230
230. முற்றிய இளைமயும் செல்வச் சிறப்புமுடைய மக்களினத்தை நோக்குகிறார் வடலூரடிகள். மகளிர்
கூட்டத்தில் மயங்கி அவர் சூழலையே விரும்பியுறையும் அவர்கள் மனத்தில் காமக்கலப்பின் கவர்ச்சியே
நிறைந்திருப்பது காணப்படுகிறது. அவர்களுடைய நினைவும் சொல்லும் மகளிர் கூட்டம் பற்றியே நிற்பது
கண்டு, அவை இறைவன் திருவைந்தெழுத்திற் பதிந்த நினைவாகவும் ஓதும் செயலாகவும் இருக்குமாயின்
அவரிடைத் தோன்றி நிலவும் இன்பமிகுதியை எண்ணுகின்றார்., நல்லின்பம் ஓங்கிடுமே என நயந்துரைக்கின்றார்.
2400. மருக்கா மலர்க்குழல் மின்னார்
மயல்கண்ட மாருதத்தால்
இருக்கா துழலுமென் ஏழைநெஞ்
சேஇவ் விடும்பையிலே
செருக்கா துருகிச் சிவாய
நமஎனத் தேர்ந்தன்பினால்
ஒருக்கால் உரைக்கில் பெருக்காகும்
நல்லின்பம் ஓங்கிடுமே.
உரை: நெஞ்சே, மகளிர் மயக்கம் என்னும் சண்டமாருதத்தால் தாக்குண்டு உழலும் நீ, அத் தாக்குதற்கண் உளவாகும் துன்பங்களிலே கிடந்து மயங்காமல் மனம் உருகி, பற்றலாவது சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தே என தெளிந்த அன்பு மிகுந்து ஒருமுறை ஓதுவாயாயின், பெருக்கெடுத்து வரும் நல்லின்பம் ஓங்கி நிற்கும் எ.று.
மருக்காமலர் - மணம் கமழும் சோலைகளிற் பூத்த பூக்கள்; மின்போல் இடையுடைமைபற்றி இளமகளிரை “மின்னார்” என்பது நூல் வழக்கு. மகளிர்பால் உண்டாகும் காமவேட்கை அறிவை மயக்குவதுபற்றி “மயல்” என்றும், அதனால் உணர்வும் ஒழுக்கமும் ஒரு நெறிப்படாது அலைப்புண்பதும், எண்ணும் எண்ணமெல்லாம் அதுவாய் எங்கும் திரிந்து எய்ப்பதும் பற்றி, மயக்குற்ற நிலையைச் சண்டமாருதத்தால் சலிப்புண்ட நிலை என்றும் உரைக்கின்றார். புயலிற் சிக்குண்ட துரும்புபோல நெஞ்சம் வன்மைக் குன்றிக் காற்றாடிபோலக் கலங்குமாறு புலப்பட, “இருக்காது உழலுமென் ஏழை நெஞ்சே” என உரைக்கின்றார். எழுந்த வேட்கைத்தீ அவியாது அதுவே நினைந்து அல்லற்படுத்துவதுபற்றி, “இவ் விடும்பையிலே செருக்காது” எனக் கூறுகின்றார். செருக்குதல் - இங்கே மயங்குதல் என்னும் பொருளது; “ஒண்மையுடையம் யாம் என்னும் செருக்கு” (குறள் 844) என்ற விடத்திற்போல.
இன்பப் பேற்றிற் செல்லும் உள்ளம் மகளிர் இன்பத்தை நுகர்ந்த வழி அதற்கே அடிமையையாய் வீழ்ந்து அதன்கண் மூழ்கித் திளைப்பதுபோல திருவைந்தெழுத்தை வுணர்ந்து அதனைச் சிந்தித்தவழிப் பிறக்கும் இன்பத்தில் ஆழ்ந்தவழி இன்பம் சுரந்து பெருகுவது ஒருதலையென்றற்கு “அன்பினால் தேர்ந்து உரைக்கிற் பெருக்காகும் நல்லின்பம் ஒங்கிடுமே” என ஓதுகின்றார். நினைந்து நெஞ்சு உருகினாலன்றித் திருவைந்தெழுத்தின் சிறப்புப் புலனாகாமை விளங்க, “உருகத் தேர்ந்து” என உரைக்கின்றார்., “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது” என ஞானசம்பந்தர் நவில்வது ஈண்டு நினைக்கற்பாலது. அன்பினால் ஒருகால் உரைக்கில் சிவஞான இன்பம் பெருக்கிட்வரும் என்ற கருத்துப் புலப்படற்கு “பெருக்காகும் நல்லின்பம்” எனப் பேசுகின்றார். ஞானம் தரும் இன்பத்தினும் நலமுடையது பிறிதின்மையின் அதனை “நல்லின்பம்” எனக் கூறுகின்றார். (230)
|