பக்கம் எண் :

8

8. வைத்தியநாதர் பதிகம்

 

புள்ளிருக்கு வேளூர்

 

      அஃதாவது புள்ளிருக்கு வேளூர் வைத்தியநாதப் பெருமானைப் பணிந்து அருள் ஞானம் வேண்டிப் பரவும் பத்துப் பாட்டுக்களைக் கொண்ட பாமாலை என்பதாம்.

 

      புள்ளிருக்கு வேளூர் வைத்தியநாதப் பெருமான் எழுந்தருளும் திருக்கோயில் திருத்தருமை யாதீனத்தின் அருளாட்சியில் இயங்குவது. செல்வமிக்க பெருங்கோயில்கள் பலவற்றைக் கண்காணிக்கும் பொறுப்புடைமை பற்றி ஆங்காங்குத் திருமடத்துத் தம்பிரான்களை விடுத்துத் தெய்வப்பணி சீராக நடைபெறச் செய்வது ஆதீனம் புரியும் அறப்பணியாகும். தம்பிரான்கள் பலரும் சைவ வொழுக்கமும் தவநெறியும் சிவஞானமும் சிறக்கப் பெற்றவராவர். வடலூர் வள்ளலார் வேளூர்க்குச் சென்றிருந்த போது, அங்கே இருந்த உலகநாதத் தம்பிரான் சுவாமிகள் வள்ளலாரை வரவேற்று மிக்க அன்பு பாராட்டி மகிழ்ந்தார். யாவராயினும் சிவத்தொண்டரெனின் அவர்களை மெய்யன்புடன் ஏற்று மகிழ்வதும் மகிழ்விப்பதும் சைவச் செந்நெறியாளர்க்கு அறமும் பெரிய ஒழுக்கமுமாகும். சுவாமிகளோடு அளவளாவியிருந்த வள்ளற்பெருமான் தமது சென்னை வாழ்வில் உண்டான அனுபவங்களைத் தம்பிரான் சுவாமிகட்குத் தெரிவிக்கும் முகத்தால் வைத்தியாநாதப் பெருமானை முன்னிலைப் படுத்தி அனுபவத்தால் உண்டான மனநோயைத் தீர்க்கத் தக்க திருவருள் வழங்குக என இப்பதிகத்தில் வேண்டுகின்றார்.

 

      இதன்கண் முதல் நான்கு பாட்டுக்களில் பெண்ணின்பமே பெரிதென வாதிக்கும் உலகாயதக் கொள்கையும், கயவர் கயமையும், காமுகர் செருக்கும், பொய் கூறும் சிறுமையும் நோயாய் மக்களை வருத்துவது ஒருபாலாக, சைவ மெய்த் தொண்டரை இகழ்வதும், விரத ஞான வொழுக்கங்களை மறுப்பதும், மெய்யன்புடன் வழிபடுவோரையும் சான்றோர்களையும் இகழ்ந்து பேசுவதும் ஒருபால் நிலவுவதை எடுத்தோதி, இறுதியில் இறைவன் திருவடி நீழற் சிறப்பை அழகொழுக வனைந்து கூறுகின்றார்.

 

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2418.

     ஓகைமட வார்அங்கு லேபிரம பதம்அவர்கள்
          உந்தியே வைகுந்தம்மேல்
     ஓங்குமுலை யேகலை அவர்குமுத வாயின்இதழ்
          ஊறலே அமுதம் அவர்தம்
     பாகனைய மொழியேநல் வேதவாக் கியம்அவர்கள்
          பார்வையே கருணைநோக்கம்
     பாங்கின் அவ ரோடுவிளை யாடவரு சுகமதே
          பரமசுக மாகும்இந்த
     யூகமறி யாமலே தேகம்மிக வாடினீர்
          உறுசுவைப் பழம்எறிந்தே
     உற்றவெறு வாய்மெல்லும் வீணர் நீர் என்றுநல்
          லோரைநிந் திபபர் அவர்தம்
     வாகைவாய் மதமற மருந்தருள்க தவசிகா
          மணிஉலக நாதவள்ளல்
     மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
          வளர்வயித் தியநாதனே.

உரை:

     தவம் மேற்கொண்ட பெருமக்களுக்கு முடிமணியாகிய உலகநாதத் தம்பிரான் மனம் மகிழுமாறு, புள்ளிருக்கு வேளூரில் வந்தடைந்து பரவும் மெய்யன்பர்களின் பிறவி நோய் கெடுமாறு கோயில் கொண்டருளும் வைத்தியநாதப் பெருமானே, உவகையை யுடைய இளமங்கையரின் அல்குலிடமே பிரமபதமாகும்; அவர்களின் உந்தியே வைகுந்தமாகும்; அவர்கள் மார்பின் மேலே உயர்ந்து நிற்கும் முலையே கயிலையாம்; அவர்களது அல்லி மலர் போன்ற வாயிதழ் வழியாக வொழுகும் எச்சிலே அமிர்தமாகும்; கரும்பின் பாகுபோல் அவர்கள் சொல்லும் சொற்களே வேதங்கள் ஓதும் சொற்றொடராகும்; அவர்கள் கண்பார்வையே திருவருள் நோக்கமாகும்; அவர் பக்கத்தே யிருந்து விளையாடுவதால் உண்டாகும் இன்பமே பரமவுலகப் பேரின்பமாகும்; இந்த நுட்பத்தையறியாமல் உடல் வாடி மெலிகின்றீர்கள்; கையிற் கிடைத்த மிக்க சுவையுள்ள கனியை எறிந்துவிட்டு வெறும் வாயை மெல்லும் வீணர்கள் நீவிர் என்றெல்லாம் பேசி நன்மனச் சான்றோர்களைப் பழிக்கின்றனர் பலர்; வெற்றி யுண்டாகப் பேசும் அவர்களது வாய்ச் செருக்காகிய நோய் நீங்குமாறு ஒரு மருந்தருளுக எ.று.

     உவகை, ஒகையென வந்தது. யாது பேசினும் நகை கலந்துரைப்பதே இளமகளிர் இயல்பாதலின், “ஓகை மடவார்” எனவுரைக்கின்றார். பிரமபதம் - படைப்புக் கடவுளான பிரமதேவன் உறையும் நிலையம். அல்குலை வடமொழியில் உபஸ்தம் எனவும், நிதம்பப்பிரதேசம் எனவும் கூறுப. வைகுந்தம் - காக்கும் கடவுளாகிய திருமாலுக்குரிய பதம். கயிலை, மலையாதலால் “ஓங்கும் முலையே கைலை” எனக் குறிக்கின்றார். கைலை, கயிலை எனவும் எழுதப்படும். குமுதம், ஆம்பல்; இதனை அல்லி என்றலுமுண்டு. பாகு - கரும்பின் சாற்றிற் காய்ச்சி யெடுக்கப்படும் வெல்லப்பாகு. வேத வாக்கியம் - வேதங்களில் ஓதப்படும் சொல்லும் சொற்றொடரும், பேரின்பப் பேற்றுக்குச் சமைவோர் முதற்கண் பெற வேண்டுவது திருவருள் நோக்கமென ஞானநூல்கள் கூறுவதால், “பார்வையே கருணை நோக்கம்” எனப்படுகிறது. பரம சுகம் - பேரின்பம். யூகம் - நுண்ணுணர்வு. பனியில் நனைந்தும் வெயிலில் உலர்ந்தும் பசியால் மெலிந்தும் உடம்பின் சேட்டைகளை யொடுக்குவது தவம் செய்வோர் செயலாதலால், “தேகம் மிக வாடினீர்” என்றும், எய்தற்கரியதும், இன்ப நுகர்ச்சிக்கேற்ற எழிலும் உருவும் அமைந்ததுமாகிய உடம்பு பெற்றும், அதனாற் பெறக்கடவ இன்பத்தை நுகராது துறக்கும் மாதவர் செயலை விளக்குதற்கு, “உறுசுவைப்பழம் எறிந்தே உற்ற வெறுவாய் மெல்லும் வீணர் நீர்” என்று பிறர் இகழ்ந்துரைப்பதை எடுத்துரைக்கின்றார். வீணர் - பயனின்றிக் கழிபவர். நல்லோர் - தவம் புரிபவர். நிந்தித்தல் - இகழ்தல். நிந்திப்பவர் சொற்களையாதரித்துக் கேட்பவர் பலராதலால், அவர்தம் உரைகளை “வாகை வாய் மதம்” என்று கூறுகிறார். வாகை - வெற்றி. இளமைச் செருக்கால் அவ்வாறு கூறுவதால், அவர் சொல்லை, “வாய் மதம்” என்று உரைக்கின்றார். மதமும் செருக்கும் உண்டாவது, தெளிவு நிலைக்கு எதிரான நோயாதலால், அதற்கு ஏற்ற மருந்து நன்ஞானமாவதுபற்றி “மருந்தருள்க” என வேண்டுகிறார். வேண்டப்படுபவர் வைத்தியநாதனாதராதலால், “மருந்தருள்க” என்கின்றார். தருமபுர ஆதீனத்து மாதவர்களில் ஒருவராகிய உலகநாதத் தம்பிரானை, “தவ சிகாமணி உலகநாத வள்ளல்” என்று புகழ்கின்றார், வைத்தியநாதன் என்ற வடசொல் ஓசைபற்றி வயித்தியநாதன் எனவும் எழுதப்படும்; அது தமிழ்ச் சொல்லன்றாகலின், அவ்வாறு எழுதுவது வழுவாகாது. பவ ரோகம் - பிறவி நோய்.

     இதனால், மகளிர் இன்பமே சிறந்ததென வாதிப்பவர்க்கு இரங்கி அவர்கட்கு நன்ஞானம் வழங்குக என இறைவனை வேண்டியவாறாம்.

     (1)