பக்கம் எண் :

9

9. நல்ல மருந்து

 

புள்ளிருக்கு வேளூர்

 

சிந்து

 

பல்லவி

2430.

     நல்ல மருந்திம் மருந்து - சுகம்
          நல்கும் வைத்திய நாத மருந்து

உரை:

     சுகம் தரும் வைத்திய நாதனாகிய மருந்து நல்ல மருந்தாகும். எ.று.

     இளஞ்செடியின் மேலே தோன்றுவது தளிர்; அதன்கீழ் இருப்பது முற்றிய துணையிலை; அதன்கீழ் இவற்றைத் தாங்கும் அடிப்பகுதி தளிரைப்பல்லவம் எனவும், துணையிலையை அனுபல்லவம் எனவும், அடியைச் சரணம் எனவும் வடமொழியாற் கூறுவர்; அதனாற் பிற்காலக் கீர்த்தனைப் பாட்டுக்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. பல்லவம் போல்வது பல்லவி எனவும், அனுபல்லவம் போல்வது அனுபல்லவி எனவும் வழங்குகின்றன. அனுபல்லவியின்றியும் கீர்த்தனைகள் உண்டு. இசைப் புலமையை விரித்திசைப்பதற்குப் பல்லவியொன்றே பாடுவதுமுண்டு; அதனைப் பல்லவி பாடுதல் என்பர். சிந்து, களிப்பு என்பன தமிழ்ப் பாட்டுவகை; இவற்றில் தலைப்பும் கண்ணிகளும் ஆகிய இரண்டுமே காணப்படும். தலைப்பைப் பல்லவி என்பதுமுண்டு. பூச்சரங்களில் பக்கத்துக்கு ஒன்றாகவோ இரண்டாகவோ மலர்களை வைத்துத் தொடுப்பர். ஒவ்வொரு தொடையும் கண்ணி யெனப்படும். சிந்து என்னும் சொன் மாலையில் தலைப்பும் கண்ணிகளுமே காணப்படும். கண்ணி யொவ்வொன்றும் முதலடி முச்சீரும், இரண்டாமடி நாற்சீரும் கொண்டிருக்கும். முச்சீரடியைச் சிந்து என்றும், சிந்தடியெனவும் செய்யுளிலக்கணமுடையார் கூறுதலால், சிந்தடியால் தொடங்கும் இச் சொன்மாலை சிந்து எனப்படுகிறது. சிந்தடியின் ஈற்றில் நின்று இசைப்பது தனிச்சொல் என வரும். தனிச்சொல் தனித்த அசைச் சீராகாமல் ஈரசைச்சீரும் மூவசைச் சீருமாகவும் இருக்கும். அவற்றைத் தனிச்சீர் எனவும் கூறுவர். 'நல்ல மருந்திம் மருந்து' என்பது முச்சீர்களையுடைய சிந்து; சுகம் என்பது அசைச்சீரால் அமைந்த தனிச்சொல். 'நல்கும் வைத்தியநாத மருந்து' என்றது நாற்சீர் பெற்ற அளவடி; இதனை நேரடி என்பதுமுண்டு.

     சுகம் - திருவருள் இன்பம்; இதனை வள்ளற் பெருமான் பரமசுகம் என்று கூறுவர். வடமொழியாளர், நிரதிசய ஆனந்தம் என்பர்.