2404. பொய்யே புலம்பிப் புழுத்தலை
நாயின் புறத்திலுற்றேன்
மெய்யே உரைக்கும் நின் அன்பர்தம்
சார்பை விரும்புகிலேன்
பையேல் அரவனை யேன்பிழை
நோக்கிப் பராமுகம்நீ
செய்யேல் வயித்திய நாதா
அமரர் சிகாமணியே.
உரை: புள்ளிருக்கு வேளூர் வைத்தியநாதனும் தேவர்கட்குச் சிகாமணியுமாகிய பெருமானே, பொய்ப் பொருட்காக வருந்தி, புண்ணுற்றுப் புழு மலிந்து தெருவில் அலையும் நாயைப்போல நல்லோர்க்குப் புறம்பாயினனேயன்றி, மெய்ம்மையே புகன்று மேம்பட்ட நினக்கு அன்பராயினார் கூட்டத்தை விரும்பா தொழிந்தேன்; படம் விரிக்கும் பாம்பு போன்ற என்னுடைய குற்றங்களை யெண்ணி நீ என்னைப் புறக்கணித்தல் வேண்டா; யான் கெட்டொழிவேன். எ.று.
பொய்யே புலம்புதல் - பொய்ப் பொருளை விரும்பி ஆர்வம் செய்து, அது நிலையாது கெட்ட வழி வருந்துதல்; உண்மையான இழப்பு, நோய் முதலியவற்றுக்காகப் புலம்புதலின்றி, காண்பாரை ஏய்த்தற் பொருட்டுப் புலம்புவதும் பொய்ப் புலம்பலாகும். புழுத்தலை நாய் - புண்ணுற்றுப் புழு மலிந்து வருந்தித் திரியும் நாய்; “புழுத்த தலையையுடைய நாய்” என்றுமாம். இத்தகைய நாயைக் காப்பாற்றுபவ ரின்மையால், ஒதுக்கிடத்திற் கிடக்கும்; அதுபோல் நல்லோர் இனத்தில் இடமின்றிக் கீழ்மையுற்றுக் கிடக்கின்றேன் என்பாராய், “புறத்திலுற்றேன்” எனப் புகல்கின்றார். மெய்யன்பராயினாரை, “மெய்யே யுரைக்கும் அன்பர்” என்று சிறப்பிக்கின்றார். மெய்ப்பொருளாகிய சிவபரம்பொருளை நயந்து, அதனை யல்லது பிற பொருளை நினைத்தலும் விரும்புதலும் இல்லாமையால் மெய்யன்பரை “மெய்யே யுரைக்கும் நின் அன்பர்” எனப் புகழ்கின்றார். அவர் சார்பு எய்துமாயின், யானும் மெய்யன்பனாவேன்; அச்சார்பை யான் விரும்பாமல் பொய்யர் கூட்டத்திற் புகுந்து குற்றம் பல புரிகின்றேன் என்பாராய், “அன்பர்தம் சார்பை விரும்புகிலேன்” என்றும்; நற்சார்பு பெறுக என அறிவுறுத்தும் பெருமக்கள் என்னை நோக்குவராயின், என்னை நெருங்கவிடாமற் படங்காட்டிச் சீறி வருத்தும் பாம்புபோல் காய்ந்து போக்கி மிக்க பெருங் குற்றம் செய்தேன் என்றற்குப் “பையேல் அரவனையேன்” என்றும் எடுத்துக் கூறி, இந்நிலையில் என் குற்றங்களைத் திருவுள்ளத்தில் கொண்டு என்னை வெறுத்துப் புறக்கணிப்பாயாயின் யான் உய்தியின்றிக் கெடுவேன் என்று முறையிடுவாராய், “பிழை நோக்கிப் பராமுகம் நீ செய்யேல்” எனக் கூறுகிறார். யான் கெட்டொழிவேன் என்பது குறிப்பெச்சம். பாரா முகம், பராமுகம் என வந்தது. புறக்கணிப்பாக நோக்குவது பாராமுகம் எனப்படுகிறது.
இதனால், மெய்யன்பர் சார்பு விரும்பாத என் குற்றம் நோக்கிப் பராமுகம் செய்தலாகாது எனத் தெரிவித்துக் கொண்டவாறாம். (2)
|