பக்கம் எண் :

2420.

     உம்பர்வான் அமுதனைய சொற்களாற் பெரியோர்
          உரைத்தவாய் மைகளைநாடி
     ஓதுகின் றார்தமைக் கண்டவ மதித்தெதிரில்
          ஓதிபோல நிற்பதுமலால்
     கம்பர்வாய் இவர்வாய்க் கதைப்பென்பர் சிறுகருங்
          காக்கைவாய்க் கத்தல்இவர்வாய்க்
     கத்தலில் சிறிதென்பர் சூடேறு நெய்ஒரு
          கலங்கொள்ள வேண்டும்என்பர்
     இம்பர்நாம் கேட்டகதை இதுவென்பர் அன்றியும்
          இவர்க்கேது தெரியும் என்பர்
     இவைஎலாம் எவனோஓர் வம்பனாம் வீணன்முன்
          இட்டகட் டென்பர் அந்த
     வம்பர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
          மணிஉலக நாதவள்ளல்
     மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
          வளர்வயித் தியநாதனே.

உரை:

     மாதவர் சிகாமணி உலகநாதத் தம்பிரானாகிய வள்ளல் மனம் மகிழவும், மெய்யன்பர்களை வருத்தும் பிறவி நோயைத் தீர்க்கவும், புள்ளிருக்கு வேளூரிற் கோயில் கொண்டருளும் வைத்தியநாதப் பெருமானே, தேவருலகத்து அமுதம் போன்ற சொற்களால் சான்றோர்கள் உரைத்த மெய்ம்மை யுரைகளை ஆராய்ந்து சொல்லுகின்றவர்களைக் கண்டால் தாழ்வாக மதித்து எதிரே ஓதி மரம்போல நோக்குவதுடன், பேசலுற்றால் இவர் வாய் திறந்து உரைப்பவை கம்பர் வாயுரை போல்வனவாம் எனப் புகழ்வதுபோலப் பழிப்பர்; காணாவிடத்து இவர் கத்துவதைக் கேட்டால் சிறிய கருங்காக்கையின் கத்தல் சிறிதாகும் எனவும், இவர்போற் சிறிதுபோது கத்தினால் உடம்பெல்லாம் சூடாவதோடு, அது தணிய ஒரு கலய நெய்யருந்த வேண்டுமெனவும் இகழ்வர்; இவர் கூறுவது இங்கே நாம் பன்முறையும் கேட்டதுதான் என்றும், இவருக்கு என்ன தெரியும் என்றும் எள்ளுவர்; இவர் சொல்லுகிற இவையெல்லாம் முற்காலத்தே வம்பனொருவன் வீண்பொழுது கழிப்பதற்காகப் புனைந்த கட்டுக்கதை எனக் கேலிபேசுவர்; இவர்களும் இவர்களைப் போன்ற வம்பர்களும் வாயடைத் தொழியுமாறு நன்மருந்து அருள்வாயாக. எ.று.

     தேவருலகத்துத் தேவர்கள் கடல் கடைந்தெடுத்த அமுதத்தை, “உம்பர் வானமுதம்” எனவுரைக்கின்றார். வானமுதம் - பெருமை பொருந்திய அமிர்தம். தெளிவும் இனிமையும் பொருந்திய சொற்களை அமுதம்போன்ற சொற்கள் என்பது உலக வழக்கு. பெரியோர் அறிவின் பெருமையால் சிந்தையில் எண்ணிய உண்மை மொழிகளை, “பெரியோர் உரைத்த வாய்மை” என்று உரைக்கின்றார். உண்மை யென்னாமல் வாய்மை என்பதால், தாமே கற்றுணர்வதோடு பிறரெல்லாம் கேட்க வுரைக்கத்தக்க மெய்ம்மொழிகள் என்பது பெறப்படும். கேட்போர் உளம் கொண்டு மகிழுமாறு உரைக்கவல்ல நல்லோரை உயர்வாக மதித்து ஓம்புவது சிறப்பாகவும், அவர்களை அவமதிப்பதும், அவர்களின் எதிரே மரம்போல் வாய்ச்சொல்லின்றி இருப்பதும் தீய செயலாதல் தோன்ற, “வாய்மைகளை யோதுகின்றார் தமைக்கண்டு அவமதித்து எதிரில் ஓதி மரம்போல் நிற்பது” எனக் கூறுகின்றார். ஓதுகின்றவர் எளியவராயின் இவர் பேசலுற்றால் கம்பர் போலத்தான் என்று புகழ்வதுபோல இகழ்வரென்பது புலப்பட, “கம்பர் வாய் இவர் வாய்க் கதைப்பு என்பர்” என வுரைக்கின்றார். இதற்குக் கல்வியிற் பெரியவரான கம்பர் புனைந்துரைகள் இவர் உரைக்குப் பின்னவைதான் எனினும் அமையும். இவரது பேச்சுக் குரல் எப்படிப்பட்ட தெனின், கருங்காக்கைகளின் கூட்டந்தெழும் கத்தல் சிறிதாய்த் தோற்றுவிடும் என்பாராய், “சிறு கருங்காக்கை வாய்க் கத்தல் இவர் வாய்க் கத்தலிற் சிறிதென்பர்” என்றும், இவர்போலச் சிறிது நேரம் கத்தினால் உடம்பில் உண்டாகும் சூட்டைத் தணிக்க ஒரு கலய நெய் அருந்த வேண்டும் என இகழும் குறிப்பால், “சூடேறும் நெய் ஒரு கலம் கொள்ள வேண்டும்” என்றும் கூறுவ ரென்கிறார். சூடேறு நெய் - நன்கு காய்ச்சிய நெய்; புதிது காய்ச்சிய நெய் என்றுமாம். கலம் - மண் கலயம்; நெய் யளக்கும் உழக்கு. புதிதாக ஒன்று சொன்னால், “இது யாம் முன்பே கேட்ட கதை” என்று சொல்லிச் சொல்வோர் ஊக்கத்தைக் கெடுப்பர் என்பார், “இது நாம் கேட்ட கதை என்பர்” என்றும், நூல்களின் பெயர்களை யுரைத்தால் “இவையெலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன்னிட்ட கட்டு என்பர்” என்றும் இயம்புகின்றார். இங்ஙனம் வம்பு பேசும் வம்பர்களின் தீச்செயல் நீங்க வேண்டும் என வேண்டலுற்று “வம்பர் வாய் அற ஒரு மருந்தருள்க” எனப் பரவுகின்றார்.

     இதனால் வம்பு பேசும் வம்பர் சேட்டை ஒழிய வேண்டுமென வேண்டிக் கொண்டவாறாம்.

     (3)