244. காயோம் எனநின் றவர்க்கினிய
கனியாம் தணிகைக் கற்பகத்தைப்
போய்ஓர் கணமும் போற்றுகிலாய்
புன்மை புரிந்தாய் புலங்கெட்டாய்
பேயோ எங்கும் திரிந்தோடிப்
பேணா என்பைப் பேணுகின்ற
நாயோ மனமே நீயுனைநான்
நம்பி வாளா நலிந்தேனே.
உரை: பிற உயிர்களை வெறுத்தலில்லோம் என்ற அருள் நெறிக்கண் நின்ற மெய்யன்பருக்கு இனிய கனியாய் விளங்கும் தணிகை மலையில் எழுந்தருளும் கற்பகம் போல்பவ னாகிய முருகப் பெருமான்முன் சென்று ஒரு கண நேரமேனும் நின்று வழிபட மாட்டாத சிறு செய்கையே செய்தாய்; அதனால் நல்லறிவும் இழந்தாய்; மனமே! நீ என்ன பேயோ? அல்லது எங்கும் ஓடித் திரிந்து சுவை யில்லாத எலும்பை விரும்புகின்ற நாயோ! உன்னை நம்பி நான் வீணாகத் துன்புற்றேன், எ. று.
எவ்வுயிர்க்கும் இனியன செய்வதையே யன்றித் தீயன செய்வதில்லை என்ற திண்ணிய கொள்கையுடைய அருளுடைய பெரியோர்களுக்கு இனிமைச் சுவை நிறைந்த கனிபோல் விளங்குதலால் முருகப்பெருமானைக் “காயோம் என நின்றவர்க்கு இனிய கனியாம் தணிகைக் கற்பகம்” என்று சிறப்பிக்கின்றார். கற்பகம் - வேண்டுவார்க்கு வேண்டுவது ஈயும் தெய்வ மரம். இறைவனையும், “வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்” என்று திருநாவுக்கரசர் கூறுவர். இதற்கு முன்பெல்லாம் ஒரு நாளும் தணிகை சென்று முருகனை வழிபடாது வாழ்நாளைக் கெடுத்துக் கொண்டமையால், “புன்மை புரிந்தாய்” எனவும், வழிபடுதற்கு ஏதுவாகிய நல்லறிவு இல்லாது ஒழிந்தாய் என்பராய்ப், “புலம் கெட்டாய்” எனவும் மனத்தைப் பழிக்கின்றார். அலைந்தவண்ணம் இருப்பது பற்றிப், “பேயோ” எனவும், கண்ட இடங்களுக்கு ஓடிப் பயன் இல்லாது உலர்ந்து ஒடிந்து கிடக்கும் வெள்ளெலும்பைக் கண்டெடுத்துக் கடித்து வருந்தும் நாய் போலப் பலவாறாகத் திரிந்து பயனில்லாத பொருளைப் பற்றிக் கொண்டு துன்புறவது தோன்ற, “எங்கும் திரிந்தோடிப் பேணா என்பைப் பேணுகின்ற நாயோ மனமே நீ” என்றும், மனத்தைப் பற்றிக்கொண்டு துன்புற்று மெலிவது வெளிப்பட, “உனை நான் நம்பி வாளா நலிந்தேன்,” என்றும் நவில்கின்றார்.
இதனால் தணிகை முருகனை வழிபடாமல் நாயும் பேயும் போல மனம் அலைந்து வருந்துவதை உரைத்தவாறு. (4)
|