என்று கூறுகின்றார். உண்டவழிக் களிப்பு உண்டாக்குவது பற்றித் தேனைக் கள் என்று குறிக்கின்றார். மின்போல் செந்நிறமும் செவ்வொளியும் உடைமை புலப்படச் “செஞ்சடையோய்” என்று உரைக்கின்றார். திருக்கூத்து ஆடும் மன்றம் பொன்வேய்ந்திருப்பது பற்றிக் “கனகமன்று” என்றும், அதன் வரம்பினுள் நின்று ஆடுதலால், “கனகமன்றினுள் ஆடிய சேவடியாய்” என்றும் கூறுகின்றார். செந்தாமரை போல்வதென்றற்கு “மலர்ச்சேவடி” எனப்பட்டது. ஆடும் திருவடி சிவப்பது செயற்கை யாதலால், அதனை விலக்கி, செம்மலர்போல் இயல்பாகவே சிவந்த தென்றற்கு “மலர்ச்சேவடி” என்று சொல்லி மகிழ்கின்றார். ஏனைக் கோட்டைகளை ஆட்டும் செக்குகளை நீக்கி எள்ளாட்டும் செக்கைக் கூறியது, அதன் செக்குக் கல்லாலும் உலக்கை மரத்தாலும் அமைந்து நுண்ணிய வடிவிற்றாகிய எள்ளை நசுக்கி எண்ணெயை வெளிப்படுத்தும் வண்மை மிகவுடைமைபற்றி என அறிக. ஏனைப் புன்கு தெங்கு இலுப்பை முதலியவற்றை ஆட்டும் செக்குகள் மரச்செக்குகள். உலகியல் வாழ்க்கை, எள்ளாட்டும் செக்குப்போல நசுக்கித் துன்புறுத்துவது விளங்க எள்ளாடிய செக்கிடைப்படுவதை எடுத்துக் காட்டுகின்றார். தள்ளாடுவது, நேர்பட நிற்றலும் நேர்வழிச் சேறலுமின்றி நடைபிறழ்வது. திருவருட் பேற்றுக்குரிய செந்நெறியறிந்து செல்லுதலின்றித் தீநெறிப்பட்டுத் திகைப்புண்டு இயங்குவதை இங்கே “தள்ளாடிய நடை கொண்டேன்” என்று கூறுகின்றார்.
இதனால் தள்ளாடி நடப்பார்க்குச் சார்புபோல நின் திருவருள் வேண்டுமென்பது பயன். (229)
|