பக்கம் எண் :

2472.

     சங்கம்வளர்ந் திடவளர்ந்த தமிழ்க்கொடியைச்
          சரச்சுவதி தன்னை அன்பர்
     துங்கமுறக் கலைபயிற்றி உணர்வளிக்கும்
          கலைஞானத் தோகை தன்னைத்
     திங்கணுதல் திருவைஅருட் குருவைமலர்
          ஓங்கியபெண் தெய்வந் தன்னைத்
     தங்கமலை முலையாளைக் கலையாளைத்
          தொழுதுபுகழ் சாற்று கிற்பாம்.

உரை:

     சங்கம் வளர்ந்தபோது உடன் ஓங்கி வளர்ந்த தமிழ்க் கொடியாகியவளும், சரசுவதி தேவியாகியவளும், தன்பால் அன்புடையவர் உயர்வு பெறக் கலை பயில்வித்து மெய்யுணர்வு பெறுவிக்கும் கலைஞானமாய மயில் போல்பவளும், பிறைத்திங்கள் போன்ற நெற்றியையுடைய கல்விச் செல்வ மகளும், அருட்குருவாய் விளங்குபவளும், வெண்டாமரையில் வீற்றிருந்தோங்கும் பெண் தெய்வமானவளும், தங்கமலை போன்ற கொங்கைகளையுடைய கலைமகளைத் தொழுது அவளது திருப்புகழை ஓதி யுய்வோமாக. எ.று.

     சங்க காலத்தில் வேந்தரும் செல்வரும் வளமுடைய மக்களும் புலவர்களைக் கொண்டு இயற்றமிழையும், பாணர்களால் இசைத் தமிழையும், கூத்தர்களால் நாடகத் தமிழையும் பேணி வளர்த்தனராகலின், “சங்கம் வளர்ந்திட வளர்த்த தமிழ்க்கொடி” என்று கூறுகின்றார். கல்வியாளர் சிந்தையில் நீங்காதிருப்பதுபற்றிச் “சரச்சுவதி” எனக் கலைமகளைப் பாராட்டுகின்றார்கள். கற்பார் கற்குந்தோறும் மனத்தில் கல்வியில் அன்பும், உணர்வின்கண் மெய்ம்மையும் ஞானமும் எய்தி இன்பம் செய்வதால், “அன்பர் துங்கமுறக் கலை பயிற்றி உணர்வளிக்கும் கலை ஞானத்தோகை” எனவுரைக்கின்றார். தோகை - மயில். கல்வியும் செல்வவகையாதலால், கலைமகளைத் “திரு” வெனச் சிறப்பிக்கின்றார். திருவருள் ஞானமெய்த உதவுவதால், “அருட்குரு” எனவும், பெண்மை வடிவிற் போந்து தெய்வ நெறியிற் செலுத்துவதுபற்றிப் “பெண் தெய்வம்” எனவும் பராவுகின்றார். பொன்னிறச் சுணங்கு படர்தலின், “தங்கமலை முலையாள்” என ஏத்துகின்றார். அப்பெருமாட்டியைத் தொழுவோர் நலம் பலவும் பெறுவதால், “தொழுது புகழ் சாற்று கிற்பாம்” எனக் கூறுகின்றார்.

     இதனால், கலைமகளைத் தமிழாகவும் ஞானம் நல்குவதால் அருட்குருவாகவும் போற்றுமாறு காணலாம்.

     (2)