13
13.
பழமலைப் பதிகம்
அஃதாவது பழமலையில் எழுந்தருளும்
சிவபெருமான் பொருளாகப் பாடிய பாட்டுக்கள் பத்துக் கொண்டது என்பதாம். முதுகுன்றம் எனச் சைவத்
திருமுறைகள் குறிக்கும் திருப்பதி பழையமலை எனப் பொருள் படுதலின், பழமலை எனவும் நாட்டு மக்களால்
உரைக்கப்படுவதுண்டு. முதுகுன்றப் பெருமானை யதனால் பழமலைநாதர் என்பர். சைவத் திருக்கோயில்கள்
வடமொழியின் செல்வாக்கிற்குள்ளாயபோது, முதுகுன்றம் விருத்த அசலம் என மொழி பெயர்க்கப்பட்டது.
அது பின்பு விருத்தாசலம் என இயைந்து வழங்குவதாயிற்று. இப்போது விருத்தாசலமே பெருக வழங்குகிறது.
சிலர், மலையைக் குறிக்கும் அசலம் என்ற சொற்பொருளில் கிரி என்பதைப் புகுத்தி விருத்தகிரி
என்றும், சிவபிரானை விருத்த கிரீசர்- விருத்த கிரிநாதர் எனவும் கூறுவர்.
வடலூர் வள்ளல் விரும்பியுறைந்த
கருங்குழிக்கு மேற்கில் இருபது கற்களுக்கு அப்பால், மணி முத்தாற்றின் தென்கரையில் உள்ள இம்
முதுகுன்றம் சென்று, அங்கே கோயில் கொண்டுள்ள சிவபெருமானைக் கண்ணாரக்கண்டு, தொழுது வணங்கி
மனம் குளிர்ந்து பாடியவை இங்கே வரும் திருப்பாட்டுக்கள்.
திருமுதுகுன்றம் புக்க திருஞானசம்பந்தர்
அங்கே சிவஞான யோகியர்களின் பெருநிலையும் பேரொழுக்கமும் ஞான யோக நிலையும் கண்டு மகிழ்ந்து
பாடியதுபோல வள்ளற்பெருமானும் சிவபரம்பொருளின் ஞானத் திரளாய் நின்ற நிலையும் சிவயோகக்
காட்சியாளரின் ஞான யோகக் காட்சியும் கண்டும் சிந்தித்தும் பாடியருளுகின்றார்.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
2474. திருமால் கமலத் திரூக்கண்மலர்
திகழு மலர்த்தாட் சிவக்கொழுந்தக்
கருமா லகற்றுந் தனிமருந்தக்
கனக சபயிற் கலந்தஒன்ற
அருமா மணிய ஆரமுத
அன்ப அறிவ அருட்பெருக்கக்
குருமா மலயப் பழமலயிற்
குலவி "யாங்கக் கண்"ட"ன.
உரை: திருமாலின் தாமரை போன்ற கண்ணாகிய மலர் கிடந்து விளங்கும் பூப்போன்ற திருவடியையுடைய சிவக்கொழுந்தாகியவனும், பிறவியால் உண்டாகும் மயக்கத்தைப் போக்கியருளும் மருந்தாகுபவனும், தில்லைப் பொற்சபையில் அன்பர் மனம் கலந்து மகிழ ஆடும் ஒரு பரம்பொருளாயவனும், பெறற்கரிய மாமணியும், அரிய அமுது போல்பவனும், அன்பும் அறிவும் அருட் பெருக்குமாய் விளங்கும் குருபரனும் ஆகிய சிவபெருமானை முதுகுன்றில் திருக்கோயில் கொண்டு ஓங்குவதைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தேன். எ.று.
சக்கரப்படை வேண்டித் திருமால் ஆயிரம் தாமரைகளைக் கொண்டு நாளும் சிவனை யருச்சித்து வருகையில் ஒரு நாள் ஒரு பூக் குறையக் கண்டு வருந்திக் தமது கண்ணும் தாமரை மலர் போறலால், ஒரு கண்ணைப் பறித்தெடுத்து வழிபட்டாரென்ற வரலாறுபற்றி, “திருமால் கமலத் திருக்கண் மலர் திகழும் மலர்ந்தாள் சிவக்கொழுந்து” எனப் புகழ்கின்றார். அருளுருவாய சிவத்தின் மென்கண்மையை வியந்து, “சிவக்கொழுந்து” என்று சிறப்பிக்கின்றார். கருமால் - தாய் கருவிற்றோன்றிப் பிறப்பதால் உளதாகும் மயக்கம். “மையல் மானுடமாய் மயங்கும் வழி, ஐயனே தடுத்தாண்டருள்” (தொண். புரா) என நம்பியாரூரர் கூறுவது காண்க. பிறவி மயக்கத்தை அருள் ஞானமாகிய மருந்தளித்துப் போக்கும் பெருமானாதலால், “கருமால் அகற்றும் தனி மருந்து” எனப் போற்றுகின்றார். கனக சபை -தில்லைப் பொற் சபை. கண்டு பரவுவோருடைய மனத்திற் கலந்து நின்று இன்புறுத்துமாறு தோன்ற, “கனக சபையிற் கலந்த ஒன்று” எனக் கூறுகின்றார். பெறற்கரிய மாணிக்கமணி போல்வதால், சிவனை “அருமாமணி” எனவும், அன்பும் அறிவுமாய் உலகுயிர்களை யுய்விப்பதுபற்றி, “அன்பை யறிவை” எனவும் விளம்புகின்றார். அருட் பெருக்கு - அருட் கடல். சலியாமையும் திண்மையுமுடைய மலைபோல் நின்று சிவஞானம் வழங்கியருளுமாறு புலப்படச் சிவனைக் “குருமாமலை” என்று கூறுகிறார். குருமலை-செம்மை நிறமுடைய மலையென்றுமாம். பழமலையாகிய திருமுதுகுன்றின்கண் கோயில் கொண்டருளுவது விளங்க, “பழமலையிற் குலவியோங்கக் கண்டேன்” என மகிழ்ந்து ஓதுகின்றார்.
இதனால், பழமலைக் கோயிலில் பரமனைக் கண்டு பரவிய திறம் தெரிவித்தவாறாம். (1)
|