பக்கம் எண் :

2429.

     இளவேனில் மாலையாய்க் குளிர்சோலை யாய்மலர்
          இலஞ்சிபூம் பொய்கை அருகாய்
     ஏற்றசந் திரகாந்த மேடையாய் அதன்மேல்
          இலங்குமர மியஅணையுமாய்த்
     தளவேயும் மல்லிகைப் பந்தராய்ப் பால்போல்
          தழைத்திடு நிலாக்காலமாய்த்
     தனிஇளந் தென்றலாய் நிறைநரம் புளவீணை
          தன்னிசைப் பாடல் இடமாய்
     களவே கலந்தகற் புடையமட வரல் புடை
          நலந்தநய வார்த்தை உடனாய்க்
     களிகொள இருந்தவர்கள் கண்டசுக நின்னடிக்
          கழல்நிழற் சுகநிகருமே
     வளவேலை சூழுலகு புகழ்கின்ற தவசிகா
          மணிஉலக நாதவள்ளல்
     மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
          வளர்வயித் தியநாதனே.

உரை:

     வளவிய கடல் சூழ்ந்த உலகத்தில் உயர்ந்தோர் புகழ்கின்ற தவத்தோர் சிகாமணியான உலகநாதத் தம்பிரான் சுவாமிகள் மனம் மகிழவும், மெய்யன்பர்களின் பிறவி நோய் நீங்கவும், புள்ளிருக்கு வேளூரிற் கோயில் கொண்டருளும் வைத்தியநாதப் பெருமானே, இளவேனிற் பருவத்து மாலைப் பொழுதாய், குளிர்ந்த சோலையதாய், மலர்கள் பூத்திருக்கும் இயற்கைப் பொய்கைக் கரையதாய், இடத்துக் கேற்பச் சந்திரகாந்தக் கல் பாவிய மேடையதாய், அதன்மேல் விளங்குகின்ற நிலா முற்றத்திடும் மெல்லணை பரப்பியதாய், கொடி முல்லையும் மல்லிகையும் பரந்து நிழல் செய்யும் பந்தரை யுடையதாய், பால்போற் பெருகிப் பரந்த நிலவுக் காலமாய், குறைவற முடுகிய நரம்பினால் இசைக்கும் வீணையின் இன்னிசைப் பாட்டு ஒருபால் அமைந்ததாய்க் களவு வழி வந்த கற்புடைய இளமங்கை அருகிருந்து இனிய சொல்லாட விளையும் இன்ப நலத்துடன் இருந்தவர்கள் பெறுகிற சுகம் நின்னுடைய கழலணிந்த திருவடி நீழலிற் பெறும் பரம சுகமாகும். எ.று.

     இளவேனில், சித்திரையும் வைகாசியும் சேர்ந்த பருவம், வேனிற் காலத்து மாலை பனி சிறிதுமின்றிப் பகல் வெம்மை குன்றி உடற் கின்பம் தருவது கண்டு, “இளவேனில் மாலை” எனச் சிறப்பிக்கின்றார். மரங்கள் தளிரும் இலையும் தழைத்துக் குளிர்காற்றுப் பரவிய சோலையைக் “குளிர் சோலை” யெனக் குறிக்கின்றார். இலஞ்சி - குளம், பொய்கை, இயற்கையாய் அமைந்த நீர்நிலை. நீர்ப் பூக்கள் நிறைந்தனவாயின் நீர்நிலைகள் தட்பமும் பொற்பும் கொண்டு விளங்குவது தோன்ற “இலஞ்சி பூம் பொய்கை யருகாய்” என வுரைக்கின்றார். சந்திரகாந்தக் கல், திங்களின் ஒளியில் குளிர்ச்சிமிக்குக் குழையும் இயல்புடையதாகி, வெயிற் போதில் இறுகும் இயல்புடையது என்பர். அரமியம் - நிலா முற்றம். செல்வப் பெருமக்கள் நிலா முற்றத்திருந்து மகிழ்தற்கு இடும் மெல்லணையை “இலங்கும் அரமிய அணை” எனப் புகல்கின்றார். தளவு - கொடி முல்லை. கொடி மல்லிகை ஈண்டு மல்லிகை எனப் பொதுவாகக் குறிக்கப்படுகிறது. இவை யிரண்டும் மாலைப்போதில் மலர்ந்து நறுமணம் இனிது கமழ்வன என அறிக. சந்திரகாந்தம் பாவிய மேடைக்கு மேல் அமைந்த முல்லைப் பந்தரை இவ்வாறு கூறுகின்றார். மாசு மறுவின்றி வானம் நீல விதான மிட்டது போல் விளங்க, மதியம் பால்போல நிலாவொளி செய்யும் இரவுக் காலத்தைப் “பால் போல் தழைத்திடும் நிலாக் காலம்” என இசைக்கின்றார். தென்றல், தெற்கே பொதிகையின் மலையிலிருந்து மாலைப் போதில் வீசும் காற்று. பகற் போதின் வெம்மையில் வாடும் உயிர்கட்கு மாலையில் குளிர்ச்சியும் மென்மையும் கொண்டு வீசுவதால், தென்றல் இளந்தென்றல் எனப்படுகிறது. வள்ளலார் காலத்தே பண்டை நாளை யாழ் மறைந்தொழிந்தமையின், “நரம்புளர் வீணையை” எடுத்தோதுகின்றார். வீணைக்குரிய நரம்புகள் யாவும் உரிய முறையில் குறை படாமை தோன்ற “நிறை நரம்புளர் வீணை” என்று குறிக்கின்றார். நரம்பு இசைத்தலை உளர்தல் என்பதுபற்றி “உளர் வீணை” என வுரைக்கின்றார் மலர்ப்பந்த ரமைந்த சந்திரகாந்த மேடை யிருந்த சூழலில் வீணையின் இன்னிசை விளங்குமாறு புலப்பட, “இன்னிசைப் பாடலிடமாய்” எனப் புனைகின்றார். களவு நெறியிற் காதலாற் கலந்து ஒன்றிக் கற்பு நெறியில் மணம் புரிந்துகொண்டு அன்புருவாய்த் திகழும் இளமங்கை என்றற்கு, “களவே கலந்த கற்புடைய மடவரல்” எனச் சிறப்பிக்கின்றார். புடை கலந்த நய வார்த்தை - பக்கத்தே யிருந்து பேசும் இன்ப மொழிகள். வேனிற் காலத்து நிலவு பொழியும் மாலைப்போதில் பொய்கைக் கரையில் முல்லையும் மல்லிகையும் மலர்ந்து மணம் கமழும் பந்தர்க்கீழ் உள்ள சந்திரகாந்த மேடையில் அரமிய அணையில் ஒருபால் இளந் தென்றல் வீச, ஒருபால் வீணையின் இன்னிசை இசைக்க, கற்புடைய மடவரல் பக்கத்திருந்து இன்பமொழி பகர, விருந்து நுகரும் இன்ப நிலையம் போல்வது இறைவன் திருவடி நீழல் என்று உரைக்கும் இது, திருநாவுக்கரசரின் “மாசில் வீணையும் மாலை மதியமும், வீசு தென்றலும் வீங்கிள வேனிலும், மூசு வண்டறை பொய்கையும் போன்றதே, ஈசன் எந்தை இணையடி நீழலே” (தனிக்குறுந்) என்ற திருமொழிக்கு இனிய உரை வழங்குகிறது. நாவரசர் “இணையடி நீழல்” என்றதற் கேற்ப, வடலூர் வள்ளல், “கழலணிந்த நின் அடி நிழல்” என்கிறார்.

     இதனால், இறைவன் திருவடி நீழல் நல்கும் இன்பத்தைப் புனைந்து கூறியவாறாம்.

     (12)