2432. சஞ்சலந் தீர்க்கும் மருந்து - எங்குந்
தானேதா னாகித் தழைக்கும் மருந்து
அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி
தானந்த மாக அமர்ந்த மருந்து: நல்ல
உரை: சஞ்சலம் - மனக்கவலை. எங்கும் எப்பொருளிலும் ஒன்றாய்க் கலந்து பரந்து நின்றானாயினும், அவற்றாற் பற்றப்படாது தூயனாய்த் தனித்தோங்கும் செம்மையுடையனாம் என்றற்கு, “எங்கும் தானே தானாகித் தழைக்கும் மருந்து” என்று கூறுகின்றார். தழைத்தல் - பரந்து விளங்குதல். 'அஞ்சுதல் ஒழிக' என அருள் புரிவது அவன் செயலாதலின், “அஞ்சல் என்று அருளும் மருந்து” என வுரைக்கின்றார். திருஞான சம்பந்தர், “அஞ்சேல் என்றருள் செய்வான் அமரும் கோயில்” (ஐயாறு) என்பது காண்க. சத்தாகவும் சித்தாகவும் ஆனந்தமாகவும் இறைவன் இருக்கின்றா னென்பதுபற்றிச் “சச்சிதானந்தமாக அமர்ந்த மருந்து” என இசைக்கின்றார். சத்து - மெய்ம்மையாகவுள்ளது. சித்து - ஞானமயமாக இருப்பது. (2)
|