2475. வான நடுவே வயங்குகின்ற
மவுன மதியை மதிஅமுதைத்
தேனை அளிந்த பழச்சுவையைத்
தெய்வ மணியைச் சிவபதத்தை
ஊனம் அறியார் உளத்தொளிரும்
ஒளியை ஒளிக்கும் ஒருபொருளை
ஞான மலையைப் பழமலைமேல்
நண்ணி விளங்கக் கண்டேனே.
உரை: மவுன ஞான வானத்தில் நடுவே ஒளிர்கின்ற ஞான மதியமாகியவனும், அந்த மதியின்கண் ஊறியொழுகும் அமுத மானவனும், தேன் போன்றவனும், நன்கு கனிந்த கனியிடத்துப் பெறும் சுவையாகியவனும், தெய்வமணியானவனும், சிவமாகிய பதப்பொருளும் குற்றமில்லாத சான்றோர் மனத்தின்கண் விளங்கும் ஒளியானவனும், ஊனமுடையார் காணாவாறு மறைந்து நிற்பவனும், சிவஞான மலையாகியவனுமாகிய பெருமானை, முதுகுன்றத்தையடைந்து அருளொளி விளங்கக் கண்டு மகிழ்ந்தேன். எ.று.
மோன முனிவர்களின் ஞான யோகக் காட்சியிற் றோன்றும் ஞானாகாசம் ஈண்டு வானம் என்று குறிக்கப்படுகிறது. ஆங்குத் தோன்றும் ஞான சந்திரனை, “அமுத சந்திரன்” எனவும், அதன்கண் ஊறியொழுகும் தேனை யுண்டு சிவானந்தம் எய்துவர் எனவும் யோக நூலார் கூறுதலால் “வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதியமுதை” என வுரைக்கின்றார். “கையறவிலாது நடுக்கண் புருவப் பூட்டு, கண்டு களி கொண்டு திறந்துண்டு நடு நாட்டு” (5258) எனப் பிறாண்டும் வள்ளற்பெருமான் குறிக்கின்றார். சிவ பதத்திற் பெற்று நுகரும் பேரின்பப் பொருளாதலின் “சிவபதம்” என்று கூறுகின்றார். ஊனம் - குற்றம். குற்றமில்லாத சான்றோர் உள்ளத் தொளிர்வது கூறவே, ஊனமுடையார் உள்ளத்தில் தோன்றானென்பது பெறப்படுதலின், “ஒளிக்கும் ஒரு பொருள்” என வுரைக்கின்றார். “ஞானந்திரளாய் நின்ற பெருமான்” (அண்ணா) என ஞானசம்பந்தர் விதத்துரைப்பதால், “ஞானமலை” என்று புகழ்கின்றார்.
இதனால் பழமலைப் பெருமானை மோன ஞான மலையாகக் கண்டு பரவுமாறு காணலாம். (2)
|