2467. உள்ளக் கவலை ஒருசிறிதும்
ஒருநா ளேனும் ஒழிந்திடவும்
வெள்ளக் கருணை இறையேனும்
மேவி யிடவும் பெற்றறியேன்
கள்ளக் குரங்காய் உழல்கின்ற
மனத்தேன் எனினும் கடையேனைத்
தள்ளத் தகுமோ திருஆரூர்
எந்தாய் எந்தாய் தமியேனே.
உரை: திருவாரூரிற் கோயில் கொண்டருளும் பெருமானே, ஒரு நாளும் ஒரு சிறிதும் என் மனக்கவலை யொழிகின்றதில்லை; கடல் போன்ற நின் திருவருளிற் சிறிதளவும் எய்தப் பெறுகின்றேனில்லை; கள்ளச் செயலை யுடைய குரங்குபோல் அலைகின்ற மனமுடையேனாய்க் கீழ்பட்ட என்னைப் புறக்கணித் தொதுக்குவது நின் பெருமைக்குத் தகுதியாகுமா? எ.று.
திருவாரூர்ப் பெருமானாகிய உனது திருவருள் நோக்கமல்லது வேறு துணையொன்றும் இல்லாதவன் என்றற்குத் “தமியேன்” என்று வள்ளற் பெருமான் தம்மைக் குறிக்கின்றார். சிவபெருமான் திருவடி நினைவார்க்கு மனக்கவலை யுண்டாகாது எனச் சான்றோர் உரைக்கவும், நின்னையே நினைந்தொழுகும் எனக்கு மனக்கவலை சிறிதும் நீங்கவில்லை என்றற்கு, “உள்ளக் கவலை ஒரு சிறிதும் ஒருநாளேனும் ஒழித்திடவும்” எனவும், மனக்கவலைகளை மாற்றுவது இறைவன் திருவருளாதலால் “வெள்ளக்கருணை இறையேனும் மேவியிடவும் பெற்றறியேன்” எனவும் உரைக்கின்றார். திருவருட் பேற்றுக்கு ஒன்றிய திண்மை வாய்ந்த மனமுடையனாதல் வேண்டும் என்பர்; குரங்கின் குணமும் செயலுமுடையதாக இயலும் எனது மனம் யான் தேடிக்கொண்ட தன்மையின், அதன் செயல் காரணமாக என்னைப் புறக்கணித்துத் திருவருள் செய்யாமை முறையாகாது என்றற்குக் “கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேனெனினும் கடையேனைத் தள்ளத் தகுமோ” என முறையிடுகின்றார். மனத்தின் குரங்குத் தன்மையால் கடைப்பட்டேன் என்றற்குக் “கடையேன்” என்று கூறுகின்றார்.
இதனால், குரங்குத் தன்மையுடைய மனமுடையனாதல்பற்றி அருளா தொழிதல் கூடாதென முறையிட்டவாறாம். (8)
|