2469. இருப்பு மனத்துக் கடைநாயேன்
என்செய் வேன்நின திருஅருளாம்
பொருப்பில் அமர்ந்தார் அடியர்எலாம்
அந்தோ உலகப் புலைஒழுக்காம்
திருப்பில் சுழன்று நான்ஒருவன்
திகைக்கின் றேன்ஓர் துணைகாணேன்
விருப்பில் கருணை புரிவாயோ
ஆரூர் தண்ணார் வியன் அமுதே.
உரை: திருவாரூரில் எழுந்தருளும் தண்ணிய பெருமை சான்ற அமுதமாகிய பெருமானே, நினது திருவருளாகிய இன்பமலையில் அடியராயினார் எல்லாரும் இனிதிருக்கின்றார்கள்; இரும்பு போன்ற மனமுடையவனாதலால், கடைப்பட்ட நாய் போன்ற யான் செய்வதறியாமல் உலகியலாகிய புலையொழுக்கத்தில் ஆழ்ந்து அலமந்து ஒருவனாய்த் திகைக்கின்றேன்; துணை யாதும் இல்லாமல் வருந்தும் என்பால் விருப்புற்றுக் கருணை புரிவாயோ, கூறுக. எ.று.
வியனமுது - பெருமை சான்ற அமுதம். மனம் இரும்பின் தன்மையுற்றதனால், கடைப்பட்ட நாயை ஒத்தேனென்பார், “இரும்பு மனத்துக் கடைநாயேன்” என்று கூறுகிறார். சலியாத் தன்மையுடைய தென்பது பற்றி, “திருவருளாம் பொருப்பு” எனப் புகல்கின்றார். உலகியல் வாழ்வு துன்பம் விளைவிப்பது கண்டு, “உலகப் புலையொழுக்கத் திருப்பு” என்று கூறுகின்றார். புலையொழுக்கம் - துன்பத்துக்கு ஏதுவாகும். தீயொழுக்கம், அருள் உள்ளங்கொண்டு ஆண்டருள்க என்பார், “விருப்பிற் கருணை புரிவாயோ” என விளம்புகின்றார்.
இதனால் விருப்பத்துடன் அருள் புரிக என வேண்டியவாறாம்.
இப் பதிகப் பாட்டுக்கள் அந்தாதித் தொடையில் அமைந்தவை. (10)
|