பக்கம் எண் :

2433.

     வித்தக மான மருந்து - சதுர்
          வேத முடிவில் விளங்கு மருந்து
     தத்துவா தீத மருந்து - என்னைத்
          தானாக்கிக் கொண்ட தயாள மருந்து. நல்ல

உரை:

     வித்தகம் - எல்லாம் அறியவும் செய்யவும் நிறைந்த வல்லமை. சதுர்வேதம் - நான்காகிய வேதங்கள். தத்துவாதீதம் - தத்துவம் முப்பத்தாறுக்கும் அப்பாற்பட்டது. தன்னை யடைந்தவர்களைத் தன்மயமாக்கிக் கொள்வதுபற்றிச் சிவபிரானை, “என்னைத் தானாக்கிக் கொண்ட தயாள மருந்து” எனக் கூறுகிறார். “சேர்வார் தாமே தானாகச் செயுமவன்” (கழுமலம்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. தயாளம் - அருள்.

     (3)