2419. உண்டதே உணவுதான் கண்டதே காட்சிஇதை
உற்றறிய மட்டார்களாய்
உயிருண்டு பாவபுண் ணியமுண்டு வினைகளுண்
டுறுபிறவி உண்டுதுன்பத்
தொண்டதே செயுநரக வாதைஉண் டின்பமுறு
சொர்க்கமுண் டிவையும்அன்றித்
தொழுகடவுள் உண்டுகதி உண்டென்று சிலர்சொலும்
துர்ப்புத்தி யால்உலகிலே
கொண்டதே சாதகம் வெறுத்துமட மாதர்தம்
கொங்கையும் வெறுத்தீர்கையில்
கொண்டதீங் கனியைவிட் டந்தரத் தொருபழம்
கொள்ளுவீர் என்பர் அந்த
வண்டர்வா யறஒரு மருந்தருள்கு தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வயித் தியநாதனே.
உரை: மாதவர் சிகாமணியாகிய உலகநாதத்தம்பிரானிகிய வள்ளல் மனம் மகிழவும், மெய்யன்பரை வருத்தும் பிறவி நோயைத் தீர்க்கவும், புள்ளிருக்கு வேளூரிற் கோயில் கொண்டருளும் வைத்தியநாதப் பெருமானே, உண்பது யாதாயினும் அதுவே உணவு; கண் முதலிய பொறிகளாற் காண்பதே காட்சி; இவ்வுண்மையை உணர்வால் உணரமாட்டாதவராய் இருக்கின்றீர்களே; உயிர் வகையுண்டு; தீவினை நல்வினைகள் உண்டு; மூல கன்மம் உண்டு; மிக்குறும் மறுபிறவியும் உண்டு; துன்பச் செயல்கள் நடக்கும் நரக வேதனையுண்டு; இன்பம் நிலவும் துறக்க வாழ்வு உண்டு; இவையே யன்றி இவற்றிற்கும் மேலாக யாவரும் தொழப்படும் கடவுள் ஒருவர் உண்டு; முத்தியுண்டு என்றெல்லாம் சொல்லுகின்ற சிலருடைய கெடுமதியைக் கேட்டு, உலகியலிற் கொண்ட கொள்கையே நலம் பெறுதற்குச் சாதகமாகவும், அதனைக் கைவிட்டு, இளமங்கையரின் கொங்கையிடத்துப் பெறும் போகத்தையும் துறந்து, அங்கையிற்கொண்ட இனிய கனியை விடுத்து ஆகாயத்தில் இன்பப் பழமொன்றுளதெனக் கருதி வருந்துகின்றீர்களே என வாய்வுதறும் வண்டர்களின் வாய்ப் பேச்சுக்களை, வழங்கும் நோய் தீருமாறு ஞான மருந்து ஒன்று நல்குக. எ.று.
செல்வர்களும் காளைப்பருவ முடையவர்களும் தம்பால் வந்து தகவில்லாத வற்றையுரைத்து வாய்ப்பேச்சாலும் வாதவுரைகளாலும் மனம் புண்படச் செய்வதால் உலகநாதத் தம்பிரான் சுவாமிகள் மிகவும் வருந்தினமை தோன்ற, “உலகநாத வள்ளல் மகிழ வேளூரில் வளரும் வைத்திய நாதனே மருந்தருள்க” என்று கூறுகின்றார். வேளூர், புள்ளிருக்கு வேளூர். புலால் உணவும் அடங்க, “உண்டதே உணவு” எனவும், கருத்தளவை, உரையளவை ஆகிய இரண்டையும் கொள்ளாமல் காட்சியளவை ஒன்றே கொள்ளும் உலகாயத நெறியை, “கண்டதே காட்சி” எனவும் சுருங்கக் கூறுகின்றார்கள். அளவைகள் பலவாகக் கூறப்படினும், காட்சி, கருத்து, உரையென்ற இம் மூன்றில் அடங்குமென்பர் அறிஞர்; அளவைகள் நான்கெனவும் பத்தெனவும் அதற்கு மேலும் கூறுப; “அவையெல்லாம் அளவை காண்டல் கருதல் உரையென்று இம் மூன்றின் அடங்கிடுமே” (சிவ. சித்.) என அருணந்தி சிவனார் உரைப்பதால் அறியலாம். உலகாயதர், “ஈண்டளவை காட்சி மன மாதியிரு மூன்றாய் வேண்டும் அனுமான முதலான பல வேண்டா” (சிவ. சித்தி. பரபக்) என்பர். கண் முதலிய கருவிகளாற் காணப் படுவனவே அறிவை நிறைவிப்பனவாக இருக்கவும், அனுமான முதலிய பலவற்றை விரியப் பேசுவது நுண்ணுணர்வில்லாமை என்பாராய், “இதை யுற்றறிய மாட்டார்களா” என்று உலகாயதர் கூறுகின்றார்கள். உலகமுண்டு, உலகில் உயிர்களும், அவை செய்யும் பாவ புண்ணியங்களும், அவற்றிற்கு மூலமாகிய கன்மமும், அவற்றை நுகர்தற்கமைந்த பிறவிகளும் உண்டு என்றற்கு, “உயிருண்டு பாவ புண்ணியமுண்டு வினையுண்டு உறுபிறவியுண்டு” என்கின்றார்கள். மேலும், பாவ புண்ணிய விளைவுகளாகிற நரகத்துன்பமும் துறக்கவின்பமும் உண்டென்பாராய், “துன்பத் தொண்டதே செய்யும் நரகவாதையுண்டு இன்பமுறு சொர்க்கமுண்டு” எனப் பேசுகின்றார்கள். இவற்றிற்குமேல், இவைகளை நுகர்விக்கக் கடவுள் ஒருவர் உண்டென அச்சுறுத்துகின்றார்கள் என்பாராய், “தொழு கடவுள்” எனவும், இப் பாவ புண்ணிய முதலியனவும் பிறவி வகையும் இல்லாமல் இன்பமே நிலவும் நிலைய முண்டோவெனின் அதுவும் உண்டென்பாராய், “கதியுண்டு” எனவும் உரைக்கின்றார்கள். தொண்டு - செய்கை. நரகவாதை - நரகத்துன்பம். பாவ புண்ணியங்கள் அறிவில்லனவாதலால், அவற்றின் பயனை நுகர்விப்பான் ஒரு கடவுள் உண்டு; அதனால் அவன் தொழப்படுகின்றான் என்பதற்கு “இவையுமன்றித் தொழு கடவுள் உண்டு” எனச் சொல்லுகின்றார்கள். ஆனால், இவ்வாறு சொல்லுகின்றவர்கள் பலரல்லர்; சிலரே என்றும், அவரது உரை நன்றன்று என்பதற்குச் “சிலர் சொலும் துற்புத்தி” என்றும் கூறுகின்றார்கள். இவ்வுலகாயதரிற் சிலர், “கன்மம் உயிர் இறை வேறுண்டென்று செப்பிடுமவர்க்கு மண்ணோர் செய்திடுங்குற்ற மென்னோ” எனப் பேசுகின்றார்கள் என்று அருணந்தி சிவம் அறிவிக்கின்றார். இவ்வுலகாயதர், உலக வாழ்வு ஒன்றே வாழ்வு; இதன் நலம் அனைத்தும் பெறுதற்கு உரிய கொள்கைகளே சாதனம்; நலங்களின் தலையாயது மகளிர் இன்பம் என்பாராய், “உலகிலே கொண்டதே சாதகம் வெறுத்து மடமாதர்தம் கொங்கையும் வெறுத்தீர்” என்கின்றார்கள். சாதனங்களைக் கொண்டு பயனைச் சாதித்துக்கொள்வது சாதகம். உலகியலின்பத்தை வெறுத்து வேறு பேரின்பம் உண்டெனக் கருதி விரத ஞானங்களை நாடியுழல்வது வேண்டாதவொன்று என விளம்புவாராய், “கையிற் கொண்ட தீங்கனியைவிட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர்” என இகழ்கின்றார்கள். “உண்டதே யுண்டு” என்பது முதல் “ஒரு பழம் கொள்ளுவீர்” என்பது வரை உலகாயதர் உரைப்பன என அறிக. வண்டர் - தீயவர்; “குண்டமன வண்டர்” (கயிலா) எனத் திருமுறை கூறுவது காண்க. வாய் - ஈண்டுத் தீயவை பேசும் வாய்; தீயவை பேசும் தீயவர்க்கு ஞானம் எய்தின், அவற்றைப் பேசாராகலின், ஞானம் தருக என வேண்டலுற்று “மருந்தருள்க” என இறைஞ்சுகின்றார்.
இதனால், உலகாயதம் பேசி வருந்துவோர் வாய் அடங்கச் செய்க என விண்ணப்பித்தவாறாம். (2)
|