242. வாயாத் துரிசற் றிடும்புலவோர்
வழுத்தும் தணிகை மலையமுதைக்
காயாக் கனியை மறந்தவநாள்
கழிக்கின் றதுவும் போதாமல்
ஈயாக் கொடியர் தமக்கன்றி
ஏலா நினைவும் இன்றெண்ணி
மாயா என்றன் வாழ்வழித்தாய்
மனமே நீதான் வாழ்வாயோ.
உரை: பொய்ம்மையாகிய குற்றமற்ற அறிஞர்கள் வாழ்த்தி வணங்கும் தணிகைமலையில் வீற்றிருக்கும் அமுதத்தையும் நன்கு பழுத்த கனியையும் ஒத்த பெருமானாகிய முருகனை நினைப்பதை மறந்து நாட்களை வீணே போக்குவ தன்றியும், ஈயும் தன்மையில்லாத கொடியவர்களைப் பற்றிப் பொருந்தாத பல எண்ணங்களை நினைத்து என் அறிவையும் மறைத்து இப்பொழுது என் வாழ்வையும் அழித்து விட்டாய், மனமே இச்செயலால் நீ தானும் நன்கு வாழ்வாயோ? எங்ஙனம் வாழ்வாய், எ. று.
வாயாத் துரிசு - வாய்ம்மை யல்லாத பொய்ம்மைக் குற்றம். மெய்யுணர்வு உடைமையால் மெய்ம்மையே நினைந்துரைக்கும் பேரன்பர்களை, “வாயாத் துரிசற்றிடும் புலவோர்” என்றும், அவர்கள் வாழ்த்தி வணங்கும் பெருமை யுடையதாதலால் முருகனது தணிகை மலையைப் “புலவோர் வழுத்தும் தணிகைமலை” என்றும் புகழ்கின்றார். அமுது உண்டாரைப் போல் அடியவரை வாழச் செய்தலும், முற்றக் கனிந்த பழம் போல ஞான வின்பம் நல்குதலும் உடையனாதல் பற்றி, “அமுதைக் காயாக் கனியை மறந்து” என்றும், அதனால் வாழ்நாள் வீணாவதை யுணர்ந்து வருந்துமாறு புலப்பட, “மறந்து அவநாள் கழிக்கின்றதுவும்” என்றும் இயம்புகின்றார். ஈயும் இயல்பினரைச் “செம்மைத் தன்மையர்” என்றும், அஃது இல்லாதாரை, “இயல்பு கோடியவர்” என்றும் சான்றோர் உரைத்தலால் ஈயாதாரை, “ஈயாக் கொடியர்” என்று பழித்து அவர்களைப் பற்றி வேண்டாதவற்றை எண்ணி வாழ்நாள் படுவது கண்டு வருந்தி உரைக்கின்றாராதலின், “ஈயாக் கொடியர்” தமக்கன்றி ஏலா நினைவும் இன்றெண்ணி என்வாழ்வழித்தாய்” என்றும், அதனால் மனம் அடையும் நற்பயன் ஒன்றுமில்லாமை ஓர்ந்து, “மனமே நீதான் வாழ்வாயோ” என்றும் கூறுகின்றார். மாயா - மாய்த்து; அதாவது மறைத்து என்பது பொருள். காயாக் கனி என்பது காய் தன்மை நீங்கி முற்றக் கனிந்த கனி; பூவாவஞ்சி என்றாற் போல வெளிப்படையாகக் கொள்ளுவதும் பொருந்தும்.
இதனால் தணிகை முருகனை நினைப்பது மறந்து ஈயாக் கொடியாரைப் பற்றி எண்ணமிட்டு வாழ்வை அழிக்கின்றது மனமெனப் புலந்தவாறு. (2)
|