7
7. சிகாமணிமாலை
புள்ளிருக்கு வேளூர்
அஃதாவது, புள்ளிருக்கு வேளூரிற் கோயில் கொண்டருளும் வைத்தியநாதப் பெருமானைத் தேவர்களின்
சிகாமணியே என்று பாட்டுத்தோறும் மகுடமிட்டுப் பாடுவது. இதனால், இப்பகுதி ‘சிகாமணிமாலை’ எனப்
பெயர் பெறுகிறது.
இதன்கண், திருவருளின்
நலத்தைப் புகழ்ந்து அருள் ஞானநாட்டம் எய்த அருள வேண்டும் என்ற கருத்துடையராய், நானே பணி
புரியவும், நீயே எழுந்தருளவும் வேண்டும் என வரம் கிடக்கின்றார் வடலூர் வள்ளல். சிவலோக
வாழ்வை விரும்புகிறவர், தடை செய்யும் வல்வினையைப் போக்குக எனவும், பேதைமை நீக்கி ஞானவானாக்குக
எனவும், பொய்யனாயிருத்தலை நீக்கி மெய்யனாக்குக எனவும் வேண்டுகின்றார். பிறப்பிறப்பில்லாத
பெருநிலை வேண்டுபவர், வஞ்சகர் தொடர்பு தோற்றுவிக்கும் இடர்களையும், மெய்யன்பர் சார்பு பெறாத
குற்றத்தையும் எடுத்தோதி, காமம், பிணி, சிறுமை முதலியவற்றாற் குற்றமுடையராதலை யுரைத்துப் பெறுத்தருளவும்,
பிறவும் கேட்டுக் கொள்ளுகின்றார்.
கட்டளைக் கலித்துறை
2403. வல்வினை யேனைஇவ் வாழ்க்கைக்
கடல்நின்றும் வள்ளல்உன்தன்
நல்வினை வாழ்க்கைக் கரைஏற்றி
மெய்அருள் நல்குகண்டாய்
கொல்வினை யானை உரித்தோய்
வயித்திய நாதகுன்றாச்
செல்வினை மேலவர் வாழ்வே
அமரர் சிகாமணியே.
உரை: கொலைத் தொழிலைச் செய்யும் யானையின் தோலையுரித்துக் கொண்டவனே, வைத்தியநாதப் பெருமானே, குறைவின்றி யோங்குகின்ற சிவபுண்ணியம் செய்கின்ற மேன்மையுடையோர்க்கு வாழ்வளிப்பவனே, தேவர்கட்கு முடிமணியாக விளங்குபவனே, வள்ளலே, வலிய வினைகளை யுடையவனான என்னை, இவ்வுலக வாழ்க்கையாகிய கடலினின்றும், உனக்குரிய பதிசாரும் நல்வினை செய்தொழுகும் இன்ப வாழ்க்கையாகிய கரைமேல் ஏற்றி, மென்மையான திருவருளை எனக்கு வழங்குவாயாக. எ.று.
கொலைத் தொழிலே புரிந்தொழுகிய கயாசுரனாகிய யானையாதலால், “கொல்வினை யானை” எனவும், யானையாய்ப் போந்த அவனைக் கொன்று அவன் தோலைப் போர்வையாகக் கொண்டாரெனப் புராணம் கூறுதலால் “யானை யுரித்தோய்” எனவும் கூறுகின்றார். தீரா நோய்களெல்லாம் புள்ளிருக்கு வேளூரில் சிவபிரான் திருமுன் நின்று வழிபட்டார்க்கு நீங்குவதுபற்றி, “வயித்தியநாத” எனப் பரவுகின்றார். செய்த அளவில் நில்லாமல், மேன்மேல் ஓங்கும் சிவபுண்ணியம் செய்யும் பெருமக்களை, “குன்றாச் செல்வினை மேலவர்” என்று சிறப்பிக்கின்றார். “எல்லையில்லாப் புண்ணியம் தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவு போல்வார்” (கண்ணப்) எனச் சேக்கிழார் பெருமான் உரைப்பது காண்க. “செல்வினை” என்றவிடத்துச் செல்லுதல் ஓங்குதல் மேற்று. மேலவர்க்கு வேண்டுவ அளித்து இனிது வாழச் செய்தருளுவது கொண்டு, “மேலவர் வாழ்வே” எனவும், தேவர்கள் முடிமேற் கொண்டு பரவும் பெருமானாதலால் “அமரர் சிகாமணியே” எனவும் பரவுகின்றார். சிகாமணி - முடிமணி; அமரர் - சாவா வாழ்வுபெற்ற தேவர்கள். சாதற்கஞ்சிச் சிவபெருமான் திருவடிகளை மாணிக்க மணிபோல் அவர்களும் தமது முடியிற் சூடிக்கொள்வதுபற்றி “அமரர் சிகாமணி” எனக் கூறுகின்றார் எனினும் பொருந்துவதாம். தீராத நோயெல்லாம் தீர்த்தருளுதலால் வயித்தியநாதன் எனப்படுகிறான் என்பதற்கொப்பத் திருநாவுக்கரசர், “மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்” (புள்ளிருக்கு) என எடுத்தோதுகின்றார். திருவருளாலன்றிவேறே எவ்வாற்றாலும் நீங்காத வன்மையுடைமைபற்றி, தம்பால் உள்ள வினையை, “வல்வினை” என்றும், வினைப்பயனை நுகர்தற்கென வந்தது மண்ணக வாழ்க்கையாதலால், “இல்வாழ்க்கை” என்றும், செய்வினைப்பயனை வினை செய்தே நுகர வேண்டுதலால் கரையின்றிப் பெருகுதலைக் கண்டு, “வாழ்க்கைக் கடல்” என்றும் கூறுகின்றார். திருவடி நீழலில் எய்தும் திருவருளின்ப வாழ்வை “நல்வினை வாழ்க்கை” என உரைக்கின்றார். ஈண்டு நல்வினை யென்பது பதி நல்வினை எனப்படும் சிவபோக வாழ்வு. ஆங்கு நிகழும் வினை சிவபோக நுகர்வாய்ப் பிறவாப் பெருநிலையில் உய்த்தலால் “நல் வினை” என உயர்த்துப் பேசப்படுகிறது. பிறவிக் கேதுவாகாத பெருநிலமாதல் தோன்ற, “நல்வினை வாழ்க்கைக் கரை” எனவும், அங்கே யுய்த்துச் சிவப்பேரின்பம் அருளுக என வேண்டலுற்று, “மெய்யருள் நல்கு கண்டாய்” எனவும் விண்ணப்பிக்கின்றார். மெய்யருள்; இனச் சுட்டிலாப் பண்புகொள் பெயர்; செஞ்ஞாயிறு என்பது போல, கண்டாய்; முன்னிலையசை.
இதனால், பிறவிக் கேதுவாகிய வாழ்க்கையினின்றும் நீக்கிப் பிறவா வாழ்க்கையருளுக என வேண்டிக்கொண்ட வாறாம். (1)
|