பக்கம் எண் :

240.

    தேடேனோ என்நாதன் எங்குற்றான்
        எனவோடித் தேடிச் சென்றே
    நாடேனோ தணிகைதனில் நாயகனே
        நின்னழகை நாடி நாடிக்
    கூடேனோ அடியருடன் கோவேஎம்
        குகனேஎம் குருவே என்று
    பாடேனோ ஆனந்தப் பரவசம்உற்
        றுன்கமலப் பதம்நண் ணேனே.

உரை:

     தணிகைமலைத் தலைவனே, எனக்குத் தலைவன் எங்குள்ளான் என எங்கும் ஓடித்தேடல் வேண்டும்; தேடிச்சென்று உன்னைக் கண்டு உன் அழகைப் பார்த்து இன்புற வேண்டும்; பன்முறையும் பார்த்துப் பயில்வதன் பயனாய் நின் அடியார்களோடு கூடி மகிழ வேண்டும். கோவே, எங்கள் குகனே, எங்கள் குருவே என்று வாயாரப் பாட வேண்டும். பாட்டின் பொருளிலும் இசையிலும் ஈடுபட்டுப்பரவசமாகி உன் தாமரை போன்ற திருவடிகளை அடைய வேண்டும், எ. று.

     மக்கள் புறக்கண்களுக்கு ஞானத் திருவுருவம் தோன்றுவ தில்லை யாதலின், “என்நாதன் எங்கு உற்றான் எனவோடித் தேடேனோ” என்று சொல்லுகின்றார். தனக்குத் தலைவன் ஒருவன் உளன் என்பது தெரிந்தால் அவனிருக்குமிடம் அறிந்து சென்று காண்பதற்கு நல்லறிவு மக்களை இயக்குமாதலின், அவனை தேடிப் போவது இயல்பாதலால் இவ்வாறு கூறுகின்றார் எனினும் அமையும். காண்பது நாட்டமாதலின், “சென்று நாடேனோ” என்றும், அவனது அழகு வரம்பின்றிப் பெருகுதலின், “அழகை நாடேனோ” என்றும் நவில்கின்றார். நாடிக் காண்பதற்கும் காட்சி நின்று நிலைபெறுதற்கும் துணையாவார் அடியார்கள் ஆதலால், “நாடி அடியருடன் கூடேனோ” எனவும், அடியார் கூட்டத்துடன் காணுமிடத்து அவன் திருப்புகழ் பாடப்படுவது பற்றிக் “கோவே எம் குகனே என் குருவே என்று பாடேனோ” எனவும், பாடப்படும் பாட்டால் உள்ளம் பரவசமாதலின், “ஆனந்த பரவச முற்று” எனவும், உலக வாழ்வின் நீங்கி அவன் திருவடி நீழல் வாழ்வு பெறுதற்கு ஆர்வம் பெருகுதலால், “உன் கமலப் பதம் நண்ணேனோ” எனவும் இசைக்கின்றார்.

     இதனால் முருகனிருக்கும் இடம் தேடிச் சென்று கண்டு அவன் அடியருடன் கூடிப் பாடி அவன் திருவடி அடையும் வேட்கையை விளம்பியவாறு காணலாம்.

     (10)