12
12. மலைமகள் வாழ்த்து
செல்வத்துக்குத் தெய்வமாகிய
திருமகளை நினைந்த வுள்ளம் ஞானச் செல்வியாகிய கலைமகள் திருவருளை நினைத்தலின், அப்பெருமாட்டியை
இத் திருப்பதிகம் பராவுகின்றது.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
2471. தவளமலர்க் கமலமிசை வீற்றிருக்கும்
அம்மனையைச் சாந்தம் பூத்த
குவனைமலர்க் கண்ணாளைப் பெண்ணாளும்
பெண்ணமுதைக் கோதி லாத
பவளவிதழ்ப் பசுங்கொடியை நான்முகனார்
நாஓங்கும் பாவை தன்னைக்
கவளமத கயக்கொம்பின் முலையாளைக்
கலைமாதைக் கருது வோமே.
உரை: வெண்மை நிற மலராகிய வெண்டாமரைமேல் வீற்றிருக்கும் தாயாகியவளும், சாந்தமே குடிகொண்டிருக்கும் குவளை மலர் போன்ற கண்களையுடையவளும், பெண்மைக்குரிய உயர் பண்பு நிறைந்து பெண்ணமுதமாகியவளும், குற்றமில்லாத பவளம்போற் சிவந்த இதழ்களையுடைய பசுங்கொடி போன்றவளும், நான்கு முகங்களையுடைய பிரமதேவனது நாவில் எழுந்தருளும் பாவை போல்பவளும், உணவைக் கவளமாகத் திரட்டியுண்ணும் மதமிக்க யானையின் கொம்பு போன்ற கொங்கைகளை யுடையவளுமாகிய கலைமகளை மனத்தின்கண் நினைந்து வழிபடுவோமாக. எ.று.
தவளம் - வெண்மை. அம்மனை - தாய். சாந்தம் - பாராட்டினும் பழிப்பினும் கோடாத குணஞ்செயலுடைமை. பெண்மைப் பண்பெலாம் நிறைந்து பெண்ணினத்தின் பேரமுத வடிவாய்ப் பிறங்குவது விளங்க, “பெண்ணாளும் பெண்ணமுது” எனப் பேணிக் கூறுகின்றார். சிவந்த நிறமுடைமைபற்றி, கலைமகளின் வாயிதழை, “பவள விதழ்” எனவும், மென்மைத் தன்மையால் பச்சிளங்கொடி போல்வது தோன்ற, “பசுங்கொடி” எனவும் உரைக்கின்றார். கலைமகள் இருக்குமிடம் பிரமதேவனது வேதமோதும் நாவிடம் என்பது கொண்டு, “நான்முகனார் நாவோங்கும்” என நவில்கின்றார். கவளம் - திரட்டிய உணவு. மதக்கயம் - மதம் பொழியும் யானை. உயர்ந்தேந்திய நிலைமை புலப்பட, மகளிர் கொங்கைக்கு மத யானையின் மருப்பை உவமிக்கும் மரபு பற்றி, “மதகயக் கொம்பின் முலையாள்” என மொழிகின்றார்.
இதனால் கலைமகளின் திருவுருவை எடுத்தோதி வழிபட்டவாறாம். (1)
|