பக்கம் எண் :

2477.

     இளைத்த இடத்தில் உதவிஅன்பர்
          இடத்தே இருந்த ஏமவைப்பை
     வளைத்த மதின்மூன் றெரித்தருளை
          வளர்த்த கருணை வாரிதியைத்
     திளைத்த யோகர் உளத்தோங்கித்
          திகழுந் துரியா தீதமட்டுங்
     கிளைத்த மலையைப் பழமலையிற்
          கிளர்ந்து வயங்கக் கண்டேனே.

உரை:

      வறுமையால் மனம் சோர்ந்தபோது வேண்டுவன வுதவி உண்மையன்பர் கையகத்திருக்கும் சேமநிதியொப்பவனும், சூழ நின்ற மதில் மூன்றையும் எரித்தழித்துத் தனது திருவருளைச் செய்து பெருக்கிய கருணைக் கடலாகியவனும், சிவயோகத்தில் தோய்ந்து மகிழும் சான்றோர் மனத்தின்கண் ஓங்கும் துரியாதீத நிலையில் பெருகித் தோன்றும் மலை போல்பவனும் ஆகிய சிவபெருமானைத் திருமுதுகுன்றத்துத் திருக்கோயிலையடைந்து வீற்றிருந்தருளுவது கண்டு மகிழ்ந்தேன். எ.று.

     வறுமையால் மனம் சோருங்கால் மேனியிளைத்துச் சுருங்குவதால், வறுமை நிலையை, “இளைத்த விடம்” எனவும், அந்நிலையில் எய்தும் உதவியே உண்மை யுதவியாகலின், “உதவி” எனவும், உதவும் உள்ளமுடையார் இடத்தே யிருந்தாலன்றிப் பயனுடைய செல்வமாகாமையின், “அன்பரிடத்தே யிருந்த ஏமவைப்பு” எனவும் விளக்கிக் கூறுகின்றார். ஏமம் - பொன். ஏமவைப்பு - சேமநிதி. திரிபுரத்தசுரர் தமது நகர்க்குக்காவலாக நிறுவிய மதில் மூன்றையும் “வளைத்த மதில் மூன்று” எனக் குறிக்கின்றார். உலகுயிர்கட்கு அருள் புரிவது கருதி மதில் மூன்றும் எரிக்கப்பட்டமையின், “மதில் மூன்றெரித்து அருளை வளர்த்த கருணை வாரிதி” எனப் புகழ்கின்றார். வாரிதி - கடல். சிவயோகத்தில் ஊறும் இன்பத்தைத் துய்க்கும் சான்றோர்களை, “திளைத்த யோகர்” எனச் சிறப்பிக்கின்றார். உளம் நிற்கும் சுழுத்தி நிலைக்கு அப்பாலாய துரியத்தாற்கு அப்பால் மூலாதாரத்தை இடமாகக் கொண்ட துரியா தீதத்திற் காட்சி தந்து இன்பம் செய்தல்பற்றி, சிவனை, “உளத்தோங்கித் திகழும் துரியா தீதமட்டும் கிளைத்த மலை” எனக் கூறுகின்றார்.

     இதனால், அதீதத்தைப் புரியும் சிவயோகியர் உள்ளத்திற் காட்சி தந்து மகிழ்விக்கும் சிவத்தின் இயல்பு தெரிவித்தவாறாம்.

     (4)