2476. தவள நிறத்து திருநீறுத் தாங்கு
மணித்தோள் தாணுவைநம்
குவளை விழித்தாய் ஒருபுறத்தே
குலவ விளங்கும் குருமணியைக்
கவள மதமா கரியுரிவைக்
களித்த மேனிக் கற்பகத்தைப்
பவள மலையைப் பழமலையிற்
பரவி ஏத்திக் கண்டேனே.
உரை: வெண்மை நிறமுடைய திருநீறு அணிந்த அழகிய தோள்களையுடைய தாணுவும், குவளை மலர் போன்ற கண்களையுடைய உமாதேவியாகிய நம் தாய் ஒரு பக்கத்தே இருக்க விளங்கும் குருபரனும், கவள முண்ணும் மதயானையின் தோலைப்போர்த்து மகிழும் திருமேனியையுடைய கற்பகம் போல்பவனும், செம்மலையை ஒப்பவனுமாகிய சிவ பெருமானை முதுகுன்றத் திருக்கோயிலில் அருளொளி திகழ வீற்றிருப்பது கண்டு இன்புற்றேன். எ.று.
தவள நிறம் - வெண்மை நிறம். ஒளி திகழும் இயல்பிற்றாதலால் வெண்ணீற்றினைத் “தவள நிறத்துத் திருநீறு” எனப் புகழ்கின்றார். மணித்தோள்-அழகிய தோள். தாணு - சிவன் பெயர்களில் ஒன்று. நெருப்புத் தூணாய் ஒருகால் நின்றமைபற்றிச் சிவன் தாணு எனப்படுகின்றான் என்பர். “குவளைக் கண்ணி கூறன்” என மணிவாசகர் முதலியோர் உமாதேவியைப் பரவுபவாதலின், “குவளை விழித்தாய்” எனக் கூறுகின்றார். மாதொரு பாகனாய் இருந்து சான்றோர்க்குத் திருவருள் ஞானம் வழங்குவதுபற்றி, “தாய் ஒருபுறத்தே குலவ விளங்கும் குருமணி” எனப் போற்றுகின்றார். யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டு பொலியும் மாண்புடையனாதலால் “கரியுரிவைக் களித்த மேனிக் கற்பகம்” என இயம்புகின்றார். கற்பகம் - தன்னையடைந்தார்க்கு வேண்டுவது வழங்கும் தேவருலகத்து நன்மரம். கற்பகம் போல்வதால் “கற்பகம்” என்கின்றார். சிவந்த மலை போறலால் “பவளமலை” எனப்படுகின்றார். பழமலை - முதுகுன்றம்.
இதனால், இடப்பால் உமையம்மை விளங்க ஞானாசிரியனாய்க் காட்சி நல்கக் கண்டு இன்புற்றது கூறியவாறாம்.
(3)
|