பக்கம் எண் :

10

10. திருவாரூர்ப் பதிகம்

 

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2460.

     தண்ணார் மதிபோல் சீதளவெண்
          தரளக் கவிகைத் தனிநிழற்கீழ்க்
     கண்ணார் செல்வச் செருக்கினர்தம்
          களிப்பில் சிறிய கடைநாயேன்
     பெண்ணார் பாகப் பெருந்தகைதன்
          பெரிய கருணைக் குரியம்என்றே
     எண்ணா நின்று களிக்கின்றேன்
          ஆரூர் எந்தாய் இரங்காயே.

உரை:

     திருவாரூரில் கோயில் கொண்டருளும் பெருமானே, குளிர்ந்த முழுமதி போன்ற தண்ணிய வெண்மையான முத்துக்களாலாகிய வெண்குடையின் ஒப்பற்ற நீழலில் வீற்றிருக்கும் அழகிய அரசியற் செல்வத்திற் கிடந்து மகிழ்வுறும் செல்வரது செல்வ மயக்கம் போலச் சிறுமை பொருந்திய கடைப்பட்ட நாயனைய யான், பெண்ணொரு பாகத்தேயுடைய பெருந்தகையாகிய நினது பெருமையுற்ற திருவருட்குரியாயிருக்கிறோம் என்று மகிழ்கின்றேன்; எனது நிலைமை கண்டு இரங்கி யருள வேண்டும். எ.று.

     அரசர்களின் அரியணை மேல் நிழல் செய்யும் வெண் கொற்றக் குடையை, “தண்ணார் மதி போல் சீதள வெண்டரளக் கவிகை” என்று புகழ்கின்றார். தரளம் - முத்து. கவிகை - குடை. ணூண்ணார் செல்வம் - அழகிய செல்வம். செல்வச் செருக்கினர் - செல்வத்தாற் பெருமிதமுடைய அரசர். அறிவின் சிறுமையால் கீழ்ப்பட்ட நாய் போன்றவன் என்றற்குச் “சிறிய கடை நாயேன்” என வுரைக்கின்றார். கருணைக்கு உரியம் - திருவருட் பேற்றுக்கு உரிமையுற்றேம். களிப்பு - கள்ளுண்டார் எய்தும் மதி மயக்கம்; ஈண்டுத் திருவருளாகிய தேனுண்டு எய்தும் பெருமிதம்.

     இதனால், திருவருட்கு உரிய மாயினோம் என்ற பெருமிதம் உற்று மகிழ்கின்றேன் என்பதாம்.

     (1)