பக்கம் எண் :

2416.

     களிவே தனும்அந்தக் காலனும்
          என்னைக் கருதஒட்டா
     ஒளிவே தரத்திரு உள்ளஞ்செய்
          வாய்அன்பர் உள்ளம்என்னும்
     தளியே தனத்துறும் தற்பர
          மேஅருள் தண்ணமுதத்
     தெளிவே வயித்திய நாதா
          அமரர் சிகாமணியே.

உரை:

     அன்பர்களின் மனம் எனப்படும் பொற் கோயிலில் எழுந்தருளும் பரம்பொருளே, குளிர்ந்த அமுதத்தின் தெளிவு போன்றவனே, புள்ளிருக்கு வேளூர் வயித்தியநாதனாகிய தேவ சிகாமணியே, களிக்கின்ற பிரமனும் இயமனும் நினைக்கவொண்ணாதபடி அவர்கட்குத் தோன்றாமல் ஒளிக்கும் நிலை எனக்குண்டாகத் திருவுள்ளம் செய்தருள வேண்டுகிறேன். எ.று.

     மெய்யன்பர்களின் தூய மனமே தனக்குக் கோயிலாகக் கொள்பவன் என்பதுபற்றி, “அன்பர் உள்ளமென்னும் தளிவே தனத்துறும் தற்பரமே” என்று கூறுகின்றார். தளி -கோயில்; வேதனம் - பொன்; வேதனத் தளியென மாறிப் பொற்கோயிலென்று பொருள்பட நின்றது. தற்பரம் - தனித்த மேலாய பரம்பொருள். கடலைக் கலக்கப் பிறந்தமையின், அதன் தூய நிலை தெளிவு எனப்படுகிறது. படைப்புத் தொழிலுடைமையாற் செருக்கிய செயலினன் என்பார் பிரமனைக் “களி வேதன்” என்றும், சாகும் நாள் தேர்ந்து உயிர் கவரும் இயமனை உலகவர் நன்கறிதலால், “அந்த காலன்” என்றும் கூறுகின்றார். மீண்டும் எனக்குப் பிறப்பும் இறப்பும் எய்தாத பெருநிலையை அருளுதல் வேண்டுமெனக் கேட்பதால், “வேதனும் அந்தகனும் கருத வொட்டா ஒளிவு தரத் திருவுள்ளம் செய்வா” யென்று வேண்டுகின்றார். பிரமனுக்குத் தெரிந்தால் பிறப்பையளிப்பான்; இயமனுக்கு தெரிந்தால் இறப்பை நல்குவன்; இருவருக்கும் தெரியாத ஒளிவிடம் நின்திருவடி நீழலாதலால், அதனை எனக்கு அளிக்க மனம் கொள்ள வேண்டுமென்பார், “ஒளிவே தரத் திருவுள்ளம் செய்வாய்” என்று உரைக்கின்றார்.

     இதனாற் பிறப்பிறப்பில்லாத பெருநிலை அருளுக என விண்ணப்பித்தவாறாம்.

     (14)