பக்கம் எண் :

2478.

     மடந்தை மலையாண் மனமகிழ
          மருவும் பதியைப் பசுபதியை
     அடர்ந்த வினையின் தொடக்கைஅறுத்
          தருளும் அரசை அலைகடன்மேல்
     கிடந்த பச்சைப் பெருமலைக்குக்
          கேடில் அருள்தந் தகம்புறமும்
     கடந்த மலையைப் பழமலைமேற்
          கண்கள் களிக்கக் கண்டேனே.

உரை:

      மலைமகளாகிய மடந்தையின் மனம் களிக்கக் கூடியுறையும் கணவனும், பசுபதியும், உயிர்களைப் பிணித்து வருத்தும் வினைத் தொடர்பைப் போக்கி யருள் புரியும் அரசனும், அலை பொருந்திய கடலிற் பள்ளிகொள்கின்ற பச்சை மலை போன்ற திருமாலுக்குக் கெடாத திருவருள் செய்து அவர்க்கேயன்றி ஏனை யுயிர்களின் அகமும் புறமும் கடந்து விளங்கும் மலை போல்பவனுமாகிய சிவபெருமானைத் திருமுதுகுன்றின்கண் காணும் கண் களிக்கக் கண்டு இன்புற்றேன். எ.று.

     மடந்தை-ஈண்டுப் பெண்கட்குரிய பருவப் பெயராகாது பெண்ணெனப் பொதுப்பட நின்றது. மலையாள் - மலையரசன் மகளாகிய உமாதேவி. பதி - தலைவன்; கணவன். பசுபதி - சிவபிரான்; பசுக்களாகிய ஆன்மாக்களின் தலைவனாதலால் பசுபதியென்று பெயர் கூறப்படுகிறது; பாசுபதரால் வழிபடப் பெறுவதுபற்றிப் பசுபதி எனச் சிவனுக்குப் பெயராயிற்றென்பதுமுண்டு. மிகப்பலவாய் உயிர்களைப் பிணித்துவிடாது தொடர்வனவாதலால், “அடர்ந்த வினை”யென்றும், வினைத்தொடர் பற்றாலன்றி உயிர்கட்கு உய்தியின்மை கண்டு ஞானமளித்து அத் தொடர்பை யறுத்தருளும் அருளுடைமை விளங்க, “வினையின் தொடக்கை யறுத்தருளும் அரசு” என்றும் கூறுகின்றார். இக் கருத்துப் பற்றியே மணிவாசகர், சிவனை, “ஞானவாள் ஏந்தும் ஐயர்” (திருவா) எனப் பாராட்டுகின்றனர். அலையுடைமை கடற்கு இயல்பாதலால், பாற்கடலை “அலைகடல்” எனக் குறிக்கின்றார். அலைகடல் மேல் கிடந்த பச்சைப் பெருமலை என்பது திருமாலுக்கு வெளிப்படை. ஆன்மாக்களின் அகமும் புறமும் கடந்து இன்ன தன்மையனென அறிய வொண்ணாதிருப்பதுபற்றி, “அகம் புறமும் கடந்த மலை” என்று சிவபிரானைப் பரவுகின்றார்.

     இதனால், மனம் வாக்குகளைக் கடந்து பொருள்களின் உள்ளும் புறமும் கலந்துயர்ந்து ஓங்கும் சிவனது பெருநிலையை நினைந்தவாறாம்.

     (5)