பக்கம் எண் :

2417.

     மால்விடை மேற்கொண்டு வந்தெளி
          யேனுடை வல்வினைக்கு
     மேல்விடை ஈந்திட வேண்டுங்கண்
          டாய்இது வேசமயம்
     நீல்விட முண்ட மிடற்றாய்
          வயித்திய நாதநின்பால்
     சேல்விடு வாட்கண் உமைதொடும்
          தேவர் சிகாமணியே.

உரை:

     நீல நிறமுடைய விடத்தை யுண்டமைந்த கழுத்தையுடைய பெருமானே, புள்ளிருக்கு வேளூர் வயித்திய நாதனே, சேல் மீன் போன்ற ஒளிமிக்க கண்களையுடைய உமாதேவி நின் இடப்பாகத்தே விளங்கத் தேவர்கட்கு முடிமணியாக வுள்ளவனே, திருமாலாகிய எருதின் மேல் இவர்ந்து என்பால் வந்து, எளியவனாகிய என்னைப் பற்றிக்கொண்டிருக்கும் வல்வினையைப் போக்கியருள வேண்டும்; இது ஏற்ற காலமாகும். எ.று.

     நீலம், ஈறு குறைந்து 'நீல்' என வந்தது. உண்டமைந்த திருக்கழுத்து நீல திறம் பெற்றமையால் கடல்விடம் நீல நிறத்ததென்பது தோன்ற “நீல் விடம்” என்கின்றார். நின்பால் உமையென இயைத்துப் பொருந்திய என ஒரு சொல் வருவித்து நின்பால் பொருந்திய உமையெனக் கொண்டு பொருள் செய்க. சேல்விடு வாட்கண் - சேல் மீன் போன்ற ஒளி மிக்க கண்கள். மால்விடை யென்பதற்குப் பெரிய விடை எனினும் அமையும். நின்னையோ நீ எழுந்தருளும் இடத்தையோ எனது சிறுமையாற் கண்டறியேனாதலால், நீயே விடை மேற்கொண்டு வருக என்பார், “மால் விடை மேற்கொண்டு வந்து” எனவும், என்னை விடாது தொடரும் வன்மை கொண்ட வினைகளை நீக்கியருள வேண்டுகின்றமை விளங்க, “எளியேனுடைய வல்வினைக்கு விடை ஈந்திட வேண்டும்” எனவும் இயம்புகின்றார். எளிமை; சிறுமை மேற்று. விடையீதல் - போக்குதல். அசத்தாம் தன்மையால் இழிந்தமையின் வினைக்கு விடை “ஈந்திட வேண்டும்” என விளம்புகிறார்.

     இதனால் எளியேனைப் பிணித்திருக்கும் வினையைப் போக்க வேண்டுமென இறைஞ்சியவாறாம்.

     (15)