பக்கம் எண் :

232

      232. நீர்ப்பெருக்கில் வீழ்ந்தோன் நினைவிழவாமல் பிறரை நினைந்து துணைபுரியவேண்டுமளவில் இருப்பானாயின், கைகால் மெல்ல அசைத்துக் கரையறிந்து ஏற வாய்ப்புண்டு. அதுபோலவே குடும்பத் துயரில் வருந்துவோன், துயர்வுக்குரிய காரணங்களை எண்ணி அவற்றினின்றும் நீங்கி உய்தி பெறலாம் என்ற கருத்தால் இறைவன் அருளாதொழிவனோ என்றோர் ஐயம் தோன்றி வடலூர் வள்ளலின் மனத்தை வாட்டுகின்றது. தமது நிலையை விளக்கமாகத் தம்முடைய விண்ணப்பத்தில் கூறாமையை நினைக்கின்றார். அதற்குக் காரணம் நெஞ்சின் குறையென்று கண்டு அதனையும் ஆராய்கின்றார். குடும்ப வாழ்க்கைக்கு வேண்டுவனவற்றுள் உணவே முதன்மையானது. அதனைப் பெறற்கு வருந்தும் வருத்தமும் பெறாவழி எய்தும் வருத்தமும் அதனால் அறிவின் கண் உண்டாகும் மறைப்பும் உற்று நெஞ்சம் செய்வதறியாது வாடி உலர்ந்துவிட்டது; அதனைக் குறையாகக் கருதாமல், தன்னைப் பொருட்படுத்தி அருளொளி தந்து இன்பக் கரையேற்ற வேண்டும் என முறையிடுகின்றார்.

2402.

     இரையேற்று துன்பக் குடும்ப
          விகார இருட்கடலில்
     புரையேற்று நெஞ்சம் புலர்ந்துநின்
          றேனைப் பொருட்படுத்திக்
     கரையேற்ற வேண்டுமென் கண்ணே
          பவத்தைக் கடிமருந்தே
     திரையேற்று செஞ்சடைத் தேவே
          அமரர் சிகாமணியே.

உரை:

     கண்ணே, மருந்தே, தேவே, அமரர் சிகாமணியே, குடும்பவிகார இருட்கடலில் புரையேறி நெஞ்சம் நினைவு வற்றிய என்னையும் பொருட்படுத்தித் திருவடியாகிய இன்பக் கரையேற்றிச சேர்த்தல் வேண்டும். எ.று.

     காண்டற்குரிய நின் அருள் நெறி காணாது வருந்தும் உயிர்கட்கு அறிவுக்கண் நல்கும் அருளுடைமை பற்றிக் “கண்ணே” என்றும், அனாதியே தொடர்புற்றிருக்கும் மலப்பிணியேப் போக்குதற் பொருட்டு அருள்ஞானமாகிய மருந்தளித்து உதவும் இறைவன் சிறப்பியல்பைக் குறித்துப் “பவத்தைக் கடி மருந்தே” என்றும், உலகுயிர்களை அழித்தற்குப் போந்த கங்கையைச் சடையில் ஏற்ற அருள் நலத்தை விதந்து செஞ்சடைத் தேவே என்றும், இன்னோரன்ன நலங்களால் ஒப்புயர்வின்றி விளங்கும் மேன்மையை வியந்து தேவர்கள் முடிதாழ்த்தி வணங்குவதை நினைந்து அமரர் சிகாமணியே என்றும் புகழ்ந்து போற்றுகின்றார். பவம் - பிறவி; அது மலப்பணி காரணமாய் வந்தமை புலப்பட நோயாக்கி அதனைப் போக்கும் அருள் நிலை நோக்கிப் “பவத்தைக் கடி மருந்து” என்றார்.

     குடும்ப வாழ்க்கை உரிய பொருள் எய்திய வழி மகிழ்ச்சியால் மலர்வதும், எய்தாவிடத்துக் கவலையாற் கூம்புவதுமாகிய செயலால், ஒரு தன்மையின்றி மாறுவதனால் “குடும்பவிகாரக் கடல்” என்றுரைக்கின்றார். குடும்ப விகாரம் உண்பொருள் காரணத்தால் துன்பவடிவில் விளங்குவது தோன்ற, “இரையேற்று துன்பக் குடும்ப விகாரம்” என்கின்றார். இரை, உண்பொருள் குறிப்பதாயினும், நோய் விளைவிப்பது இவ்வாறு கூறப்படுகிறது. “இழிவறிந் துண்பான்கண் இன்பம் போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்” என்று திருவள்ளுவர், உணவை இரையெனக் குறித்துரைப்பது காண்க. குடும்பமாகிய கடல் நிலைகாண முடியாததென்றற்கு “இருட்கடல்” என உரைக்கின்றார். ஆழ்கடல் இருண்டிருக்கும் என்பது உலகறிந்த ஒன்று. கடலில் வீழ்ந்தவன் நீரைக் குடித்துப் புரையேறி நினைவு தடுமாறுவதுபோல, யானும் குடும்பத்துயர்க் கடலில் மூழ்கி அது நல்கும் துன்பவின்பங்களை மிகைபட நுகர்ந்து அறிவயர்ந்தேன் என்பாராய், “இருட்கடலிற் புரையேற்று நெஞ்சம் புலர்ந்து நின்றேன்” என்று கூறுகிறார். நெஞ்சம் புலர்வதாவது, நினைத்தற்குரிய திருவருளை நினையாதொழிந்தமை.

     இதுபற்றி என்னைப் புறக்கணித்தொகுக்காமல் பொருட்படுத்தி அருள் செய்து ஆதரித்தல் வேண்டுமென்பது பயன் என உணர்க.

     (232)