11
11. திருக்கண்ணமங்கை
திருமகள் வாழ்த்து
வள்ளலார் திருவாரூர்க்குச் சென்று தியாகப்
பெருமானை வழிபட்டுக் கொண்டு, புள்ளிருக்கு வேளூர்க்குத் திரும்பி வரும்போது, அணிமையில் திருக்கண்ண
மங்கை என்ற அழகிய ஊர்க்கு வந்தபோது, பகற்போது கழிந்தமையின், உடன் வந்த செல்வ வேளாளர்
பெருமனையில் தங்கினார். அங்கே கோயில் கொண்டிருக்கும் திருமால் கோயிலில் உள்ள திருமகள்
திருக்கோயிலில், தேன்வண்டு கூடமைத்துத் தான் ஈட்டிய தேனை அம்மைக் களித்துத் திருவருள் பெற்றதென்றும்,
அவள் அருளால் தேன்கூடும் வழிபடப் பெறுகிறதென்றும் ஊரவர் கூறக்கேட்டு வள்ளற்பெருமான் வியந்து,
திருமகளை “உலகம் புரக்கும் பெருமான்” எனத் தொடங்கும் திருவிருத்தத்தைப் பாடிப் பரவினார் என்பர்.
திருமங்கை மன்னன் இங்கே கோயில் கொண்டருளும் திருமாலைப் “பத்தராவி” என்று பாடிப் பரவினமையின்,
“பத்தராவிப் பெருமாள்” என்று அன்பர்கள் பெயர் கூறி மகிழ்கின்றார்கள்.
2470. உலகம் புரக்கும் பெருமான்தன்
உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
உவகை அளிக்கும் பேரின்ப
உருவே எல்லாம் உடையாளே
திலகம் செறிவாள் நுதற்கரும்பே
தேனே கனிந்த செழுங்கனியே
தெவிட்டா தன்பர் உளத்துள்ளே
தித்தித் தெழும்ஓர் தெள்ளமுதே
மலகஞ் சுகத்தேற் கருளளித்த
வாழ்வே என்கண் மணியேஎன்
வருத்தந் தவிர்க்க வரும்குருவாம்
வடிவே ஞான மணிவிளக்கே
சலகந் தரம்போற் கருணைபொழி
தடங்கண் திருவே கணமங்கைத்
தாயே சரணம் சரணம்இது
தருணம் கருணை தருவாயே.
உரை: உலகத்தைக் காக்கும் பெருமானாகிய திருமாலின் மனத்தின் கண்ணும் தோளிலும் வீற்றிருந்து மகிழ்ச்சி நல்கும் பேரின்ப வடிவானவளே, உலகனைத்தும் உடைய தாயே, திலகமணிந்த ஒளி பொருந்திய நெற்றியையுடைய கரும்பு போல்பவளே, தேன் சொரியக் கனிந்த கனியே, அன்பர் உள்ளத்தில் தித்தித்துத் தெவிட்டாது மிக்கெழும் ஒப்பற்ற தெளிந்த அமுதமாகியவளே, மலத்தால் உளதாகும் மயக்கத்தையுடைய எனக்கு அருள் புரிந்து வாழ்வளித்த அன்னையே, என் கண்ணின் மணியாகியவளே, எனது வருத்தம் நீங்க வந்தருளும் குரு வடிவமே, ஞானவொளி செய்யும் மணிவிளக்கே, நீர் கொண்ட மேகம்போல அருள் மழை பொழியும் பெரிய கண்களையுடைய திருமகளே, திருக்கண்ணமங்கையில் எழுந்தருளும் அன்னையே, உன் திருவடியிற் புகலடைந்தேனாதலால், இது சமயமாகலின் அருள் புரிவாயாக. எ.று.
காக்கும் கடவுளாதலால், திருமாலை, “உலகம் புரக்கும் பெருமான்” எனவும், அருளரசியாய் அவன் மார்பிலும், வெற்றி தருபவளாய் அப்பெருமான் தோளிலும் இருந்தருளுவதால், “உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி” எனவும், தன்னையுடைய திருமாலுக்கும் தன்னைப் பரவும் அடியவர்க்கும் பேருவகை நல்கும் பெருமாட்டியாதல் விளங்க, “உவகையளிக்கும் பேரின்ப உருவே” எனவும் ஓதுகின்றார். உலகனைத்தும் அவளது உடைமையாதலால், “எல்லாம் உடையாளே” எனப் புகழ்கின்றார். நெற்றியில் திலகமணிதல் மங்கையர்க்கு மங்கலமாதலால், “திலகம் செறி வாணுதற் கரும்பே” எனப் போற்றுகிறார். சிந்திக்கும் தோறும் அன்பர் சிந்தையில் தேனூற விளங்குவதுபற்றி, “அன்பர் உளத்துள்ளே தெவிட்டாது தித்தித்தெழும் ஓர் தெள்ளமுதே” எனச் சிறப்பிக்கின்றார். கஞ்சகம் - கஞ்சாக் குடித்தார்க் கெய்தும் மயக்கம். கஞ்சமம் - கஞ்சாச் செடி. “கறி கலந்து கஞ்சக நறுமுறி யளைஇ” (பெரும்பாண். 307-8) எனச் சான்றோர் குறிப்பது காண்க. மலம் காரணமாகவுளதாகும் மயக்கம், ஈண்டு “மல கஞ்சகம்” எனப்படுகிறது. வருத்தம் - அறியாமையால் உண்டாகும் துன்பம். கந்தரம் - மேகம். சலகந்தரம், நீர் மிக்கு நிறம் கரிதாகிய மேகம். கருமுகில் மழை பொழிவதுபோல் அருளொழுகுவன திருமகளின் கண்கள் என்பதாம்; திருக்கண்ண மங்கையில் கோயில் கொண்டருளும் திருமாலுக்குத் தேவியென்பது பற்றிக் “கணமங்கைத் தாயே” என்று போற்றுகின்றார். இங்கே இவட்கு 'அபிடேக வல்லி' என்று பெயர் வழங்குகின்றனர். தருணம் - சமயம்.
இதனால், திருக்கண்ணமங்கையில் எழுந்தருளும் தாயாரைப் பாராட்டி அருள் பெற வழிபட்டவாறாம்.
|