2468. எந்தாய் ஒருநாள் அருள்வடிவின்
எளியேன் கண்டு களிப்படைய
வந்தாய் அந்தோ கடைநாயேன்
மறந்து விடுத்தேன் மதிகெட்டேன்
செந்தா மரைத்தாள் இணைஅன்றே
சிக்கென் றிறுகப் பிடித்தேனேல்
இந்தார் சடையாய் திருஆரூர்
இறைவா துயரற் றிருப்பேனே.
உரை: பிறை தங்கிய சடையை யுடையவனே, திருவாரூரில் எழுந்தருளும் இறைவனே, ஒருநாள் திருவருள் உருவினனாய் எளியவனாகிய யான் கண்டு களிக்குமாறு எழுந்தருளினாய்; அந்தோ, கடைப்பட்ட நாய் போன்ற யான் உண்மையறியாமல் மறந்து மதி கெட்டு உன்னை விட்டு விட்டேன்; அப்பொழுதே, செந்தாமரை மலர் போன்ற திருவடிகளைச் சிக்கென இறுகப் பற்றிக் கொண்டிருப்பேனாயின், இப்போது துன்பம் சிறிதுமின்றி இருப்பேன்; என்ன செய்வேன்! எ.று.
இந்து - பிறைச்சந்திரன், இறைவன் அருளுருக் கொண்டு போந்து காட்சி தந்த குறிப்பை வாழ்க்கை வரலாறு எழுதினோர் கூறிற்றிலராயினும், வள்ளலார் தாமே அகச்சான்றாக ஓதியருளுவது இன்பம் தருகிறது; மக்கள் வடிவில் அருட்குருவாய் எழ்ந்தருளி ஞானம் வழங்குவது இறைவன் அருள்மரபு எனச் சைவ மெய்ந்நூல்கள் உரைப்பது நினைவு கூரத்தக்கது, மக்கள் வடிவில் வந்த ஞானகுரவனை உண்மையறியாது கைவிட்டமைக்கு வருந்துகின்றாராதலால், “ஒருநாள் அருள்வடிவில் எளியேன் கண்டு களிப்படைய வந்தாய்” எனவும், “மறந்து விடுத்தேன் மதி கெட்டேன்” எனவும் இயம்புகிறார். மணிவாசகப் பெருமான்போல அருட் குரவன் திருவடிகளைச் சிக்கெனப் பிடிக்காமைபற்றி இவ்வாறு வருந்துகிறார். “எம்பொருட்டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவதினியே” (திருவாச. 534) என வருவது காண்க. 'மறந்தார் நலம் துறந்தார்' என்று சான்றோர் கூறுதற் கொப்ப, இறைவன் திருவடிகளைப் பற்றா தொழிந்தமையை நினைந்து வருந்துகின்றாராகலின், “தாளிணை யன்றே இறுகப் பிடித்தேனேல் துயரற்றிருப்பேன்” என்று இசைக்கின்றார்.
இதனாற் கண்டபோது திருவடியை இறுகப் பற்றா தொழிந்தமைக்கு வருந்துமாறு தெரிவித்தவாறாம். (9)
|