2455. தன்மய மாகு மருந்து - சிவ
சாதனர் நெஞ்சில் தழைக்கு மருந்து
சின்மய ஜோதி மருந்து - அட்ட
சித்தியு முத்தியுஞ் சேர்க்கு மருந்து. நல்ல
உரை: பிறிதொன்றின் கலப்பின்றி எல்லாம் தானேயாய் இருப்பதுபற்றித் “தன்மயமாகும் மருந்து” என்று இசைக்கின்றார். திருநீறணிதலும், அக்குமணியணிவதும், சிவபூசை புரிவதும், திருவைந்தெழுத்தை யோதுவதும் சிவ சாதனங்களாகும். இவற்றையுடையவர் சிவ சாதனராவர். சின்மய சோதி - ஞான மயமான அருளொளி, அட்ட சித்திகள் - அணிமா, இலகிமா, மகிமா, பிராத்தி, கரிமா, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. சித்தியெட்டும் இம்மையிலும், முத்தி அம்மையிலும் எய்துவன. (25)
|